மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

  1. சதுரங்களும் செவ்வகங்களும்.

கணக்கிட்டு வாழச் சான்றோர்
இட்ட
வடிவியல்கள் இவை.

சதுரங்கள் சமத்துவமானால்
செவ்வகங்கள்
அளவான இல்லறம் காட்டும்.
நெடியவை
பெற்றவராக குறுகியவை
ஆகாதோ
பெற்றவை.

முக்கோணம் முன்னர்
குசேலர்
வாழ்வு கூடாதெனக் காட்டிய
குறியீடல்லவா?

சதுரம் நாற்கரச்சாலை
ஆகிட
இன்று எண்கோணச் சாலை
வறியவர்
வாழ்வில் தேனும் பாலும்
ஓடச்
செய்யுமாம்.

செவ்வகத்தில் சிலிர்த்த
பணத்தாளும்
ஓரிரவு
வெறுந்தாள் ஆனது.

சதுரமாய் வாழ்ந்து
செவ்வகமாய்
உயர்ந்து,
சமுதாயம் உரம் பெற
வரமொன்று
‘கேள் ‘ என்றே காலம்
சொல்கிறது.

  1. தீபங்கள் பேசினால்….

இருட்டோடு சமரசம் பேசி
இருக்கும்
இடத்தை வெளிச்சமாக்குவோம்.

ஆலயமெனில் விளக்கில் எண்ணெய்,
சிந்திய
படையல் உண்ண வரும்
எலிகள்
நேசப் புன்னகை வீசும்.

மாமலையில் ஆண்டுக்கு ஓர்நாள்
ஏற்றும்
பெருந்தீபம் அடியவர்தம்
மனங்களில்
ஏற்றும் ஒளிவிளக்கு.

மணவறையில் மனமிரண்டு
புரிதலோடு
இல்லறம் புக மணவிளக்கு
மங்கல
மேளம் கொட்டும்.

மாண்டு போனவர் தலைமாட்டில்
தனியாய்
எரியும் திரி, இதுவே வாழ்வு.
கூடிவாழ்
என்றே சொல்லும்.

குப்பைமேட்டில் விளக்கு
வரும்
நாளில் இது
கோபுரமாகும் என்று பேசும்.

எது எப்படியோ
தீபங்கள் பேசத் துணிந்து
விட்டால்
ஒயாத கடலலை .போல்
பேசும்
மானுடம் வாயடைத்துப்
போகும்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி.
நீர்க்குமிழிகள்.

சின்னத் திரையில் வெள்ளை
நிலாவும்,
மின்னும் தாரகையும் உலாவும்
பெருவானம்
காட்டிச் சிரிக்கும்.

பளபளக்கும் சின்னக் கண்ணாடிச்
சில்லுகளோ,
சிந்தும் சிங்கார முத்துகளோ !

சோப்பு நுரையிலும் காற்றில்
கலகலவென
மிதந்து சிறுவர் மனம்
அள்ளும்.

இயற்கை செய்யும் ஜால
வித்தையோ,
வருவதும் போவதும்
தெரிவதில்லை.

வினாடி நேரமே விளையாடும்
ஆனால்
நீர்க்குமிழிகள்
மாயும்வரை மண்ணில்
சிரிக்கும்.

  1. தொண்டு

உற்றவர்,பெற்றவருக்குச்
செய்வது
ஆகும் கடமை, இதை உடைமை
ஆக்கியவர்
நடவு செய்தார் அறம்.

கடமைக்கு மனவாசல் திறவாதார்
திறந்து
வைத்தார் ஊருக்கு ஊர்
காப்பகங்கள்.

தொண்டு எனும் பெயர் சூட்டு
விழா
வரிஏய்ப்புப் பெட்டகம் தாங்கி
கோலாகலம்.

ஒருமுகமாம் தனிமுகம்
மறைத்து,
வள்ளலாக வாரி வழங்கும்.
வாய்ப்பு.

வயது வாரி கணக்கெடுப்பு போல்
வகைவகை
நிறுவனங்கள். சமூகச் சீர்கேடு
உலாவ
இட்டுத் தரும் மேடை.

முகமன் இன்றி ஈரநெஞ்சம்பல
எங்கோ
இருந்து காசோலை தரும்.
வாங்கி
வளரும் வியாபாரம்.

எல்லையின்றி எவரிடமும்
காட்டும்
உயிரிரக்கமான ‘தொண்டு’
எனும்
சொல் நிஜம் தொலைத்து
நிழலானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன