
“விழிகள் நட்சத்திரங்களை வருடினும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்! அப்படிங்கற மு.மேத்தா கவிதையைப் படிச்சிருக்கியா நீ ஸ்வேதா?” ஆனந்த் கேட்டபோது என் விழிகள் ஜன்னல் வழியே வான்வெளி விண்மீன்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.
“ம்! படித்திருக்கேன்! ஆனால் அதைப் படித்ததால இப்படி பார்க்கல!”
“இல்ல.. படிச்சுப் பிடிச்சுப் போய் பார்க்கற!”
“பிடிச்சிருக்கு தான். ஆனா அதனால மட்டும் பார்க்கல! என் இயலாமையால பார்க்கறேன்.”
“இயங்கிக் கொண்டிருந்தவள் தானே நீ? இயலாமை என்ன இயலாமை?”
“இயக்கம் நின்று போனா அது இயலாமை தானே?”
“இயக்கம் மிகுதியாய் இருந்தாலும் இருப்பது இல்லாதது போல் தோன்றும்.”
“இருப்பதே உங்கள் துணையோடு தானே! அதுவே என் இயலாமை!”
“ஸ்வேதா! நான் உன் கணவன். உனக்குச் செய்ய உரிமைப் பட்டவன். அதை உன் இயலாமையோடு சம்பந்தப் படுத்தாதே!”
“ஆனந்த்! என்னால் அந்த விபத்துக்குப் பின் நடக்க முடியாது. தெரியும் தானே. இந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஜன்னல் வழி உலகத்தைப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“என் ஸ்வேதா ஜன்னல் வழி பார்க்கப் பிறந்தவள் இல்லை. கதவு வழி வெளிச்சென்று களமிறங்கி சாதனை படைக்கப் பிறந்தவள். எடு உன் ஸ்டெதாஸ்கோப்பை. டாக்டருக்குப் படித்தும் உன் இயலாமையால் அதை இயக்காது துருப்பிடிக்க விடுவது கல்வித்துரோகம்.”
“சக்கர நாற்காலியில் போய்..”
“போய்? போனால் என்ன ஸ்வேதா? விபத்தில் புத்திக்கு ஒன்றும் ஆபத்தில்லையே! அது எத்தனை பேர் நோயைத் தீர்க்கும். உனக்கும் அந்த வானத்துக்குமான காதல் போராட்டத்தில் வெற்றி பெற்றது அந்த ஜன்னல் தான். பார்! அடிக்கும் காற்றில் அதுவே அதன் கதவை மூடிக் கொண்டது. உன்னை வாசல் வழி வந்து பார்க்கச் சொல்கிறது.”
ஆனந்தின் பேச்சில் என் நாற்காலி திசை மாறியது.
கதவு திறக்கும்.

Excellently crafted story by Mala Madhavan. Wonderful idea, aptly and expertly defined by superb sentences. மிகவும் உயர்வான கற்பனை. அதை ஒரு கதையாக வெளிக் கொணரும் பிரமாதமான வார்த்தைகள், வரிகள். நீங்க இதை ஏதாவது போட்டிக்கு அனுப்பி இருக்கலாம். கண்டிப்பா முதல் பரிசைத் தட்டிண்டு வந்திருக்கும். The best writing I read recently. பிரமிப்பா இருக்குமா. வாழ்த்துகள்
மிகவும் வித்தியாசமான, நேர்மறை உணர்வைத் தூண்டும் கதை. வாழ்த்துக்கள்!