மீனாட்சி சுந்தரமூர்த்தி 3 கவிதைகள்

இன்று விருட்சம் இணையவழிக் கவியரங்கில் வாசித்த கவிதைகள்.

  1. வரவேற்பு.

விருந்தினர் மனம் களிக்க
இன்சொல்
இன்முகம் இனிய வரவேற்பு..

காலையில் கதிரவனைப்
பூக்கள்
இதழ்விரித்து
புன்னகை புரிந்து புதுமணம்
வீசி வரவேற்கும்.

விழாக்கள் என்றால் மேடையும்
அரங்கும்
நிறைக்கும் அன்பர்களுக்கு
ஒருவர் உரை அது
வரவேற்புரை.

வீட்டில் ஓர் அறை அது பேர்
பெரும்
வரவேற்பரை என்று.

காலையிளம் பொழுதைக் கட்டியம்
கூறி
வரவேற்கும் கொண்டைச்
சேவல்.

கடைகளில் பொம்மைகள்
இரண்டு
நளினமாய் கைகூப்பி அழைக்கும்
வாடிக்கையாளரை..

நம்வரவை விரும்பி ஏற்பதுதானே
வரவேற்பு.
அதனால்தான்,

கொஞ்சமாய்த் தலைக்கனம்
ஏறிய
மூதாட்டி மதியாதார் வாசல்
போகாதே
என்று சொல்லி வைத்தாள்..

  1. எங்கே தண்ணீர்

வெண்மேகங்கள் கடலில்
நீர் முகந்து
நிறைமாதம் சுமந்து
நகராமல் நகர
பச்சை
மரங்கள் வழிமறித்து
மடியின்
கனம் வாங்கும்.

ஆலைகளால் வெள்ளை
மேகம்
அமிலமும்,கூடா மாசும்
சுமந்து
கரும்புகையாகி வலம்
வந்து
உதிர்ந்து போகிறது.

நீர்நிலைகளில் பாதி ஆனது
அடுக்கு மாடி,
தூர்ந்து போனது மீதி.

வரும் சொற்ப மழையும்
கடலோடிக்
கலக்கிறது தங்க இடமின்றி.

ஆற்று நீருக்காய் நெடும்
போராட்டம்.
ஊற்று நீரோ தாரை வார்ப்பு.

தண்ணீர்த் தட்டுப்பாடு
தெரிந்தும்
குழாய் நீர் வீணடிப்பு.

பார்க்கும் திசையெலாம்
கடலென
ஆறோடும் நாடுகளில்
நீர் சிக்கனம்
கண்கூடு.

மழைதடுத்து நிலத்தை
மலடாக்கும்
கருவேலக் காடுகள்
ஒழிக்க
ஏனோ முடக்கம்?

அவரவர் பகுதியில் காலி
இடங்களில்
ஆதிக்கம் புரியும் முள்மரங்களை
வேரோடு
களைவோம்.

  1. போர்

அன்று தொட்டு இன்றுவரை
எங்கும்
எதிலும் நீக்கமற நிறைந்த
ஒன்று.

பணம், பதவி ,புகழ், பேராசை,
விருப்பு,
வெறுப்பு
இன்னும் எத்தனயோ
காரணங்கள்.

பல சமயத்தில் பனிப்போராய்
விளிம்பு
தொட்டு நிற்கும், பெரிதாய்த்
தோன்றாது.

நாடு நகரங்களை அழித்து
பச்சை
வயல்களை எரித்து, குளங்களைத்
தூர்த்த
மன்னரெல்லாம் மாய்ந்துதான்
போனார்.
திரும்பும் திசையெலாம்
போர்
என்றால் எங்கே செல்லும்
மானுடம்.

ஆள்வதற்கு நாடு தந்தால்
அதைக்
காடாக்கும் உரிமை எவர்தந்தார்
என்றே
கேட்கிறது காலம்.

பள்ளிப்பாடம் சரியில்லை
ஒரு கூரையில்
ஒன்றாய் வாழும் விலங்குகளிடம்
கேட்டுக்கொள்
என்றே அழைக்கிறது வனம்.

One Comment on “மீனாட்சி சுந்தரமூர்த்தி 3 கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன