
எனது கவிதை மின்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள். இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்தவை .
1. இருண்ட குகை
இருண்ட குகைக்குள்
எத்தனை உணர்ச்சிகள்
சில வெளியே வரும்
சில அமுங்கிக் கிடக்கும்
கனவு வெளிச்சத்தைக்
கண்ட பின்பு
அத்தனையும் எழுந்து
ஆட்டம் போடும்
விடிந்த பின்பு
வெட்கம் வரும்
- கொலு பொம்மை
———
நிற்கும் பொம்மைகளிடம்
கதைகள் இருக்கின்றன
படுக்க வைக்கப் படும்போது
பகிர்ந்து கொள்ளப்படும்
மண்ணாக இருந்த காலத்தின்
மகிழ்ச்சிக் கதைகள்
கேட்கும் அம்மாவுக்கும்
கண்கள் கசியும்
மணமான காலத்திற்கு
முன்பிருந்த நிலை நினைந்து
3. தோட்டத்துப் பூ
மணத்தைப் பரப்பி விட்டு
மண்ணுக்கு வா என்றது
மண்ணில் கிடந்த
சருகு ஒன்று
இன்னும் கொஞ்ச நாள்
இருந்துவிட்டு வருகிறேன் என்றது
இன்று பூத்த பூ ஒன்று
அது காற்றின் கையிலும்
அதோ அந்தக் கடவுள் கையிலும்
என்றது சருகு
அந்தக் கடவுள்
கையில் பூக்கூடையோடு
வந்து கொண்டு இருந்தார்
- சுதந்திரச் சுற்று
விட்டுப் போவதால்
வருவது சுதந்திரம்
விடுவதும் வ்ருவதும்
சுதந்திரச் சுற்று
கவிதை எழுதிவிட்டால்
கற்பனை விடுதலை
கண்ணீர் விட்டு விட்டால்
சோகம் விடுதலை
பூக்கள் பூத்துவிட்டால்
மொட்டுக்கள் விடுதலை
பொழுது விடிந்துவிட்டால்
சூரியன் விடுதலை
விடுதலை கிடைத்ததால்
சுதந்திரம் கிடைத்ததா
சுதந்திரம் வந்தபின்
விடுதலை கிடைத்ததா
எழுதிய கவிதையையும்
விட்ட கண்ணீரையும்
பூத்த பூக்களையும்
விடிந்த பொழுதையும்
கேட்டுப் பார்த்தால்
புரியலாம்
விட்டுப் போனதால்
வந்ததா சுதந்திரம்
- முடி திருத்தும் நிலையம்
மூக்குறிஞ்சிக் கொண்டு
வருவோரும் உண்டு
முட்டக் குடித்துவிட்டு
வருவோரும் உண்டு
வேர்வை வழிய விட்டு
வருவோரும் உண்டு
எல்லாம் தாங்கிக் கொண்டு
முடியைத் திருத்தும் கலைஞன்
தலையைக் கொஞ்சம்
சற்று திருப்பச் சொன்னால் மட்டும்
கழட்டித் தரவா கையிலென்று
கலாட்டா செய்வோரும் உண்டு
6. கை பேசி உலகம் –
நேர் பேசி போயாச்சு
கை பேசி வந்தாச்சு
படுக்கை முதல்
படுக்கை வரை
பகலும் இரவுமாய்ப்
பார்ப்பதே வேலையாச்சு
பார்த்தும் கேட்டும்
படித்தும் எழுதியும்
ஒலியும் ஒளியும்
உள்ளங்கை உலகமாச்சு
உலகம் பூராவும்
ஒண்ணாய் ஆயாச்சு
வீடு மட்டும்
விலகிப் போயாச்சு
