பானுமதி ந கவிதைகள்

நுகர்தல்

பால் முறுகும் வாசம்.
ஏலமும் வெல்லமும் மணக்கிறது.
யாரோ அப்பளம் பொரிக்கிறர்கள்
எங்கிருந்தோ சின்ன வெங்காயம்
எண்ணெய்யில் வதக்கும் நெடி
நுகர்தலில் பசியாறும் என்னையும்
போ போ என விரட்டுகிறார்கள்.

தேய்வு

நேற்றுக் கூடப் பார்த்தேன்.
கடலின் மேலெழுந்து சிரிப்பதை
அலைகள் தொட்டுவிட ஆர்ப்பரிக்கும்
இன்ப வாதையைத் தந்த நீ
இன்று ஏன் முழுதாக வரவில்லை?
ஏமாற்றம் அலைக்கா, உனக்கா?

ஏக்கம்

இறங்கிச் செல்லும் படிகள் அதிகம்
முன்னர் தொட்டுவிடும் தூரம் தான்
இன்று ஒரு பழுப்பு நூலாக நெளிகிறது.

நட்பு

அவனைத்தான் பார்க்கப் போனேனா?
இவன் அவனில்லையா? அப்படியெனில்
அவனும் இவனில்லையா? நிழலைப்
பற்றிக் கொண்டு மகிழ்ந்தாடிய மனம்
இன்றும் இருந்தால் என்னவாம்?

பகை

புகைந்து கொண்டுதானிருந்தது .
நீர் பாய்ச்சியிருக்கலாம்
ஊதுகுழலை ஏன் கொண்டு வந்தாய்?
உலக அரசனாக நினைத்துக் கொண்டாயோ?
தாயென தந்தையென நினைத்திருந்தால்
பள்ளி மாணவிகளைக் படுகொலை செய்வாயா?
எனக்குத் தெரியாதென்று பின்னர் சொல்வாயா?
சாத்தானும் தோற்கும் அரக்கன் அல்லவா நீ?
உன்னிடத்திலும் ஒரு நாள் புகையும்
பாரதம் உன்னை மன்னிக்காது என்றாலும்
நீருற்றி நெருப்பை அணைத்துவிடும்.
மரபற்ற உனக்கு கணியனின் உலக நோக்கைச் சொல்லும் .
பாரதி சொன்ன பகைவனுக்கு அருளுவதை உனக்கும் காட்டும்

One Comment on “பானுமதி ந கவிதைகள்”

Comments are closed.