
கட்டம் கட்டமாகக் கம்பிகள் கொண்ட தடுப்புக்கு அந்தப்புறம் ஒரே கூச்சல்.
“எலே, எப்டி இருக்கே லே?” “நல்லா இருக்கிறீங்களா?” “வருத்தப் படாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்தான்…” “உனக்குப் பிடித்த பூந்தி..” “வக்கீல், கேஸு நம்ம பக்கம் தான் ஜெயிச்சிடும்னு திடம்மா சொல்றாரு..”
இந்தப் பக்கம் கைதிகள் உடையில் பெண்கள்.
பெண் கைதிகளில் இவள் தனி மாதிரி. இவளைப் பார்க்க யாரும் வரமாட்டார்கள்! தனியே வந்து, மனிதக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, அமைதியாகத் திரும்பி விடுவாள்.
அவளுக்கு ஆயுள் தண்டனை – ஏதாவது இறந்துபோன அரசியல் தலைவன் பிறந்த நாள் வரும்வரை. அதற்குப் பிறகும் தண்டனை நீடிக்கலாம், ஆளும் கட்சியைப் பொருத்து!
அவளுடைய ஒரே மகன் வரமாட்டான். அவள் கையால் சோறும், பலகாரமும் வாங்கித் தின்ற உறவுகள் கூடவா? எதிர்வீட்டு சரசா, பால்ய சிநேகிதி பரிமாளா ..ம் ஹூம் யாரும் வருவதில்லை.
குடித்து, தெரு மூலை இருட்டுக் கடையில் எளிதாய்க் கிடைக்கும் போதைப் பொருள் முகர்ந்து மிருகமாய் வீடு வந்தவனை அடித்தே கொன்றவள் அவள்.
போதைக்குப் பொய்சாட்சிகள் பல; பேதைக்கு மனச் சாட்சி மட்டுமே…
“ஏலே, கவலைப் பட்டதே லே, பெரிய எடத்துலெ சொல்லிவெச்சுருக்கேன்; கெலிச்சுடுவோம்ல..” யாருடைய குரலோ யாருக்கோ உறுதியளித்துக்கொண்டிருந்தது, மனது உறுத்தாமல்!
