
- திருவள்ளுவர்
கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் – இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த நலங்களில் ஒன்று அதன் கடற்கரை யன்றோ?
அங்குள்ள திரு மயிலைக் கடற்கரையில் வேனிற்கால மாலைப் பொழுதிலே வந்து நின்றார் ஒருமேதை. சீலமே உருவாய அப் பெரியார் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும்போ லிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டுப் பெயர்ந்தார் அல்லர் அப் பெரியார்; கடலின்மேல் மண்டிய மேகத்தை நோக்கிப் பேசலுற்றார்:-
“என்னே இம் மேகத்தின் கருனை! சென்னை மாநகரில் அனல் வீசுகின்றது; கேணிகளில் குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், அளவிறந்த தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அன்னாரைத் தடிந்து கொள்ளுதல் தக்கதே யாகும் என்று கருதியன்றோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?
“கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளைகொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; அதனால் உன்னை+ எழிலி என்று அழைத்தனர்.
“கைம்மாறு வேண்டாக் கருமுகிலே! உனக்கு மனமுவந்து தன்ணீர் அளித்தால், தனக்கு நலம் உண்டு என்பதை அறியாது போயிற்றே இக் கடல் நீ மழை பெய்யாவிட்டால் இந் நெடுங் கடலும் தன் நீர்மை குன்றுமே! நீ ஆற்று நீராக வந்து கடலைப் பெருக்குகின்றாய்; ஊற்று நீராகப் பொங்கிக் கடலை ஊட்டுகின்றாய்; மழை நீராகப் பொழிந்து கடலை நிறைக்கின்றாய். ஒரு வழியாகக் கொடுத்துப் பல வழியாக வாங்குகின்ற உபாயமும் இக் கடல் அறியா தொழிந்ததே!
“நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்கா தாகி விடின்”
என்று நான் பாடியதை நீ மெய்பித்து விட்டாயே!
“மன்னுயிரை வாழ்விக்கும் மாரியே! உன்னை மனமாரப் போற்றுகின்றேன்; வாயார வாழ்த்துகின்றேன். பாரெல்லாம் புகழும் காரே! வாழி; ஏழுலகேத்தும் எழிலியே! வாழி” என்று வாழ்த்திக் கொண்டு தமது மயிலாப்பூர்க் குடிசையின் உள்ளே புகுந்தார் அம் மேதை. மழை கொட்டிற்று
