சசிகலா விஸ்வநாதன் வாசித்தளித்த 3 கவிதைகள்

13-3-2026, இணைய கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதைகள்

(1)

பகிர்தல்

பகிர்தலில் எப்போதும் பதற்றம்!

பாத்திரம் அறிந்துதான் பகிர்கிறேனா?

பகிர்ந்தவர் பெற்றதை நிறைவாக நினைக்கிறாரா!

தேவை அறிந்துதான் பகிர்ந்துள்ளேனா?

என்னை எவராவது
கண்காணிக்கிறார்களா?

என் மதிப்பு உயர்கிறதா?

இதை எல்லாம் மீறி
இன்னொன்றும் உள்ளதே!

அடுத்த நொடி…
அடுத்த நாள்..
அடுத்த தலைமுறைக்கு
எனக்கு ஏதும் எஞ்சுதல் வேணும்!

என;
அடுக்கடுக்காய் கவலைகள்
பதற்றத்தின் முளைகள்! முளைக்க; முளைக்க;
பகிர வந்த முன்கை தானே பின்னுக்குப் போக
விரிந்த கை கூம்புகிறது!
பரந்த மனம் சுருங்குகிறது!

(2)

ஆற்றாமை

பூஞ்சை தொற்றென நெஞ்சை மூடும்,
ஆற்றாமையை வெல்லுதல் எளிதல்ல எந்நாளும்!
முகம் பார்க்கும் கண்ணாடி மேல்
படிந்திருக்கும் தூசி அல்ல; ஆற்றாமை.

இடக்கையால் துடைத்து
மீட்டும் முகம் பார்க்க.

புதைக்கப்பட்ட விதை முளைப்பது அன்ன
பதிவாய் கிளைத்து வரும் ஆற்றாமை
ஆற்றாமை விடாது உன்னை; என்றும்
நீ அதை விட்டு விலக;
அருமருந்து ஒன்றே உண்டு; ஆற்றாமைக்கு
போராட்டத்திற்குப் பின் பெற்ற வெற்றிகள்
தந்த உச்சிகளை நினைத்து மகிழ்
ஏற்பிசைவு நீ தந்தால் மட்டுமே
தோல்வியாய் தோன்றும்; அதை புறந்தள்ளி
மேலே பயணம் செய்ய ஆற்றாமை
தோற்றுப் போகும்
வெற்றி வந்து
தங்கும் உன் கையில் .

(3)

இறப்பின் நீட்சி

கைத்தலம் பற்றி,
பையவே அமர்த்தி
பற்றற்றவன் கேட்டான்; பற்றுடன்.
‘ அச்சமாய் இருக்கிறதா?
அஞ்சாதே!
அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை; இங்கு.
உயர்ந்தோனும் இல்லை.
எனவே;
தாழ்ந்தோனும் இல்லை; இங்கு.
மறுமை இல்லை
எனவே;
இருமையும் இல்லை இங்கு.
இம்மை மட்டுமே, இங்கு.
இச்சையில்லை;
எனவே
சச்சரவு இல்லை
விரும்புதலும், வெறுத்தலும் இல்லை.
தானே தானே தத்துவம் இதுவென
உணரும்
தன்மயமாதல் ஒன்றே ஆகும் இங்கு.
தன்னில் தன்னையே ஆகுதியாக்கும் நிலை’என,
என் கோமான் என்னைத் தங்கரித்தான்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி 3 கவிதைகள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சசிகலா விஸ்வநாதன் வாசித்தளித்த 3 கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன