
13/2/26 இணையக் கவியரங்கம்
1.மறதி
மதிப் பெண்ணுக்கு
அலைந்து
ரேங்குக்குத் திரிந்து
தேர்வு எனும்
மலை ஏறி
வேலைக்கு அலைந்து
நிரந்திரத்திற்குத்
தவமிருந்து
பதவி உயர்வுக்குப்
பாடாய்க்கிடந்து
மாற்றல் கிடைக்கக்
காவடி எடுத்து
சொந்த ஊர் வந்து
நொந்து நூலாகி
கெளரமாய்ப்பணிஓய்வு
பெற்றிடத் தவம் கிடந்து
காலம் கழித்த
சொந்தக் கதையில்
மனிதனாய் வாழ்வது
மட்டும் மறைந்து போனது.
2.நெருடல்
தமக்கு விளங்கா ஒன்றை
விளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்
தெளியாத ஒரு விஷயத்தைத்
தெரிந்த தாய்க் கதைக் கிறார்கள்
உணரா ஒன்றினை உணர்ந்ததுவாய்ச்
சரடு விகிறார்கள்
வாரா ஒன்றை வந்த தாய்க் கொக்கரிக்கிறார்கள்
வந்த ஒன்றை அறவே இல்லை என்கிறார்கள்
செய்த செயலைக் கோணல் என்பார்கள்
செய்யாத ஒன்றுக்கு யோசனை வைப்பார்கள்
உயரத்தில்அவர்கள் இருப்பதைக் கணமும்
பிறர் மறக்கவில்லை
என்பதை அறிய மகிழ்கிறார்கள் அவர்கள் படியளக்க
நமக்கு வாழ்க்கை என்றாகியும்
நெஞ்சுக்குள்ளாய்
ரகசியமாய் ஏனிந்த நெருடல்.
- இறை
தங்கத்தேரும்
முத்துப்பல்லக்கும்
மாணிக்கத்தொட்டிலும்
வைரக்கிரீடமும்
ரத்னாங்கியும்
காசுமாலைகளும்
கனகத்திருவுருவும்
மரகத லிங்கமும்
பச்சை நீலம் பதித்த
பட்டுப்பீதாம்பரமும்
வெள்ளி மயிலும்
பொன்னில் குதிரையும்
ஜவ்வாது அத்தரும்
பன்னீர் சந்தனமும்
பச்சைக்கற்பூரம்
பரபரக்கும் கற்கண்டுப்
பொங்கலும்
சொந்தமாகும் எம்மிறைக்கு எப்போதுமெனில்.
எட்டுவதோ இறை
ஏழைச் சகோதரனுக்கு.
