
இளம் தென்றல் அவளை அப்படியே வருடிச் சென்றது,அந்தக் காற்றுக்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப தலைமுடி சுருண்டு விளையாடியது.வேகமாக கால்களை நனைக்க வந்த வெண்ணுரை அலைகள் கோபமாக வந்து கால்களில் விழுந்து வணங்கி விட்டு அமைதியாகத் திரும்பியது.தூரத்தில் இரண்டு மீன் பிடி படகுகள் மும்முரமாக தன் வேலையை செய்து கொண்டிருந்தது.வெண்மையாய் பரவி இருந்த மணல் பரப்பில் எதையோ தேடி இரண்டு புறாக்கள் மணலை ஒட்டி பறந்து கொண்டிருந்தன.தேடிய சுண்டல் துணுக்குகளை போட்டி போட்டு தூக்கிக் கொண்டு உயரப் பறந்தன.
சிறுவர்கள் மணலில் காலைப் புதைத்து மணல் கோட்டைகள் கட்டினர்.சிறுமிகள் அந்தக் கடையை சுற்றி நின்று தலையில் அணியும் கலர் கலரான பிளாஸ்டிக் ஆபரணங்களை ஆர்வமாக வேடிக்கை பார்த்தனர்.
இளம் காதலர்கள் படகு மறைவில் தம்மை மறந்து,வேடிக்கை பார்ப்பவர்களை மறந்து மும்முறமாக கிடைத்த நேரத்தை உபயோகப் படுத்திக் கொண்டனர்.முறுக்கு சுண்டல் விற்கும் 15 வயது சிறுவன் அவர்களையே சுற்றி வந்தான்.
எடிட்டர் ஜானகிராமன் பொறுமை இழந்தார்,எதிரில் நின்று இருந்த எழுத்தாளர் சுஸ்ரீன் முகத்தில் அந்த பேப்பரை விசிறி அடித்தார்.
”என்னய்யா கதை எழுதியிருக்கே?படிக்கறேன்,படிக்கறேன் கதை ஆரம்பமே ஆக மாட்டேன்னுது.படம் கொடுத்து 25 வரில மினி சிறுகதை எழுதச் சொன்னா காத்தடிச்சது,அலையடிச்சது,முறுக்கு வித்ததுனு பினாத்தியிருக்கே,கதை எப்ப ஆரம்பிக்கும்?”
“அதில்லை சார் அவசரமா வேணும்னீங்க 25 வரில ,படமோ ஒவ்வொண்ணும் குண்டக்க மண்டக்க இருக்கு ஒண்ணுமே புரியலை.சரி எழுதிட்டே போனா கதை வரும்னுதான்…..”
