
நான் உன்னிடம் வெற்றுடம்பாய் வருகிறேன்
நீ உயிரூற்றி விடுகிறாய் என்
உணர்வோடுக் கலக்கிறாய்
நான் காட்டுவழிப்பயணம்
களைத்துப்போகுந் தருணம்
நீ காட்டுமல்லி இறைத்துச்செல்கிறாய்.
என் காலோடு கவிதைப்பேசுகிறாய்.
நான் பறவையானேன்
உறவுகளோடு உல்லாசித்திருக்கையில்
அங்கே ஆள்காட்டிப் பறவையாய் நீ.
ஒரே ஒரு மூக்குத்தி மினுக்கியபடி கேட்டேன்.
நீ ஓராயிரம் நட்சத்திரங்களை
நசுங்காமல் என் கைகளில் கொட்டிச்சென்றாய்.
பரவசத்தில் நான்.
நான் ஒற்றையடிப்பாதையில்
நடந்து போகையில், அமிழ்ந்தத் தடத்தில்,
நீ அமிழ்தம் நிறைத்தாய்,
என்னை அணைந்தே நடந்தாய்.
நான் வெட்டுக்கிளி .
என்னை வீட்டுக்கிளியாக்கினாய்
பேசிப்பேசி அலுத்துப்போகையில்
அழைத்து
ஒரு நெல்லைக் கொடுக்கிறாய்.
என்னைக்கிள்ளிக்கொடுக்கிறாய்.
நான் ஒரு விரல் அசைத்து
எதையோக் கேட்க நினைக்கிறேன்
நீ தூரத்து மலையை
உன் அன்பினால் நெம்புகிறாய்
தூக்கி வர யெனைப்பார்வையில்
கெஞ்சுகிறாய்
நான் வியர்வைத்துளியொன்றை
விசிறாமல் வீசுகிறேன்.
நீ ஓடிச்சென்று விழுந்தயிடத்தில்
விருட்சம் வளர்க்கிறாய்
அதில் விசிறி வீசுகிறாய்.
நீ வேராகி மேகம் நனைக்கிறாய்
நான் விழுதாகி
உன்னுள் விழுந்து போகிறேன்.
நீ என் மோட்சம்
உனக்குள்ளே தேவதைகளை
நிரப்பி வைத்து
என் தேவைகளை முடிக்கிறாய்
எனைத்தேனாக்கிகுடிக்கிறாய்.
நான் ஒரு நேசம் வேண்டுமென்றேன்.
நீ உன்னைக்குழந்தையாக்கி
என் மடியிலிடுகிறாய்
என் மனதைத் தடவுகிறாய்.
மார்பைச் சுரக்கவைக்கிறாய்.
யுகம்முடியும் கடைசி நொடியில்
உலகத்தின் தனியொருத்தியாய்
காத்துக்கிடந்தேன்.
நீ சிறகுகளுடன் பறந்துவந்தாய்
பக்கத்து யுகத்தில்
பக்குவமாய் இறக்கினாய்.
அங்கு நாம் மட்டும் தான்
ஆம் புதுயுகத்தின் ஆதாம் *நீ
ஏவாள் நான்.
காதலின் பழமொன்றை ருசிப்போம்
கவிதையாய் மீண்டும் உலகம் சமைப்போம்.
🌹
