
நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்தாள் மரகதம். மகள் கேட்ட கேள்வி பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.
சுந்தரியின் கை இன்னும் தன் உள்ளங்கை மருதாணியைச் சுட்டிக் கொண்டிருந்தது. தலைச் சாய்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேறெங்கோ பார்த்தாள்
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்? சாதாரண நம்பிக்கைகள், வார்த்தைகளை வைத்து குழந்தைகளுக்கு சில வேலைகளை செய்வோம். இந்த வயதில் அதற்கு அப்படியே அர்த்தம் கேட்டால்?
மகளின் மன உணர்வும் புரிந்துதான் இருந்தது மரகதத்துக்கு.
மகளின் விருப்பத்தையும் மீறி அவளைத் தன் அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தாள். அவன் உன்னை மிகவும் விரும்புகிறான் என்று சொல்லிதான் சம்மதிக்க வைத்திருந்தாள். அவனிடமும் இதையேதான் அம்மா சொல்லி இருப்பாளோ என்பது மகளின் சந்தேகம். அதென்னவோ சுந்தரி அவனிடம் நெருங்க முயன்றால் கூட விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தான் அவன்.
சொந்தம் விட்டுப் போய் விடக்கூடாது என்று தான் நினைத்தது தவறோ என்று மருகிக் கொண்டிருந்தாள் மரகதம்.
நடுவில் ஒரு மன மாறுதலுக்கு அம்மா வீட்டுக்கு வந்திருந்த மகளுக்கு மருதாணி இட்டிருந்தாள் மரகதம்.
அதுதான் இந்தக் கேள்வி..
“நீ யாரையாவது நினைச்சு, அல்லது உன்மேல அவங்க உன்மேல பிரியமா உன்னை நினைச்சா நல்லா சிவக்கும் பாருன்னு சொல்லிதானே மருதாணி இட்டு விடுவே… இப்பப் பாரு.. சிவந்துதான் இருக்கு.. ஆனா நீ சொன்னதுல அர்த்தமே இல்லைன்னு ஆயிடுச்சேம்மா..”
