
டெலிபோன் சிணுங்கியது. கையிலெடுத்தாள் நீலா. மறுமுனையில் டைரக்டர் வினோத்!
“சாரி நீலா! தெரியாத்தனமா தப்பு நடந்து போச்சு. தயவு செய்து நீ ஃபீல்டுல தை மறந்து மன்னிக்கணும். இந்த இருபது வருஷ சர்வீஸ் போட்டவன் சொல்றேன். இதெல்லாம் இங்க ரொம்ப சகஜம். ப்ளீஸ் செட்டுக்கு புறப்பட்டு வா. எல்லோரும் வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க…”
நீலா பட்டென்று போனை வைத்தாள். ஆசுவாசிப் போடு சோபாவில் மல்லாந்தாள். தழையத் தழைய நீலப் புடவை கட்டியிருந்தாள். மார்பை சிக்கென்று இறுக்கி, கன்னிமைக்கு வழிசல் தரும் ரவிக்கையும் நீலம். கூந்தலின் பின்னலினை பிணைத்து நிற்கும் ரிப்பனின் நிறம் கூட நீலத்தில் இருந்தது. நெற்றியின் பொட்டு கூட நானும்தான் எழில் நீலம் என்று ஜொலித்தது. படுபொருத்தமாய் பெயர் கூட நீலா!
ஆனால், ஆனால்… விழிகள் இரண்டு ஆனால், மட்டும் எதிரணியில் சிவந்து போய் இருந்தது. மனதோ அரவிந்தை காகிதமாய் நினைத்தபோது கிழித்து போட்டது கண்ணாடியாய் நினைத்தபோதோ உடைத்துப் பார்த்தது.
“இடியட், பாஸ்டர்ட், பொம்பளை பொறுக்கி…” அடக்க மாட்டாத கறுவலுக்கு நடுவில், நடந்து முடிந்து பொடிந்த அந்த சம்பவம் அவள் நினைவைத் திரும்பத் திரும்பத் தாக்கியது… திரும்பத் திரும்பத் தாக்கியது!
‘ஆக்ஷன் ரெடி, ஸ்டார்ட் காமிரா…” – சினிமா உலகின் சிரஞ்சீவி டைரக்டர் வினோத் குரல் கொடுக்கிறார். காமிராமேன் ஆண்ட்டோ ஜோதிமணியின் ஆபரேடிங் காமிராமேன் அருண் ட்ராலியில் காமிரா சகிதம் நகர அவுட்டோரின் தகரரிப் பௌக்டர்கள் சூரியனைப் பார்க்கின்றன!
எதிர் விளைவாக வெளிச்சக் கற்றைகள் புல்வெளி மேல் இணைந்த நிலையில் – நீலா’ காதல் கிடக்கும் ‘அர்விந்த் ஜோடியின் மேல் விழ டேப் பாடியது. நீலா உதட்டை மட்டும் அசைக்கிறாள்.
‘கூச்சமில்லாம நெருங்கி நடிக்கணும் மிஸ்டர் அர்விந்த். நீங்க இரண்டு பேரும் கதைப்படி, கதாநாயகி காணும் கனவுப்படி காலேஜ் ஸ்டூடன்ஸ்! இந்த காலத்து ஸ்டூடன்சை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. மிச்சத்தை நீங்க பார்த்துக்குங்க…”
ஷாட் தொடங்கும் முன் டைரக்டர் வினோத் கூறியதை அதி தீவிரமாக செயல்படுத்தினான் அர்விந்த். கைகள் சகட்டு மேனிக்கு அவளது மேனி மேல் விளையாடியது. நடிப்புக்கு நடுவில் வெடிப்புக்குள்ளானாள். நீலா! ஒரு அணைப்பின் போது மார்பை வலிக்கு மட்டும் பிடித்து கிளுகிளுப்பானான் அர்விந்த்.
‘வசமாக சிக்கினாயா மயிலே… விடுவேனா உன்னை… விடுவேனா உன்னை’ – அவன் நினைப்பில் கிளுகிளுப்புக்கு நடுவிலும் ஏகதாளம்.
ஓடிக் கொண்டிருக்கும் கேமிரா முன்னால் கரையும் தனது பெண்மைக்கு வேகம் தேடினாள் நீலா. இடையில் இருந்த அர்விந்தின் கை அனாவசியமாக கீழிறங்கியபோது யூனிட்டுக்கே மின்சாரம் பாய்ந்தது. ஒதுக்கலாய் ஒரு வில்ஸ் பில்டரிடம் தன்னை அடகுவைத்திருந்த தயாரிப்பாளர் காட்சி எதிர்பார்ப்புக்கு மேல் கரைபுரள்வது பார்த்து குவியப்போகும் கரன்சி மழையில் நனைந்தபோது – பளார்! பளார்!! பளார்!!!
அர்விந்த் செக்கச் சிவந்த கன்னத்தோடு, ஆப்பிள் பழத்திற்கு போட்டியாக நின்றான்! நீலா எரிமலையின் வாரிசாக அவன் சட்டையைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினாள்.
எப்படா “ஏண்டா, இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்திருந்தாயா? எச்சிலை நாயே… நீயெல்லாம் ஒரு ஊர் மெச்சற சூப்பர் ஸ்டார் தூ…”
விதிர்த்த வினோத் புரிந்து கொண்டு வேகமாகி ஊடே புகுந்தும் பலனில்லை. மளமளவென்று நழுவி விட்டது. நீலாவின் நீல செவர்லேட்! வினோத் போனில் சமாதானித்தும் அடங்க மாட்டேன் என்கிறது.
“என்ன அர்விந்த் இப்படியா நடந்துக்கறது?” வினோத்தின் வினாவை தூசுக்குச் சமமாய் எதிர் கொண்டான் அர்விந்த்.
“என்ன சார்… யார் கிட்ட பேசறோம்கிறத மறந்துட்டீங் களா?” இந்த ஃபீல்டுல எவர் கிரீன் ஹீரோவா நிக்கறவன் நான் எந்த காட்சியில் எப்படி நடிக்கணும்னு எனக்குத் தெரியும். அவ நிமிர் பிடிச்சு ஆடினா அதுக்கு நான் பொறுப்பா? அடிச்சதுமில்லாம கால்ஷீட்டை வேற ஸ்பாயில் பண்ணிட்டு போயிருக்கா. திரும்ப வந்து கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கலைன்னா ஒரு ஃபிரேம் கூட என்னை வெச்சு இனி நீங்க எடுக்க முடியாது. ஜாக்ரதை…”
அதைக் கேட்ட தயாரிப்பாளரின் வயிறு நண்டு வளையானது. உடம்பில் பாய்ந்த அதிர்ச்சி மின்சாரத்தோடு வினோத்தின் கைகளைப் பிடித்து ‘எப்படியாவது சரி செய்… இல்லைன்னா என் உடம்பு நடுவீதிக்கு போய்விடும். கைகளுக்கு கப்பரை வந்துவிடும்…’ – என்று பார்வையாலேயே கெஞ்சினார்.
வினோத் தனது நாற்காலியில் தேகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அர்விந்தை குறைக்காமல் முறைத்தார். அவன் அலட்சியத்தில் டிப்ளமோ வாங்கினவனாட்டம் புல்லைப் பிடுங்கி அதன் உடம்பை நறுக் நறுக்கென்று கிள்ளிக் கொண்டிருந்தான். அவளை அனுபவிக்க செய்த நாசூக்கான முயற்சிகளை, அதன் தோல்விகளை மனது அசை போட்டுக் கொண்டிருந்தது.
போன மாதம்தான் அவனது ரசிகர்கள் அவனது நூறாவது படத்தை நூறு நாளைக்கு பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தார்கள். பத்து பவுனில் அரசாங்கம் கூட அவனது சாதனைக்கு ஒரு பதக்கத்தை வழங்கியிருந்தது. அந்த பதக்கம் அவன் திறந்த மார்பு வழியாக வினோத்தை பார்த்து சிரித்தது?
“கோபப்படாதே அப்பனே… நியாயம் பார்க்காதே… இல்லையோ தீர்ந்தாய்! இவன் இப்படித்தான். இவனிடம்தான்
இப்பொழுது சுக்ரன் தனது பரிவாரங்களோடு தங்கியிருக் கிறான். பணிந்து போ, கபர்தார்…” என்று எச்சரித்தது.
வினோத் எழுந்திருந்து அர்விந்தை நெருங்கினார். “நீலா ஒரு டைப். கொஞ்சம் செண்டிமெண்டலான சென்சிடிவ் பொண்ணுகூட. நாமதான் அர்விந்த் அட்ஜஸ் பண்ணனும்.” அர்விந்த் நிமிர்ந்தான்.
“யாரை யார் சார் அட்ஜஸ் பண்றது?”
“அர்விந்த், ஹீரோவுல நீங்க சூப்பர்னா, ஹீரோயின்ல இப்போதைக்கு அவங்கதான் சூப்பர் ஸ்டார்.
உங்க காம்பினேஷன் ஒரு பிரமாதமான விஷயம். வயசுல பெரியவன் சொல்றேன். பழைய நிலைக்கு திரும்புங்க. எல்லார்க்கும் அதுதான் நல்லது. இல்லைன்னா லட்சக் கணக்குல நஷ்டம் மட்டுமில்ல, நம்ம சர்வீஸ்ல இந்த நிகழ்ச்சி ஒரு பிளாக்மார்க் ஆயிடும்…”
அர்விந்திடம் இறுக்கம் மெல்ல தளர்ந்தது.
“இந்த ஃபீல்டுல என்னை அட்ஜஸ் பண்ணாத ஒரே நடிகை இவதான். அதை கூட பெரிசா எடுத்துக்காம அட்ஜஸ் பண்ணித்தான் நடிக்கிறேன். இதுக்கு மேல எப்படி சார் அட்ஜஸ் பண்றது?”
“உங்க அட்ஜஸ்மெண்ட்டுக்கு அர்த்தம்?”
“என்கிட்ட சிரிச்சு ஸ்னேகமா பழகினா என்ன…?”
‘அது அவங்க விருப்பத்த பொருத்தது. எதிர்பார்க்கறது தப்பு.’
“சரி என்ன பண்ணச் சொல்றீங்க?”
“பழைய ஒத்துழைப்பு வேணும். பகை கூடாது.
அர்விந்த் மவுனத்தில் சம்மதத்தை வைத்தான். தயாரிப்பாளரின் சுவாசப்பையில் அடங்கி இருந்த உஷ்ணம் உதிர்ந்தது. மீண்டும் அங்கே பனி! வினோத் ஆர்வத்தோடு மறுபடியும் டெலிபோனைத் தொட்டார். பலனில்லை.
“நேர்ல போவோம்…” – வினோத்.
”கால்லையே கூட விழுவோம்…” – தயாரிப்பாளர்.
‘அண்ணே…” – அர்விந்தின் ஜால்ரா அழைத்த அழைப்பில் ஒரு கடூரம் இருந்தது.
“என்னடா?” அர்விந்த்.
“அவ இன்னும் வீம்புலதான் இருக்காளாம். உங்களை தாறுமாறா வெச்சு கிழிக்கறாளாம் எல்லாம் நீங்க கொடுத்த
இடம்.
………….அர்விந்த்.
‘சினிமா நடிகைன்னா அவ ஒண்ணும் தேவடியா இல்லை. இத அவன்கிட்ட சொல்லுங்க. நடிப்புங்கறது புனிதமான விஷயம். இப்படிக் கொச்சைப் படுத்தறவங்களை தீயில வெச்சு பொசுக்கணும். சுடணும், வெட்டணும்னு…”
அர்விந்த் இடைவெட்டினான். தொண்டைப்பாலம் எரிந்து நனைய ஹேவார்ட்ஸை ப்ளக் ப்ளக் என்று , குடித்துவிட்டு, “அவளை ஃபீல்ட் அவுட் பண்றேன். அவளை வாஷ் அவுட் பண்றேன். அதுக்கு முந்தி அவளை என்ன பண்றேன் பார்…” கத்தினான்.
தொலைபேசி சிணுங்கி அவனை அழைத்தது. அழைத்தவர் அர்விந்துக்கு இனிய புரொடக்ஷன் மானேஜர்.
“சார் நாளைக்கு சேட் பங்களாவுல ஷூட்டிங்! – க்ளை மாக்ஸ் ஷாட். ஒன்பதுக்கெல்லாம் வந்துடச் சொன்னாங்க…”
“நீலா படிஞ்சுட்டாளா?” – அர்விந்த்.
“தயரிப்பாளர் காலைப் பிடிச்சு கதறி அழுதாரா. ஒத்துக்கிட்டிருக்கா.”
“திமிர் பிடிச்ச கழுதை. ஷூட்டிங் முடியட்டும். அவளை வாட்டி எடுத்துடறேன்…”
“சார் அதெல்லாம் வேண்டாம். நாளைக்கு ஷூட்டிங் நல்லபடியா முடிஞ்சா போதும். நீங்க மட்டும் பார்த்து நடந்துக்குங்க. தப்பு உங்க பேர்லதான்னு எல்லாரும் அபிப்ராயப்படறாங்க. வேற வழியில்லாமதான் பணிஞ்சு போறாங்க. இத நான் சொன் னேன்னு வருத்தப்பட . வேணாம். சொன்னேன்னும் வெளிய சொல்லிடாதீங்க. அப்புறம் எனக்கு ஆபத்து…
“நான் பார்த்துக்கறேன். போனை வைய்யா…”
செட் பரபரப்போடு காணப்பட்டது. வசன கர்த்தாவும், டைரக்டரும் வசனம் ரொம்ப நீளம் என்று அபிப்பிராயப்பட்டு சுருக்கிக் கொண்டிருந்தார்கள். காமிராமேன் ஆண்ட்டோ ஜோதிமணி தனது காமிராவில் புதைந்திருந்தார். அடிக்கடி ஷேட் லைட்டை திருப்பி மீட்டர் பார்த்து, லென்ஸை மாற்றி கொண்டு எர்ர்ரி ஃபிளக்ஸ் காமிராவோடு உறவாடிக் கொண்டிருக்க உதவியாளன் அவரை ‘ஆப்சர்வ்’ பண்ணிக் கொண்டு எடுபிடித்தனமாக இருந்தான்.
தயாரிப்பாளரின் வயிற்றில் இலேசாக குடைச்சல்.
“கவலைப்படாதீங்க. இவங்களைக் கொண்டு 600 அடி படம் பண்ணிட்டா தொல்லை விட்டுது. அது வரைக்கும் காலைப் பிடின்னாலும் பிடிச்சுதான் தீரணும்…”
வினோத்தின் தெம்பான பேச்சு ஒன்றுதான் குடைச்சல் மருந்தாக இருந்தது. ‘மாங்காட்டு காமாட்சி… ஆயிரம் எலுமிச்சம் பழத்தால மாலை செஞ்சுபோடறேன். இன்னிக்கு பொழுது ஒழுங்கா கழியணும்மா…?’ மருகோமருகு என்று மருகிக் கொண்டிருந்தார்.
நீலா வந்தாள்!
சகல விழிகளும் அவளிடம் நிலை குத்தின.
அர்விந்த் வந்தான்… நீலாவை தினுசாகப் பார்த்தான். அவள் ஒப்பனைப் பெண்ணிடம் முகம் கொடுத்திருந்தாள். அசோசியேட் டைரக்டர் இப்பொழுது அர்விந்தை அறுத்துக் கொண்டிருந்தார். அறுவையில் ‘தாஜா’ வழிந்தது.
‘இந்த படம் உங்க அளவில மாஸ்டர்பீஸ் சார்! சூப்பர்ஹிட் ஆவும்னு டிஸ்ட்ரிபியூட்டருங்க பேசிக்கிறாங்க…”
அர்விந்திடம் மிடுக்கான புன்னகை. மிதப்பாக கேட்டான்.
“இன்னிக்கு என்னய்யா சீன்?”
“ரேப் சீன் சார்…” – அர்விந்தின் புருவம் அதைக் கேட்டு சுணங்கியது.
“விபரமாச் சொல்லு…”
“நீலாம்மாவை நீங்க…’
“அம்மா என்னய்யா அம்மா? ‘அவ’ன்னு சொல்லு…
வேகமாக இடைவெட்டினான் அர்விந்த். அசோசியேட் முகம் மழைவானமாகி வழிந்தது. திக்கித்திணறி தொடர்ந்தார்.
‘அதாவது காலேஜ் லேபரட்ரில நீலாம்மா சோதனை பண்ணிகிட்டிருக்காங்க. நீங்க அங்க போய் அவங்களை கெடுக்கப் பார்க்கறீங்க. அவங்க தப்பி ஓடுறாங்க. நீங்க துரத்தி கட்டிப்பிடிச்சு…”
அசோசியேட் முடிக்கு முன்னர் வேகமாக இடைவெட்டினான் அர்விந்த்.
“கட்டிப் பிடிச்சு கெடுத்துடறேன். அவ்ளோதானே! செஞ்சுட்டா போச்சு.”
“ஐய்யய்யோ… கெடுத்துடலை. கெடுக்க முயற்சி பண்ணும்போது நீலாம்மா திராவகத்தை எடுத்து உங்க முகம் மேல வீசிட்றாங்க. நீங்க துடிக்கறதை ஸ்லோமோஷன்ல காட்டி, அப்படியே நீலாம்மாவை தலைவிரி கோலத்துல காட்டி இவளும் கூட கண்ணகிதான்னு சப்டைட்டில் போடப் போறோம்!”
- சொல்லி முடித்த அசோசியேட்டின் முகத்தில் புரியாத கலவர பயம். அர்விந்தின் மனம் நீலாவை துரத்தி கெடுக்கும் காட்சியில லயித்து விட்டிருந்தது.
‘திமிர் பிடிச்சவளே… இன்னிக்கு உன்னை என்ன பண்றேன் பார்…”
காட்சி படமாக்கப்பட்டபோது அர்விந்த் நினைத்த படியே நீலாவை துரத்தி இழுத்து அணைத்து கசக்க, அவள் நடிப்பென்று கருதித் துடிக்க, நிஜத்தில் அவன் அவளது மென்மை வளங்களைத் தொட்டுக் கசக்கினான்.
அவளுக்குள், வெட்கத்திலும், கோபத்திலும் நரம்புகள் அறுபட்டன. ஆண்ட்டோ ஜோதிமணி பதறிப் போனார். வினோத் விழிகள் கூட சிவந்து விட்டன.
“கட்…’ அவர் கத்திய கத்தலில் செட்டில் மயான அமைதி. கட்டி அணைத்த நிலையிலிருந்து நீலாவிடமிருந்து மெல்ல விலகினான் அர்விந்த்.
“ஓவர் மிஸ்டர் அர்விந்த். லேசா தொட்டு நடிச்சா போதும்…” – வினோத் கடுமையோடு இதழ்களைப் பிரித்தார்.
“காட்சிகளோடு காட்சியா ஒன்றிட்டேன். உணர்ச்சி பூர்வமாக நடிக்கறது தப்பா?” – அர்விந்த்.
இதற்குள் உதவியாளன் போலி திராவக பாட்டிலை ஒரு டேபிள் மேல் கொண்டு வைத்து அதை நீலா எப்படி எடுத்து எறிய வேண்டும் என்பதற்காக ரிகர்சலை செய்து கொண் டிருந்தான்.
நீலா இறுகிப் போயிருந்தாள். எதுவும் அவள் காதில் ஏறவில்லை. மனது மட்டும்ஒரு முடிவுக்கு வந்துவிட்ட வெறியில் நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
உதவியாளன் வினோத்தை நெருங்கினான்.
“சார் போலி திராவக பாட்டிலை வெச்சு ரிகர்சல் பார்த்தாச்சு. அசல் திராவகம் அந்த கண்ணாடி ஷெல்ப்புல இருக்கு. ஷாட் முடிஞ்ச பிறகு அசல் திராவகத்தை, குளோசப்புல எடுத்துக்கலாம். அத்தோட கறித்துண்டு மேல அதை ஊத்தி, அது கொடூரமா சதையை எப்படி எறிக்குதுங்கறதையும் ஷூட் பண்ணி அதோட குணத்தை கதாநாயகி நீலாம்மா தெரிஞ்சுக்கிற மாதிரியும் ஷூட் பண்ணிடலாம். அந்த ஷாட்தான் சார் பாக்கி…
அசல் லேபரெட்டரிபோல் தோற்றமளித்த செட்டில் கல்லூரி லேபரட்டரிக்குரிய அத்தனை பொருட்களும் மின்னின. வாடகை பௌதிக தராசு ஒன்று அனைவரையும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.
பக்கத்தில் நீலா.
‘ஷாட் ரெடி” – அர்விந்த்.
இப்பொழுது நீலா ஓட, அர்விந்த் விரட்ட, அதோ அர்விந்த் நீலாவின் ரவிக்கையை நிஜமாலுமே கிழிக்கிறான்! பிரா கூட வார் அறுந்து கீழே விழுகிறது. மொழுமொழுப்பான சதை பந்துகள் மேல் அர்விந்த் கை வைக்க செல்ல, காட்சிப்படி நீலா போலி திராவக பாட்டிலை எடுக்காமல் மாறி கண்ணாடி ஷெல்ப்பை நோக்கி ஓடினாள்.
வெறியில் கலந்து விட்டிருந்த அர்விந்துக்கு எதுவுமே பிடிபடவில்லை. ஸ்தம்பித்து விட்டிருந்த யூனிட் மின்சார தாக்குதலுக்கு ஆளாகிவிட்டது போல் நிற்க, மூடியிருந்த கண்ணாடி ஷெல்ப் உடைகிறது!
திராவகமும், மஞ்சள் பாஸ்வரமும் தங்கி இருந்த பாட்டில்களை வெறியோடு எடுத்து தன் மேல் பாயும் அர்விந்த் மேல நீலா விசிறுகிறாள்!!
நிஜமாலுமே முகம் வெந்து, விழி எரிச்சலோடு தரையில் விழுந்து நெளிகிறான் அர்விந்த். அவனது அலறலில் அந்த பிராந்தியமே நடுங்குகிறது.
படுவேகமாக ஓடும் காமிரா கூச்சமின்றி அந்தக் காட்சியைப் பதிவெடுக்கிறது.
நீலாவின் மூச்சுக் குழலில் மெல்ல வெறி விலகி, அமைதி படிய ஆரம்பித்தது. ஓடி வந்த வினோத் “என்னம்மா இப்படி பண்ணிட்டியே” கத்தியே விட்டார். வெட்கத்தோடு மார்பை மூடிய வண்ணம் பேசினாள் நீலா:
“காட்சியோடு காட்சியா ஒன்றிட்டேன். உணர்ச்சி பூர்வமாக நடிக்கறது தப்பா சார்?”
அந்தக் கேள்வியின் பளு தாளாமல் அனைவர் தலையும் கூட கவிழ்ந்தது.
தேவி
13.2.85

One Comment on “இந்திரா சௌந்தர்ராஜனன்/ நீல நீலா சிவப்பாகிறாள்”
Comments are closed.