
பண்பாட்டுத் தளத்தில் இந்திய அளவில் சிறுபத்திரிகைகளுக்கு வளமான மரபு உண்டு. மராத்தி, வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் சிறுபத்திரிகைகளும் சினிமாவும் கைகோர்த்து திரைக்கலையை செழுமையாக்கினார்கள். பெங்கால் ‘’கலோல்’ சிறுபத்திரிகை மரபில் கட்டக், ரே, மிருணால் சென் பங்கேற்றுள்ளார்கள். தெற்கு மும்பையில் கலா கோடா என்ற இடத்தில் எளிய தேநீர் விடுதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பல இளைஞர்கள் கூடி இலக்கியப்போக்குகளை விவாதித்துள்ளார்கள். அந்த இளைஞர்களில் ஒருவர் பின்னாளில் சர்வதேச அளவில் அறியப்பெற்ற முக்கிய கவி அருண் கொலட்கர்… இந்த வியாழக்கிழமை சந்திப்புக்கு மராத்திய மொழியில் “ கதை சொல்லல்” என்ற பொருளில், ’கடா’ எனப் பெயரிட்டார்கள்.சாலையோர தேநீர் கடைகளில் கலையையும், இலக்கியத்தையும் அரசியல் விழிப்புணார்வையும் விவாதித்தவர்கள்தான் ”சத்தோடாரிகள்” என மராத்தியில் அழைக்கப்பட்டனர். கேரளத்தில் ஐயப்பா பணிக்கர், சச்சினாநந்தம் போன்றவர்கள் ஜான் அப்ராஹம், அடூர் கோபாலகிருஷ்ணனோடு நெருங்கி பழகியவர்கள். மராத்தி ‘சத்தோடாரிகளோடு’ இந்தி, வங்காள நடிகர்கள் செறிவாக உரையாடியதை என் மராத்தி நண்பர் சொன்னது வியப்பளித்தது. அம்ரீஷ் பூரி, நஸ்ரூதின் ஷா, ஸ்மிதா பட்டேல், ஷப்னா ஆஸ்மி போன்ற நடிகர்களும், கோவிந்த் நிஹாலினி மும்பை வியாழக்கிழமை ‘’கடா” சந்திப்பில் பங்கேற்றுள்ளார்கள். கோவிந்த் நிஹாலினியின் ‘’அர்த் சத்யா” படத்தில் திலீப் சித்ரே கவிதையை பின்னணியில் கேட்கமுடியும்.
தமிழில் ஜெயந்காந்தன், ஜெயபாரதி, ருத்ரையா போன்றவர்கள் சிறுபத்திகையோடு தொடர்பில் இருந்தவர்கள். இந்த இணைவு தமிழில் நடக்காதது துரதிருஷ்டம்.
மற்றொரு விஷயம் தமிழ் சிறுபத்திரிகை மரபைப் பற்றி வல்லிக்கண்ணன் நூல் எழுதியுள்ளார். மராத்தி, வங்காளம், மலையாள சிறுபத்திகை வரலாறுக்கு விக்கி பக்கங்கள் காணக்கிடைக்கும். தமிழ் சிறுபத்திரிகை வரலாறுக்கு நான் பார்த்த வரையில் விக்கி பக்கம் இல்லை.
அமெரிக்காவில் நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்கிற ‘இலக்கிய சுல்தான்’ பொன்னியின் செல்வன் போன்ற குப்பைப் படங்களுக்கு வசனம் எழுதியவர். தன் விசுவாச விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு அமெரிக்காவில் மாநாடு நடத்துகிறார். தன் விசுவாசிகளுக்கு தமிழ் விக்கி பக்கங்களை அறிமுகப்படுத்திய சுல்தான், தமிழ் சிறுபத்திரிகை வரலாறைப் பற்றி இன்னும் விக்கியில் எழுதவில்லை. சுல்தானின் பங்களிப்பும் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சிறுபத்திரிகை மரபிலிருந்து போனவர் வணிக, குப்பைப்படங்களுக்கு வசனம் எழுதிய அவலம்தான் நடந்துள்ளது.
(படம்–கோவிந்த் நிஹாலினியின் ‘அர்த் சத்யா’ படத்திலிருந்து …)
