
ஏம்ப்பா கண்ணா, நாளைக்கு அமெரிக்கா கிளம்ப எல்லாம் ரெடி பண்ணாமல் இங்கே உட்கார்ந்து படம் வரையறியே, அது அவ்வளவு முக்கியமாப்பா இப்போ?
அம்மா, நான் ஏற்கனவே முக்கியமானதை எடுத்து வைச்சிட்டேன். இந்தப் படத்தைப் பார்த்து உனக்கு என்ன தோணுதும்மா?
அந்தப் பெண் தன்னைத் தானே சிறையிட்டுக் கொண்டு பெருங்குழப்பத்தில் தவிப்பது போல் இருக்குப்பா, யாருப்பா அது?
நம் நாட்டு பெரும்பாலான ஐம்பது வயதைக் கடந்த அம்மாக்களைத் தான் மா இப்படி வரைந்தேன்.
நீ சொல்வது எனக்கு ஒண்ணும் புரியலை கண்ணா.
நம் நாட்டுப் பெண்கள் சின்ன வயதில் அவங்கவங்க மனசில் ஆயிரம் ஆசைகள் தான் என்ன ஆகணும்னு இருப்பதை அப்படியே கைவிட்டு, திருமணம், குழந்தை , உறவுகளை கவனிப்பது என்று 20, 25 ஆண்டுகள் தன்னைப் பற்றி யோசிக்காமல் ஓடி ஓடி உழைத்து விட்டு , பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையை வாழத் தொடங்கிய பிறகு தன் சுயமுகம் மறந்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுச் சிறைக்குள் குழம்பி அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய் வந்து அவஸ்தைப் படுகிறார்கள்.
அம்மா நான் சொல்வதை நீ தனியே உட்கார்ந்து யோசி. உனக்கான ஏதாவது ஒரு செயலை புதிதாக ஆரம்பி மா. உன் சுய முகம், விருப்பம் எதுவென கண்டு பிடி.
இதை உன் மகன் என்று மட்டுமின்றி உன்னை சக மனுஷியாகவும் சிந்தித்ததால் வந்த படம் இது.
ரொம்ப சந்தோஷமா இருக்குடா கண்ணா , கண்டிப்பா செய்வேன்.
