முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /காஞ்சிப் பட்டுடுத்தி….

பவித்ராவுக்கு ஏன்தான் இந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறோமோ என்று எரிச்சலாக இருந்தது .
சிறிய விஷயத்தை அடைவதற்குக் கூடக் கணக்குப் பார்ப்பதும், போராடுவதும் சே…
எப்படியோ கஷ்டப்பட்டு காசைச் சேமித்து, வெகு நாள் ஆசையான ஒரு பட்டுப் புடவை வாங்கக் கணவனுடன் கடைக்குக் கிளம்பி, வாங்கியும் வந்து விட்டாள்.அவள் ஆசைப்பட்டபடியே மஞ்சள் நிறத்தில் அரக்கு பார்டர் போட்ட புடவை_ ஆங்காங்கே மெரூனில் தங்கக் கலர் சேர்ந்த மயில்களுடன் கண்களைக் கவர்ந்தது.இவளது எலுமிச்சை நிறத்திற்கு அந்தப் புடவை எடுப்பாக இருக்கும் என்று தோன்றியதால் அதைத் தேர்ந்தெடுத்தும் விட்டாள். அதைப் பேக் பண்ணி வாங்கிச் செல்லும் போதே மனம் மகிழ்ச்சியிலும், பெருமையிலும் துள்ளியது.கிட்டத்தட்ட முப்பத்தியைந்து வருடம் கழித்து அவளுக்காக வாங்கிக் கொண்ட பட்டுப் புடவை! குழந்தைகள் வளரும் வரை படிப்பு, மற்றச் செலவுகள்!
பெரிய மகள் கல்யாணத்தின்போதோ எல்லோருக்கும் ஜவுளி வாங்கி, பட்ஜெட் துண்டு விழுந்ததால் சாதாரணப் புடவைதான் வாங்கிக் கொண்டாள்.
பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும்போது , புடவையை என்று அணியலாம் என்ற கற்பனையில் மனம் இலயித்தது.வழியில் சாலையில் கூட்டம் காரணமாக பஸ் நிறுத்தப்பட்ட போதுதான் அவளைப் பார்த்தாள்.
மனம் பிறழ்ந்தவள் போலும்.எந்தப் பாவியோ அவளை நாசம் செய்து, நடுரோட்டில் அரைகுறை ஆடையுடன்_ இல்லையில்லை முக்கால் நிர்வாணமாகக் கிடந்தாள். மனதில் ஊனத்தைத் தந்த கடவுள், உடல் வாளிப்பிலும், வனப்பிலும் எந்தக் குறையும் இல்லாமல் படைத்திருந்ததால் , அவள் அங்க லாவண்யங்களைப் பல கண்கள், அந்த நிலையிலும் மொய்த்துக் கொண்டிருந்தன.
பெண் போலீசார் வந்து அவளைக் காப்பகத்துக்கு அழைத்துச் செல்வார்களென்று கூட்டத்தில் யாரோ பேசியது கேட்டது.
தனக்கு நிகழ்ந்தது எதுவெனத் தெரியாமல் தொலைவில் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு, தனக்குத் தானே பேசிக் கொண்டே இருந்த அவளை நோக்கிப் போன பவித்ரா, சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த ஷாப்பிங் பேகிலிருந்து அந்தப் பட்டுப் புடவையை எடுத்து அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் மறையும் வண்ணம் போர்த்தி விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.வந்த பெண் போலீஸ் அதிகாரி, அந்தப் புடவையை அவளுடலில் அணிவித்து, அவளை ஜுப்பில் ஏற்றி அழைத்துச் சென்றதைப் பார்த்து , நிறைவான புன்னகை பூத்த பவித்ராவைப் பார்த்து வியந்தான் அவள் கணவன்.

சாந்தி சந்திரசேகரன்/ வெளிச்சத்தை நோக்கி – விருட்சம் நாளிதழ்

2 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /காஞ்சிப் பட்டுடுத்தி….”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன