
அந்தக் கல்யாண ரிசப்ஷன் நன்றாகக் களைகட்டி விட்டிருந்தது. குடும்ப வழக்கம் என்று அவன் தனது கல்யாணத்தைத் திருப்பதியில் வைத்துக் கொண்டமையால் அவ்வளவு தொலைவு போய்த்
தலையைக் காட்டி அட்சதையை அள்ளிப் போட்டுவிட்டு வர வழியில்லாத அவனது ஆபீஸ் ஊழியர்கள் ‘ஜே, ஜே’ என்று ஹால் முழுக்கத் திரண்டு வந்திருந்தார்கள்.
“பய நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கான்…
“போடா டேய்; இவன் உயரத்துக்குப் பொண்ணு ஆனாலும் குட்டை; இதைப் போய் நல்ல செலக்ஷன்கிறியே…?”
“எங்கடா கண்ணா உன் ஆளு? உன் பாறை மூஞ்சிக்கு உனக்கு வாச்சிருக்கறவ ரோஜாப் பூடா…
“ஆளாளுக்கு அபிப்பிராய ஊஞ்சலில் மிக்சரையும் காரா சேவையும் கொறித்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். ஏறத்தாழ எல்லோருமே தம்பதி சமேதராய் வந்திருந்தனர். சந்துரு மட்டும் விதி விலக்காய்ச் சாமை வயலின் தனிக் கதிர்போல ஓரம் கட்டி ஒதுங்கியிருந்தான்.
எங்கே யாராவது வந்து, ‘உன் மனைவியை ஏண்டா அழைச்சுக்கிட்டு வரலை?’ என்று கேட்டுவிடுவார்களோ என்னும் தயக்கத்தில் முகமே இலேசாய் வெளிறிவிட்டிருந்தது.
‘குப்’பென்று பரவிய அந்த சோகத்தில் இதயம் ஏழெட்டு மடங்கு திடீரென்று பெரிதாக வளர்ந்து மார்புப் புறம் கனப்பதுபோல் பிரமை தட்டியது சந்துருவுக்கு. மௌனமாய் நண்பர்களிடையே சிரித்து மழுங்கலாய் ஒப்பேற்றிவிட்டு வீடு திரும்பும்போது அழுகை வரட்டுமா என்று கேட்டது.
அப்படியே அந்த அழுகை ரிவர்சில் திரும்பி வனஜா பக்கம் பாய்ந்தது.
‘உனக்கு மட்டும் ஒரு கால் ஊனமில்லாமல் இருந்திருந்தால் எனக்கு இன்று இப்படி ஒரு கறுப்பி பெண்டாட்டியாயிருப்பாளா? எல்லாம் என் விதி…’
நினைப்போடு குமுறிக்கொண்டே வீட்டுப்படி ஏறியவனைக் காத்திருந்த தோரணை கலையாமல் வரவேற்றாள் பார்வதி. ஓடிப் போய்க் காப்பி எடுத்து வந்து நீட்டினாள். ஷூவை அவிழ்க்கட்டுமா என்பதுபோல் பாவனை காட்டினாள். அவன் எதையும் லட்சியம் செய்யவில்லை. அவள் நீட்டிய காப்பியைக் கைகளால் கூடத் தொடவில்லை.
ஷூக்களைத் தானே கழற்றி எறிந்துவிட்டு மளமள வென்று தனது அறைக்குள்ளே நுழைந்து கதவைத் தாழ் போட்டுக் கொண்டான். அதைப் பார்த்த ராகவனுக்கும் லட்சுமிக்கும் வழக்கம்போல் உதைப்பெடுத்தது. அவர்கள் வாட்டத்தோடு பார்வதியைப் பார்த்தபோது அவள் கதி கலங்கியவளாய் வெறித்து விட்டிருந்தாள்.
இருவருக்கும் கல்யாணமாகி ஆறுமாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. சந்துருவின் ஸ்பரிசம் இன்னும் அவள்மேல்
படவேயில்லை என்னும் அந்த முக்கியமான விஷயம் முதல் நாளது வரை, அவளை அவன் ஏறெடுத்துப் பார்த்து, ‘இதுதான் அன்பு’ எனும்படியாக ஒரு வார்த்தை கூடப் பேசியிராத கொடுமை அந்த வெறிப்பில் கொடி கட்டிப் பறந்து
கொண்டிருந்தது.
லட்சுமி அப்படியே நொறுங்கிப் போய் நின்றபோது லொக், லொக்’ என்று அவளது பழைய ‘டி.பி. ‘யை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்த இருமல் நிற்காமல் ‘
தொடர்ந்தது. ராகவன் அதைக் கேட்கச் சகியாத வராட்டம் காதைப் பொத்திக் கொண்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டார்.
‘ஒரேயடியா இருமாதே சனியனே… செத்து ஒழி!” கத்தினார். இந்தச் சப்தம் சந்துருவுக்கும் கேட்டிருக்க வேண்டும். அறைக் கதவை திறந்து கொண்டு ஆச்சரியத்துடன் எட்டிப் பார்த்தான். ஒரு பக்கம் மனைவி பார்வதியின் வதங்கிய முகம் என்றால் அதோடு போட்டிக்கு நின்றது லட்சமியின் முகம். ஊடே அது இடைவிடாமல் இருமித் தள்ளியது.
ராகவனின் சிரம் நிமிர்ந்து லட்சுமியைப் பார்த்தது.
‘வரவர இந்த வீட்டுல நிம்மதியே இல்லாமப் போயிடிச்சு…” – புலம்பிக்கொண்டே எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தார்.
கடைத் தெருவில் கறிகாய் வாங்கிக் கொண்டிருந்தாள் ம் வனஜா. அவளை அங்கே எதிர்பாராத விதமாகப் பார்த்த ராகவனுக்குள் மகிழ்ச்சி, ஆச்சரியம் இரண்டுமே வந்து மோதியது. மகளிடம் வாஞ்சையுடன் நெருங்கினார்
“என்னம்மா வனஜா, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்?”
நிஜமாலுமே கரிசனத்துடன் கேள்வி வேறு. வனஜாவுக்குக் கேள்வியோடு அப்பாவைப் பார்க்கக் கொஞ்சம் பரவசமாய் இருந்தது.
“வாங்கப்பா… அவரும் வந்துருக்காரு’ பொழுதுதான் வனஜாவுடன் மாப்பிள்ளையும் வந்திருப்பது தெரிந்தது. வந்த மாப்பிள்ளை ஸ்கூட்டருடன் சற்றுத் தள்ளி ஒரு
நண்பனுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மாறாத கரிசனத்துடன் வனஜாவைப் பார்த்தார்.
“அவர் என்னை நடக்கவே விடறதில்லை. நான்தான் அவரை ஏமாத்திவிட்டு இப்படி எல்லாம் நடந்துக்கறேன். ஒரு நொண்டியைக் கட்டிக்கிட்டதால எவ்வளவு சிரமம் பாருன்னு அவர் நினைச்சுடக் கூடாது பாருங்க…?”
அந்தக் கேள்வியின் நியாயம் ராகவனுக்குள் பரவிய போது மோகன் மாப்பிள்ளை நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு ராகவனை நெருங்கியிருந்தான்.
“வாங்க மாமா…” என்று பணிவாய் வரவேற்றான் மிதப்பாய் நிமிர்ந்த ராகவனை அவனுடைய அடுத்த கேள்வி இடித்தது. “பார்வதி நல்லா இருக்காளா மாமா? விசேஷம் ஏதாவது உண்டா?”
மழுப்பலாய்ச் சிரித்து அந்தக் கேள்விக்குப் பொய்யாய் எதை எதையோ சொல்லிச் சமாளித்தார் ராகவன்.
“வீட்டுக்கு வந்துட்டுப் போங்க…” இது மாப்பிள்ளை மோகன்.
“உள்ளூர்தானே மாப்பிள்ளை. சாவகாசமாக வரேன்…” – இது ராகவன்.
நீங்க போங்க
அவர்கள் போய்விட்டார்கள், ஒரு குறையுமில்லாத சந்தோஷமான தம்பதிகளாக. விதி வசத்தால் உடம்பில் ஊனமிருந்தும் உள்ளத்தில் அது இல்லாததால் புயல் வந்தால்கூட அது தென்றலாய் உருமாறி வீசும் பாங்கில் அவர்களைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் பார்வதி?
நினைக்கவே நெஞ்சு கனத்துப் போனது ராகவனுக்கு முள்மேல் நிற்கிற மாதிரியும், சாட்சிக் கூண்டில் குற்றவாளியாகக் கைகட்டி நிற்கிற மாதிரியும் மனக்கண் தோற்றங்கள் மத்தாப்புக் கொளுத்திப் போட்டன.
வாஸ்தவத்தில் பார்வதியின் வீட்டு வாசலில் கைகட்டிப் போய் நின்றது முதலில் ராகவன்தான். ஒரு கால் ஊனமான பெண் என்பதால் ‘கல்யாணம்’ என்பது வனஜாவின் வாழ்க்கையில் இல்லாமலே போய்விடுமோ என்னும்படியான
சூழ்நிலையில் மோகன் அப்பொழுது (இப்பொழுதும்) ஒரு விளக்காய்த்தான் தெரிந்தான்.
தனக்கு வனஜாவை திருமணம் செய்து கொள்வதில் ஆட்சேபணையில்லை. ஆனால்… என்று தன் தங்கை பார்வதியைக் காட்டியபோதுதான் கொஞ்சம் தடுமாறியது ராகவனின் நெஞ்சம்.
“என் தங்கையும் உங்க பெண் மாதிரிதான். இயற்கை யால் சபிக்கப்பட்டவ. இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்த பிறகுதான் என் கல்யாணம். அது வரைக்கும் பொறுக்க முடியுமா?” என்று கேட்டான்.
‘எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் ஊனமான பெண்ணைக் கட்டிக் கொள்ள ஒரு ஆண் பிள்ளை தயாராய் இருக்கும்பொழுது அவன் தரப்பு ஊனத்துக்கு ஒரு வழி காட்ட நமக்குத்தான் வக்கில்லையா?’ ராகவன் கேள்வியோடு நெகிழ்ந்து போய் வீடு திரும்பி சந்துருவை இடித்தார்.
“நீ அந்தப் பெண்ணைக் கட்டிக்கத்தான் வேணும்” – நிர்ப்பந்தித்தார். கல்யாண விஷயத்தில் ஈஸ்ட்மென் கலர் கனவுகளில் ரீல் ரீலாய் நீந்திக் கொண்டிருந்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“உன்கிட்ட சீர் கேட்கலை. செலவுக்குப் பணம் கேட்கலை. விசாலமான மனசைக் கேட்கிறேன். அதுவும் உன் சகோதரிக்காக! அவளுக்கு வாழ்க்கை கொடுக்க ஒரு நல்லவன் தயாராயிருக்கான். அவனுக்கு நன்றி காட்ட வேண்டியது நம்ம கடமை மட்டுமல்ல. கட்டாயமும்கூட.
ஒரு பெண் கல்யாணமாகாமே இருந்தா எவ்வளவு ஏச்சுப் பேச்சு, மனவருத்தம், கஷ்டம்கறதெல்லாம் உன் தங்கையால நாம அணு அணுவா அனுபவிச்சிருக்கோம். இந்தக் கஷ்டம் இன்னொருத்தர் படவிடலாமா? உன் எதிர்பார்ப்பைக் கொஞ்சம் தியாகம் செய்; எல்லாருக்கும் நல்லது. சரீர சம்பந்தமான எதிர்பார்ப்புக்களுக்கு ஆயுள் ரொம்பக் கம்மி சந்துரு. கடைசி வரையிலும் ஒன்றி வாழப் போறது மனசும் அது காட்டற அன்பும்தான்… ப்ளீஸ்…”
கடைசியில் பார்வதிக்குச் சந்துருவைக் கொடுத்தும், வனஜாவுக்கு மோகனைக் கொடுத்தும் இரு தரப்புச் சிக்கல்
முடிச்சும் அவிழ்க்கப்பட்டு மனிதாபிமானக் கொடி உயரப் பறந்தது. ஆனால் அது தன் வீட்டில் மட்டும் அரைக் கம்பத்தில் பறக்கும் கொடுமைக்கு எங்கு போய் முட்டிக் கொள்ள?
மோகனும், அவன் தாய் தந்தையரும் கேட்கும் போதெல்லாம் எவ்வளவுதான் பொய் சொல்லுவது? அந்தப் பெண்ணுக்கும் உயர்ந்த மனம்.
நாளது வரையில் ஒரு குற்றம் குறையைக்கூடத் தன் வீட்டாரிடம் கூறி அவள் புலம்பவேயில்லையே…!
வீடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களாய் ராகவனும் லட்சுமியும் ‘வள், வள்’ என்று எரிந்து விழுந்தவன் எதிரொலிக்கு அன்று ஒரு முடிவு ஏற்படும் போல் தோன்றுகிறது.
நடுக்கூடத்தில் சந்துருவையும், லட்சுமியையும் இழுத்து வைத்து நிறுத்திக் கொண்டு, தனக்குப் பக்கத்தில் பால்ய சினேகிதர் அருணாசலத்தையும் கொண்டு அமர்த்திக் தீர்க்கமாய்ப் பேசத் தொடங்கினார் ராகவன்.
‘இதோ பாருங்க. நான் தீர்மானமாச் சொல்லிடறேன். எனக்கு என் மனைவியைப் பிடிக்கலை. சதா லொக்கு, லொக்குன்னு இருமிக்கிட்டு டி.பி. வியாதியோட அவளைப் பார்த்தாளே எனக்குப் பத்திக்கிட்டு வருது. பத்தாததுக்கு முடியெல்லாம் கொட்டிப் போய்ப் பார்க்கச் சகிக்கலை. அதனால நான் அவளைவிட்டு ஒதுங்கி என் விருப்பத்துக்கு வாழ முடிவு பண்ணிட்டேன்…”
- அவர் சொல்லும் பொழுதே அதைக் கேட்கச் சகிக்காமல் ஸ்னேகிதர் லட்சுமி வாய்விட்டு வெடித்துவிட்டாள். அருணாசலத்துக்கே அதைக் கேட்கப் பற்றிக் கொண்டு வந்தது.
“என்னடா ராகவா இது. ஒரு பேரன் பேத்தி எடுக்கப் போற வயசுல இப்படியெல்லாம் பேசிக்கிட்டு, உன் பெண்டாட்டி எங்கடா போவா?” என்று கேட்டார்.
பட்டென்று பதில் பிறந்தது ராகவனிடம்.
“ஏன் இவன் எதுக்கு இருக்கான்?” – என்று சந்துருவைப் பார்த்துக் கை காட்டினார்.
“என்னால அவுங்க வயித்தைத்தான் நிரப்ப முடியும். சந்துரு மாசை நிரப்ப முடியுமா? இவ்வளவு நாள் இல்லாம உங்க புத்தி இந்த வயசுல ஏன் இப்படிப் போவுது?” சந்துரு அமமாவுக்கு வக்காலத்தாக முதல் முறையாகச் சீறி விழுந்தான்.
“எனக்குப் பிடிக்கலை. பிடிக்கலைன்னா அதுக்கு இதுதான் வழி. இருந்து கசந்து வழியக் கூடாது. நாகரிகமா சதுங்கிக்கிறேன். தப்பா?” – ராகவன்.
“ஊர் சிரிக்கும்!” – சந்துரு.
விடக்
‘உன்னை நாங்க பார்த்துச் சிரிக்கிறதை கம்மியாத்தான் சிரிக்கும். உன் மனைவி அழகா இல்லைன்னு அவளை நீ ஒதுக்கி வைக்கலாம். என் மனைவி நோயாளின்னு தான் ஒதுங்கக் கூடாதோ?” – ராகவனின் கேள்வியின் கனத்தில் சந்துருவின் தலை அப்படியே கவிழ்ந்து போனது.
‘நீ செய்யறது உனக்குச் சரின்னா நான் செய்யறதும் சரிதான்” – மேலும் பேசினார்.
”எனக்கு நடந்தது எனக்குப் பிரியமில்லாத கல்யாணம். உங்களுடையது அப்படி அல்ல. அதனால் நீங்க இப்படிச் செஞ்சா அது அம்மாவுக்குச் செய்யற துரோகம்.” என்றான் சந்துரு. - அது வரையில் பேசாமல் இருந்த பார்வதி இப்பொழுது அவர்களுக்குள்ளே நுழைந்தாள்.
”மாமா, எதுக்கு இந்தக் கூத்தும் நாடகமும்? . மன விருப்பங்கள் இயல்பாய் இயற்கையாய் ஏற்படணும் செயற்கையாய் உண்டாகக் கூடாது. உங்களைத் திருப்திப் படுத்த அவர் என் பேர்ல செயற்கையா அன்பு செலுத்தறதை நானே வெறுக்கிறேன்!”
”அவர், அவர் விருப்பத்துக்கு நல்ல அழகான பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிச் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்! நீங்க அத்தையை வதைக்காதீங்க. அத்தையோட மனசு வெள்ளை. அந்த நிறத்தைப் பார்த்துட்ட உங்களுக்கு எந்த நிறம் எப்படி இருந்தா என்ன? நான் சொல்லியா உங்களுக்கு இதெல்லாம் தெரியணும்?”
நீளமாகப் பேசினாலும் அதுதான் எத்தனை செறிவான பேச்சு. ராகவனும் லட்சுமியும் விக்கித்து நிற்க, ‘சபாஷ்’ என்பது போல் அருணாசலம் கைதட்டி மகிழ்ந்தார்.
ஏனோ தலைமீது ஒரு மிகப் பெரிய பாரம் கவிழ்ந்த மாதிரியில், நிமிர முடியாத சிரத்துடன் ஒரு குற்றவாளியாகத் தன்னை முதன் முறையாகப் பாவித்துக் கொண்டு, சற்றுப் பரவசமாக ஓரக்கண்ணால் பார்வதியைப் பார்த்தான் சந்துரு!
இந்திரா சௌந்தர்ராஜனன்/ நீல நீலா சிவப்பாகிறாள் – விருட்சம் நாளிதழ்
