
பவித்ரா அரவிந்த் தம்பதியர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்தில்தான் சுமதியின் கணவன் சுரேஷ் வேலை பார்த்து வந்தான்.இருவரும் ஒரே குடியிருப்பில் அடுத்து அடுத்த அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்ததால், சுமதி அடிக்கடி பவித்ரா வீட்டுக்கு வருவதுண்டு.
சுமதி வயதில் இளையவள்.அலங்காரம் செய்து கொள்வதில் அதிக ஈடுபாடு. நேர்மாறாக, அவள் கணவன் சுரேஷ், “பெண்கள் இயற்கை அழகுடன் இருக்க வேண்டும் ; அழகு நிலையம் செல்வது, அழகு சாதனங்களை உபயோகிப்பது _ இதெல்லாம் தவறானது”, என்ற எண்ணம் உள்ளவன்.
பொறியியல் பட்டதாரி ஆன அவன், வேலை கிடைத்த பிறகுதான் சென்னைக்கே வந்துள்ளான்.பெண்கள், வேலைக்குப் போனால், குடும்ப நலம் பாதிப்புறும் என்ற கொள்கை உடைய அவன் பட்டப் படிப்பை முடித்திருந்த சுமதியை வேலைக்கும் அனுப்பவில்லை.இதனால் அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பூசல் நிகழ்வதுண்டு.
சுமதி , அந்த ஐடி நிறுவனத்தில் வரவேற்பாளினியாக வேலை பார்க்கும் பவித்ரா, நேர்த்தியாக உடை அணிவதையும், லிப்ஸ்டிக், ஃபவுண்டேஷன் போன்றவை உபயோகித்து, தன்னை மேலும் எழிலாகக் காட்டிக் கொள்வதையும் இரசிப்பாள்.
சுரேஷ் வீட்டில் இல்லாத விடுமுறை நாட்களில், பவித்ரா வீட்டுக்குச் சென்று, அவளுடைய அழகுசாதனப் பொருட்களைக் கொண்டு, தன்னை அலங்கரித்துக் கொண்டு, பவித்ரா வீட்டு ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகை இரசித்து மகிழ்வாள்.அவன் வருவதற்குள் முகத்தை அலம்பி விடுவாள்.
பவித்ரா, சுரேஷிடம், “பெண்கள் அலங்காரம் செய்து கொள்வதில் தவறில்லை”, என்று கூறி சுமதியை அவள் விருப்பத்தின்படி வாழ விடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்காததால் விட்டு விட்டாள்.
இந்நிலையில் ஒருநாள் அந்தத் தம்பதியருக்குள் சண்டை அதிகமாகி, சுரேஷ் வெளியே சென்ற நேரம் சுமதி தற்கொலை செய்து கொண்டாள்
பவித்ரா, சுமதி அடிக்கடி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்த பெண் என்பதால் அவள் மறைவால் பெரும் அதிர்ச்சி அடைந்தாள்.
போலீஸ் விசாரணையால் மிகவும் வாட்டப்பட்ட சுரேஷ், அது தற்கொலை என்று நிரூபணம் ஆன பிறகு, வேலையை விட்டு விட்டு, தன் சொந்த ஊருக்கே போய்விட்டான்.
அன்று இரவு , ஏழுமணி அளவில், மொட்டை மாடியில், துணி எடுத்து வரச் சென்ற பவித்ரா, ஒரு வெள்ளை உருவம், உதடுகளில் லிப்ஸ்டிக் பூசி, முகம் முழுக்க வெள்ளையாக இருக்க , “வா வா”, என்று அழைப்பது போல் காற்றில் ஆடுவது போல் தெரிய, தலை தெறிக்க வீட்டுக்குள் ஓடி வந்தவள், கணவன் அரவிந்த்திடம், நடந்ததைக் கூற அவன் மேலே சென்று பார்த்து விட்டு, அது கீழ் வீட்டுத் தாத்தாவின் கொடியில் காயும் வெள்ளை வேஷ்டி என்று கூறி இவளைச் சமாதானம் செய்தான்.
ஆனால் ஒரு விஷயம் உறுத்தியது.பவித்ரா, திரும்பத் திரும்ப லிப்ஸ்டிக் போட்ட வெள்ளையான முகத்துடன் உருவம் என்றாளே!
இவனது மனநல மருத்துவனான நண்பன், நடந்த நிகழ்வைச் சொன்ன அரவிந்த்திடம் ,பவித்ரா , காற்றில் பறந்த வேஷ்டியுடன், சுமதியைப் பற்றிய நினைவினால் தோன்றிய கற்பனையைக் கலந்து விட்டாளென்றும், இது ஒருவிதமான மனநோய் என்றும்,முடிந்தால் அவளை , அப்பார்ட்மெண்ட்டை விட்டு வேறு ஏதாவது இடத்திற்கு வாழிடத்தை மாற்றும்படியும், வாய்ப்பிருந்தால், விடுமுறை எடுத்து வேறு எங்காவது இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும்படியும் ஃபோனில் கூற, அதைச் செயலாக்கும் முயற்சியில் இறங்கினான் அரவிந்த்.

திகிலும் உணர்ச்சியும் கலந்த விறுவிறுப்பான கதை