
தன்னுடைய அன்புக்குரிய பக்தரின் மரணத்தால் சுவாமி யோகி ராம்சுரத் குமார் கண் கலங்கியபோது, பக்தரின் தாயார் சுவாமியிடம் கேட்டார்:
“சுவாமி, மரணம் குறித்து பற்றும், ஆசையும் உடைய எங்களைப் போன்றோர் கலங்குவது இயல்பு. ஆனால், பற்றறுத்த தங்களைப் போன்ற ஞானிகள் கலங்குவது ஆச்சரியமளிக்கிறது சுவாமி.”
சுவாமி வெகு நேரம் மௌனமாக கண் கலங்கியபடி இருந்தார். மாறி மாறி சிகரெட் பிடித்தபடி இருந்தார்.
“வாலியின் மனைவி தாரா ஒரு ஞானி. தன் கணவனின் மரணத்தினால் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள். ராமபிரான் அவருக்கு ஆறுதல் கூறினார். ‘தாரா நீ அனைத்தும் உணர்ந்தவள். அழிந்தது வாலியின் சரீரமேயன்றி ஆத்மா அல்ல. ஆத்மா அழிவற்றது என நீ அறிவாய். அறிந்திருந்தும் நீ சோகத்தில் மூழ்கலாமா?” தாரா பதிலளித்தாள். “ராமா ஆத்மா அழிவற்றது என நான் அறிவேன். எனினும் அழிவற்ற அந்த ஆத்மா அழிவடையும் சரீரத்தோடு இணைந்திருக்கும்போது வாலி என்ற ஒரு உருவம் இருந்ததே, அதை நான் இனி என்று பார்ப்பேன்?”
இதைச் சொல்லும்போதே தாராவின் கண்களில் நீர் வழிந்தது.
சுவாமி சற்று நேரம் மௌனமானார்.
“இனி இந்த பிச்சைக்காரன் நண்பரின் ரூபத்தைக் காண முடியாதே?”
சுவாமியின் கண்களில் கங்கை வடிந்தாள்.
1970களிலிருந்து சுவாமியை அறிந்த ஒருவர் சந்நியாசம் பெற்றார். பஜனைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான அவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. அவரும் அவரது பக்தர்களும் இமயமலை யாத்திரை சென்றனர். அங்கே உள்ள இரு நதிகளின் சங்கமத்தில் அந்த சந்நியாசி புனித ஸ்நானம் செய்ய ஆற்றின் படித்துறையில் இறங்கினார்.
ஆற்று நீர் திடீரெனப் பொங்கி அவரை இழுத்துச் சென்று மூழ்கடித்துவிட்டது. அவரின் சரீரத்தை அதன்பின் யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் தெரிந்த சுவாமியின் பக்தர் ஒருவர், சுவாமியிடம் ஓடோடி வந்தார். செய்தியை சுவாமியிடம் சொன்னார். அங்கு வெகு நேரம் அமைதி நிலவியது.
திடீரென சுவாமி சொன்னார்,
“அதனால்தான் இந்த பிச்சைக்காரன் ஸ்நானம் பண்ணுவதே இல்லை.”
சுவாமி கூறியதைக் கேட்ட அனைவரும் விக்கித்துப் போயினர்.
