
இரவு மணி பன்னிரண்டு.
இரண்டாம் காட்சி “திகில் வீடு” படம் முடிந்து கதிரவனும் அவர் மகன் விஷ்வாவும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஒரு சிவப்பு நிறக்காரை தாண்டும் வேளை.. வேடிக்கை பார்த்து வந்த விஷ்வா ஒரு நொடி திகிலானான், “அப்பா.. யாருப்பா அது..?”
“எது டா..?”
“அந்தா ரோட்டுக்கு ஓரத்துல..வெள்ளை வெளேர்ன்னு.. மரப்பட்டை நிறத்துல கண்ணும்.. ரோஸ் நிறத்துல உதட்டோடயும்.. மூஞ்செல்லாம் கோடு கோடா..” பேசியவனின் தொண்டை அடைத்தது.
“பேய் படம் பாத்துட்டு வந்தாலே.. உன்னோட இதே ரோதனை தான்டா.. எல்லாம் கற்பனை தான். பேசாட்டுல வா.” கூறிய தனவந்தனின் கண்களுக்கும் இதழோரம் புன்னகை சிந்தி நின்ற ‘அவள்’ தெரிந்தாள். கண்டும் காணாதது போல அவசரமாய் அவளைக் கடந்து சென்றார். ‘பயத்தை காட்டாமல் கடந்தால், பேய் விரட்டாது’ என்று எவரோ சொன்ன நினைவு அவருக்கு.
கடந்து செல்லும் வரை இருவருக்கும் பனிக்காற்றைத் தாண்டி வியர்த்துக் கொட்டியது.
“சார்.. மேக்கப் போட்டுட்டு ரோட்டோரம் இன்னும் எவ்வளவு நேரம் நிக்கிறது. டிரைவர் வர இன்னும் எத்தனை நேரம் ஆகும்..?சிக்னல் வேற சரியா கிடைக்கல. சரி.. இப்போதைக்கு.. நான் நீங்க அனுப்புன சிவப்பு கார்ல உக்காந்துருப்பேன். சீக்கிரம் வரச் சொல்லுங்க” ரிப்பேராகி நின்ற அந்த சிவப்பு காரை நோக்கி விரைந்தாள் திகில் பட நாயகி வினயா.
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நானே வருவேன் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “சாந்திசந்திரசேகரன்/அவள்..!”
Comments are closed.