
சுஜாதாவின் கட்டுரைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. தரவுகள், தகவல்கள், அங்கதம், சமூக அக்கறை, அரசியல் என எல்லாம் கலந்த அடர்த்தியான கட்டுரைகள் அவை. அவர் நினைவாக, அவரது கட்டுரைகளில் இருந்து ஒரு சிறுதுளி…..
இந்த அளவு (சிறுகதைகளின் அளவு) வரையறை எதற்கு?
சுஜாதா: இதை ஒரு வழிகாட்டியாகத்தான் சொல்லவேண்டும். நூறு பக்கங்கள் இருந்தால், அதை எனக்குச் சிறுகதை என்று ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால், அது கதையல்ல், கதைச் சுருக்கம். நான்கு வரிகளுக்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லிவிடலாம்.
இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதோ?
சுஜாதா: இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம்தான் எனக்குத் தெரிந்தது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல, பஸ் டிக்கெட். ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருஷம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ, மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.
(சிறுகதை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கட்டுரையிலிருந்து).
“குமரி மாவட்டமே ரயில் பாதை போட்ட ஆனந்தத்தில் இருந்த வேளை அது. விவேகானந்தர் மண்டபத்தைப் பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் போட்டில் செல்கிறார்கள். எவ்வளவு பேருக்கு விவேகானந்தர் எப்படி வாழ்ந்தார், என்ன சொன்னார் என்பது தெரியும்?
Despondency is not religion; whatever else it might be. By being pleasant always and smiling it takes you nearer to God, nearer than any prayer என்று சொன்னவரின் மண்டபத்திலிருந்து பத்துப் பைசாவைக் கடலில் போட்டு, இளம் சிறுவர்கள் நீந்தி மூழ்கி அதை எடுத்துக்கொள்வதை வேடிக்கை பார்க்கிறார்கள் டூரிஸ்ட்கள்!
காந்தி மண்டபம்; மற்றொரு பாறையில் வள்ளுவர் நினைவாலயம். இன்னும் பத்துப் பதினைந்து வருஷங்களில் பெரியார் பாறை நிச்சயம் வரும். அதற்கப்புறம் சில மந்திரிகள் பாறை; முன்சிபல் சேர்மன் பாறை; நான் கூடச் சின்னதாக் ஒரு பாறை ரிஸர்வ் செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்”
(தமிழ்நாடு – 2000 மைல் கட்டுரையிலிருந்து).
Ref: ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’ – கட்டுரைகள் – சுஜாதா. தொகுப்பு: தேசிகன். உயிர்மை பதிப்பகம். முதல் பதிப்பு டிசம்பர் 2004).
