
வீட்டிற்குள் நுழைந்த அவள், சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
உள்ளுக்குள் மூச்சு மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
“உன்னால் தான் இந்த தவறு நடந்தது”
அலுவலகத்தில் கத்திய மேலாளரின் குரல், மனதுக்குள் வீடுவரை வந்து விரட்டியது.
‘அந்த தவறுக்கு காரணம் நான் இல்லை, நீங்கள்தான் என்று சொல்லும் துணிச்சல் நமக்கு ஏன் இல்லாமல் போனது?’
‘மேலாளர் ஒரு ஆண் என்பதாலா? அல்லது அந்த வேலையிடத்தில் வரும் மாதாந்திர சம்பளம் நின்று விடக்கூடாது என்பதாலா?’
ஒரு காலத்தில் தன்னம்பிக்கையுடன் நடந்த பாதங்கள் இன்று தள்ளாடின.
‘துணிச்சலுடன் முன்னேறு’ என்று சிறுவயதில் அப்பா சொன்ன வார்த்தைகள் மறைந்து போய், ‘உன் வீராப்பை வேலை செய்யும் இடத்தில் காட்டாதே’ என கணவன் இப்போது அடிக்கடி சொல்லும் வார்த்தைகளே ஞாபகம் வருகின்றன.
இருவரும் ஆண் மக்களாக இருந்தும், ஏன் இந்த வேறுபாடு?
ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்ட மகளைப் பார்த்தாள். புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.
‘நாளை கண்டிப்பாக நிமிர்ந்து நடப்பேன்’ என்று சொல்லிக் கொண்டாள்.
அவளுக்கே தெரியும் ‘இது பிரசவ வைராக்கியம் தான்’ என்று.
