அநுத்தமா/திண்ணை

வெற்றிலை பாக்குத் தட்டடை எடுத்துக் வைத்து கொண்டு உட்கார்ந்தேன். “அம்மா, சுத்தி இருக்குதுங்களா?” என்றான் மின்சார ரிப்பேர்க்காரன்.
“ஏன் அப்பா, உங்கள் வேலைக்கு வேண்டிய சாமான்களைக் கூடக் கொண்டு வரக்கூடாதா?” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்தேன். அதை எடுத்துக் கொடுக்காவிட்டால் அவன் அதே சாக்காகப் போய் விடுவான். மாடி அறைக்கு இன்று விசிறி போட்டாகாது. ஆயிற்று, இதோ நாளைக்கு எல்லோரும் திடுதிடுவென்று வந்து இறங்கி விடுவார்கள். பிறகு திமிலோகந்தான்.
வெற்றிலையைத் துடைத்துவிட்டுச் சுண்ணாம்பு தீற்றினேன். டொக், டொக் என்று கம்பை நாட்டிக் கொண்டு வந்துவிட்டாள் என் அத்தை, என் மாமியார்.
“அத்தை, சற்றுப் படுத்துக் கண் அயரக்கூடாதா? ராத்திரி கூடத் தூங்கவில்லையே!” என்று கூறிக்கொண்டே எழுந்தேன். அவசர அவசரமாக இரண்டு வெற்றிலையைக் கிழித்து வாயில் திணித்துக்கொண்டு ஒரு பிடி பாக்குப் பொடியையும் போட்டுக்கொண்டேன். அதற்குள் அத்தையின் கம்பு வெற்றிலைத் தட்டில் ‘டொங்’கென்று ஊன்றிச் சுண்ணாம்புக் கரண்டான் ஒரு புறமும் பாக்குக் கிண்ணம் ஒரு புறமுமாகப் பறக்க அடித்துத் தாம்பாளத்தை ஒரு தட்டாமாலை ஆட்டி விட்டது.
“அத்தை, இப்படி வா. எதிரே கம்பம். முட்டிக்கொள்ளப் போகிறாய்?” என்று சொல்லிக் கொண்டே மெதுவாகக் கையைப் பிடித்து வழியாகத் திருப்பினேன்.
“எங்கே போனாலும் சாமான். இந்தப் பசங்கள் கையை முறிக்க வேண்டும்!” என்றாள் அத்தை.
“எங்கே, நீயும் ஓர் இடமாகச் சிவனே என்று இருக்க மாட்டேன் என்கிறாயே; சற்று அலுப்புத் தீரப் படுக்கக் கூடாதா?” என்றேன்.
களிவு சொட்டாவிட்டாலும் எரிச்சலாவது தெரியாமல் இருக்கப் பாடுபட்டேன்.
“ஆமாம்; படுத்துக்கொள்ளத்தான் திண்ணை சௌகரியமாக வைத்திருக்கிறீர்களே! இடித்துக் கொட்டி விட்டானே உன் அகமுடையான்; என் தலையிலே கொட்டுகிறாப்போவே! கட்டையைப் போடச் சாண் இடமில்லை,” என்றாள் அத்தை.
நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பொறுமையாகக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கூடத்தில் அவளுக்கென்று பிடித்து இருந்த விசிப்பலகையில் படுக்க வைத்து, கூரையில் தொங்கிய மின்விசிறியை முடுக்கி விட்டேன். சற்று நேரம் அவள் பக்கத்தில் அமர்ந்து கையைத் தடவினேன். அவள் உறங்கி விட்டாள். இன்னும் எத்தனை நிமிஷமோ விழிக்க!
“மீனு! மீனு!”
மீனும் முதலையும்! அதிகாரத்தைப் பார்க்கவில்லை. என் அத்தையின் அருமைக் கைக்குழந்தை; என் கணவரின் அதிகாரக் குரல்தான் அது.
“மீனா! ஓ!”
“என்ன?”
“ஒரு தம்ளர் ஜில்லென்று ஜலம் கொண்டு வா. குடிக்க. நல்ல பெண்ணாமே நீ!” வேடிக்கைக்கு என்ன குறைச்சல்! காரியம் ஆகவேண்டுமென்றால் எல்லோருக்கும் இந்த மீனா, மீனாவாகவும், மீனுக்குட்டியாகவும் கூட ஆகிவிடுவாள்.
குடிக்கத் தண்ணீரைக் கொண்டு நீட்டினேன். அப்பொழுது எங்கிருந்தோ காத்துக்கொண்டிருந்த சதிகாரன் மாதிரி என் சின்னப் பிள்ளை முரளி வந்து சேர்ந்தான். என் காலைக் கட்டிக் கொண்ட அழகு; தண்ணீர் அனைத்தும் அப்படியே என் கணவர் மீதும், அவர் படித்துக் கொண்டிருந்த பத்திரிகை மீதும் அபிஷேகமாகி விட்டது.
“இடியட்!” என்று கோபத்தோடு எழுந்தார் அவர்.
“இடியட் நானல்ல. இதோ இருக்கிறதே இந்தப் பிசாசுதான்,” என்றேன் நானும் சுடச்சுட.
“அம்மா, அம்மா, அம்மா! பாபுவுக்கு மட்டும் ஆறு கம்பி மத்தாப்பும், மூன்று பட்டாசுக் கட்டும் கொடுத்திருக்கிறாயே…”
“அம்மா, எனக்கு மட்டும்…” என்று அவன் காலை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
“அம்மா, அவனுக்கு விஷ்ணுசக்கரம் அஞ்சு கொடுத்தாயே, அம்மா. அது மட்டும் என்னவாம்?” என்று கேட்டபடியே கையை நீட்டிக்கொண்டு வந்தான் பாபு.
“இரண்டு பேருமே எடுத்துக் கொண்டு விட்டார்கள், அம்மா. எனக்கு ஒன்றுமே இல்லை,” என்றாள் என் பெண் சுதா. நான் இரண்டு காதையும் கையால் பொத்திக் கொண்டேன். தலை வெடித்து விடும்போல் இருந்தது. மாடியில் வேறு அவன்; என்னத்தையோ இடித்துத் தும்சம் செய்கிறான் போலும்.
“மீனு, மாடி அறையை வேலைக்காரர் போன பிறகு சுத்தமாக அலம்பி விடச் சொல்,” என்றார் கணவர்.
“அம்மா, எனக்கு மத்தாப்பு.”
“எனக்கு…”
பொறுமை வெடித்தது. இந்த ரகளையைப் பார்த்தும் பேசாமல் வேஷ்டி மாற்றுவதும், அலம்புவதற்கு ஆணைகள் பிறப்பிப்பதுமாக நிற்கிறாரே என் கணவர் என்று அவர்மீது பற்றிக் கொண்டுதான் வந்தது. கையில் கிடைத்த குழந்தைகளைப் பிடித்தேன். யார் முதுகு, யார் தலை என்று பார்க்காமல் ஆத்திரத்துடன் போட்டுவிட்டேன். அவர் என் கையைப் பிடித்தார்.
“என்ன மீனு, புத்தி கித்தி கலங்கிவிட்டதா? குழந்தைகள் தீபாவளிச் சமயத்திலே பட்டாசு கேட்காமல் இருப்பார்களா? உன்னைத் தவிர யாரைக் கேட்பார்கள்?” என்று அவர் கடுமையாகப் பேசினார். குழந்தைகளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
எனக்குத் துக்கம் புடைத்துக்கொண்டு வந்தது. பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்று வந்துவிட்டேன்.
ஆமாம், அவர்களுக்காவது நான் இருக்கிறேன்-நச்சரித்துக் கொல்லப்பட. அவர் இருக்கிறார் அவர்களை அணைக்க. எனக்கு யார் இருக்கிறார்கள்? இனி யாருக்கும் சொல்கிறேன்: அத்தை மகனை மணக்கவே கூடாது. அதிலும் தாய் தந்தை அற்ற பெண்களை எடுத்து வளர்த்த அத்தையின் பிள்ளையை மணப்பது மாதிரி விடுபடாத சிக்கலில் மாட்டிக்கொள்வது போலத்தான்; ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது.
தாமரைக் குளத்திலே கால்வைத்தால் மேலே பார்த்தால் ரம்மியமாக இருக்கும். ஆனால்-
“கடலைமாவை எடுத்துக் கொடுக்காமலே வந்துவிட்டீர்களே, அம்மா; அடுப்பு வீணாகிறது” என்று அன்று எனக்கு ஒத்தாசைக்காகவந்திருந்த சமையற்கார அம்மாள் கேட்டாள். மௌனமாகவே
கடலை மாவு டப்பாவை எடுத்துக் கொடுத்தேன்
“சலித்துக்கொள்ள வேண்டுமா?” இப்படி ஒரு கேள்வியா?
நான் சல்லடையை எடுத்துக்கொண்டு பின் பக்கம் போனேன் . மாவைச் சலித்துக் கொடுத்துவிட்டு, கும்மட்டியிலே மைசூர்ப்
பாகுக்காக உருளியைப் போட்டேன்.
‘டொக், டொக்!’
“என்ன அத்தை?”
“என்ன செய்கிறாய்? எங்கேயோ போய் விடுகிறாயே; குடிக்கத் தண்ணீர் வேண்டும்.”
நான் ஒரு தம்ளர் தண்ணீரை மொண்டு எடுத்துக் கொண்டு வந்து அத்தையைப் பிடித்து ஒரு நாற்காலியில் அமர்த்திக் குடிக்க வைத்தேன்.
“இங்கேயே இரு. அத்தை. இங்கே பார், அடுப்பு மூட்டி வைத்திருக்கிறேன். பேசாமல் ஒரே இடடமாக இரு. கூப்பிடு, நான் வருகிறேன். இங்கேதான் எதிரேயே இருக்கிறேன்.”
“ஆமாம்; ஒரே இடமாக இருக்கிறதுக்குச் சவரணையாகத் திண்ணை வைச்சிருக்கிறாயே!”
அத்தைக்கு வயசு எண்பது. இரண்டு வருஷமாகக் கண் மங்கிக் கொண்டே வந்தது. ஆபரேஷன் செய்தும் பயனில்லை. இரண்டு கண்களும் தெரியவில்லை. புத்தி மாறாட்டமாகி விட்டதோ என்னவோ? ஆபரேசன் ஆனவுடனே ஜுரம் வந்தது. எழுந்தது முதல் இதேதான். ஆனால் அத்தைக்கு மட்டும் இடைகழித் திண்ணையை இடித்ததிலே முதலிலிருந்து விருப்பமில்லை. முதலில் ஆட்சேபித்துவிட்டும், பிறகு பேசாமலும் இருந்தாள். இப்பொழுது அதுவே அடிமனத்திலிருந்து எழும்பிவந்து சதா என் முன்னே ராட்சச ஆட்டம் ஆடுகிறது. திண்ணையை இடிக்காமல் என்ன செய்வது? பழைய காலத்திலே இடைகழித் திண்ணையும், வாசல் திண்ணையும் அப்போதைச் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு நன்றாக இருந்தன. இப்பொழுது என்ன செய்கிறது? அந்த இடை கழித் திண்ணையை இடித்துத் தள்ளிவிட்டு, ஒரு சுவரை எடுத்து நகர்த்திக் கட்டின பிறகுதான் அங்கே ஒரு நல்ல காற்றோட்டமான அறை கிடைத்தது. சோபா செட் போட்டு அலங்காரமாக இருக்கிறது.
நாலு பெரிய மனிதர்கள் வந்தால் கௌரவமாகவும் சௌகரியமாகவும் இருக்கிறது. அத்தைக்கு அதெல்லாம் தெரியாது. அப்பொழுது தெரிந்துதான் அத்தை படுப்பது வழக்கம். போட்டு அதில் மெத்தென்று மெத்தை தைத்து, மான்தோல் போட்டு மூடிச் செய்திருக்கிறோம். திருப்தியாக இருந்தாள். புத்திக்கு மாறாட்டம் வந்தது. திண்ணையைக் கொண்டு வா என்கிறாள்.
“மீனா !”
யார்? அடுத்த வீட்டு அம்புலு மாமி வந்திருக்கிறாள்.
“வாருங்கள் மாமி,” என்று அழைத்தேன், அடுப்பில் கிளறியபடியே.
“மைசூர்ப்பாகு மணக்கிறதே! மாப்பிள்ளை வருகிறாராக்கும்.”
“ஆமாம்; நாளைக்கு வந்துவிடுவார்கள். பெரிய அத்தானும் மன்னியும் குழந்தைகளும், சாயங்காலம் பெண், மாப்பிள்ளை, சம்பந்தி வருவார்கள்.”
“உன் அத்தை எப்படி இருக்கிறாள்?”
“அதோ நாற்காலியில் இருக்கிறாள், பாருங்கள். கண் தெரியவில்லை. கட்டிப்போட்ட மாதிரி இருக்கிறது.”
“கட்டிப் போடுவானேன்? நிம்மதியாகத் தலை சாய்க்க இடம் இல்லை. திண்ணையை இடித்துக் கொட்டி விட்டாள் மகராஜி!”
“திண்ணையை இடித்திருக்கக் கூடாது, மீனா. பாவம்! அதே மனசை உலுக்குகிறது.”
“திண்ணையை இடிக்காமல் என்ன செய்வது? இதோ மாப்பிள்ளை வரப்போகிறார். கலெக்டர் மாப்பிள்ளை வந்தால் அவரை அடுக்களையிலே பெஞ்ச் போட்டு உட்கார்த்தலாமா? இல்லை, அவர் சகஜமாக நம்மோடு கூடத்திலே இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைப் பார்க்க நாலு பேர் வருவார்கள்.”
“இருந்தாலும் திண்ணையை இடித்திருக்கக் கூடாது.”
சரி, இவர்களுடன் பேசிப் பயன் இல்லை. மைசூர்ப்பாகுக்கு பருப்பு வறுக்க ஆரம்பித்தேன். அம்புலு மாமி போனாள். சாவித்திரி மாமி வந்தாள். இறக்கிக் கொட்டிவிட்டு, இரும்புச் சட்டியைப் போட்டு முந்திரி வறுக்க ஆரம்பித்தேன். அப்பொழுது அத்தை எழுந்து அடுப்படிக்கே வந்து விட்டாள். மெதுவாக அவளைப் பிடித்துத் திருப்பினேன். மாட்டேன் என்று மறுக்கிறாள்.
“அத்தை, எனக்குத் தலைக்கு மேலே வேலை இருக்கிறது. நீ வேறே தொல்லை கொடுக்கிறாய். வா, வாசல் பக்கம் வந்து கொஞ்சம் உட்கார். பாபு, முரளிக்குக் கதை சொல்லேன்.”
திரும்பிவிட்டாள். ஆனால் சாவித்திரி மாமி இளகவில்லை.
“எங்கேடி குழந்தைகள்?” என்று கேட்டுக்கொண்டு அத்தை உதட்டை மடித்துக்கொண்டு, இடுப்பில் கையை வைத்தபடியே என்னையே பார்த்து நின்றாள்.
“மீனா, அதட்டாதே. வயசு ஆகிவிட்டது. பாவம். ரத்தக் கலப்பு மனுஷி நீ. நீயே இப்படிப் பேசினால் எப்படி? பொறுமையாக இரு. அவளுக்கோ இரண்டும் பிள்ளை. பெண் இல்லை. நாளைக்கே நீயும் இந்த நிலைக்கு வந்தால்…”
“வேலை இருக்கிறதே, மாமி. அத்தையை நான் கோபித்து கொள்ளவில்லை,” என்றேன். என் கண்ணில் நீர் முட்டிற்று. தேள் கொட்டியது போல் தைத்தது. ஆனால் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்குப் பதில் அளித்தேன். ஒரு கதையில் ஒரு வாக்கியம்கூடச் சொல்லப் போவதில்லை அத்தை. இதோ வந்துவிடப் போகிறாள் ‘டொக், டொக்’ என்று. இவர்கள் எனக்கு உபதேசம் அளித்துச் சாபம் கொடுக்கிறார்கள்.
“தேங்குழல் பிழிய வேண்டுமா? ஓமப்பொடி போதுமா?” என்று சமையற்காரி அம்மாள் கேட்டாள்.
“தேங்குழல் தான் மாப்பிள்ளைக்கு மிகவும் பிடிக்குமாம். எங்கள் பெண் எழுதியிருக்கிறாள்,” என்றேன்.
“மீனு!” என் கணவர் குரல் கேட்டு எழுந்தேன். அப்பொழுதே குடிக்கத் தண்ணீர் கேட்டார். குழந்தைகள் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் கண்ணில் நீர் நிரம்பிக் கொண்டுவந்துவிட்டேன். இப்பொழுது மனம் குறுகுறுவென்றது. ஒரு தம்ளர் குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு, “மாமி, காபிக்கு ஜலம் வைத்துவிடுங்கள்,” என்று பணித்து விட்டு முன் பக்கம் விரைந்தேன்.
“அப்பொழுதே கேட்டீர்கள். இந்தப் பிசாசுப் படை படுத்தின பாட்டிலே…”
“தாயைப் போல் மக்கள். நூலைப் போல் சேலை.”
“இருக்கட்டுமே; அப்படித்தான்.”
“புடைவைக்காரர் வந்திருக்கிறார்? ஏதாவது எடுக்கப் போகிறாயா?”
“ஆர்டர் கொடுத்தது வந்திருக்கும். வாங்கி வைக்கக்கூடாதா? இதற்கு என்னைக் கூப்பிட வேண்டுமா?”
“ராணியம்மா உத்தரவின்றி ஒன்றுமே நடப்பதில்லையே இந்த வீட்டிலே!”
“சரிதான். கையிலே என்ன தந்தி?”
“அண்ணாவும் மன்னியும் இப்பொழுதே வருகிறார்களாம். காரை ஸ்டேஷனுக்குக் கொண்டு வரச் சொல்கிறார்கள்.”
“சந்தோஷம்!” என்று முணுமுணுத்தேன்.
“என்ன சொன்னாய்?” கடுமையாகிவிட்டது அவர் குரல்.
“பெண் மாப்பிள்ளையோடு வராமல், அந்த மட்டும் இப்போது வருகிறார்களே – சந்தோஷம்,” என்று விளக்கினேன்.
“உனக்கு வேலை செய்யக் கையால் ஆகவில்லை. அவர்களை ஏன் குறை கூற வேண்டும்? போ போ, காபி போடு.”
“புடைவைகள்? நீங்கள் வாங்கி வைக்கிறீர்களா?”
“ஓகோ! வாங்கி வைத்துவிட்டு, கையோடு எலக்டிரிக்காரனுக்கு ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டு போ, மீனு.”
புடைவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நான் நிமிர்ந்தேன்.
“மீனு, முரளிக்கும் பாபுவுக்கும் நல்ல துணிமணி போடேன். கூட அழைத்துக் கொண்டு போகிறேன்,” என்றார் அவர்.
பீரோவிலிருந்து இரண்டு நிஜாரும் சட்டையும் எடுத்து, பாபு முன் போட்டுவிட்டு, புடைவைகளை எடுத்துவைத்து நான் கிளம்பினேன்.
“அம்மா, வேலை ஆகிவிட்டது!” இது மின்சாரக் கம்பெனிக்காரன்.
“இதோ ஐந்து ரூபாய்.”
‘டொக், டொக்!’
“அத்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்களேன். காபி போட்டுவிட்டு நான் ஓடி வந்துவிடுகிறேன்,” என்று கெஞ்சினேன்.
வேறே வழி?
“அம்மா, இங்கே வா. என்கிட்டே உட்கார். இன்றைக்கு அண்ணா வருகிறான்.”
“வரட்டுமே. உட்கார இடம் கிடையாது. திண்ணையை உடைத்து எறிஞ்சாச்சு.”
நான் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்ததும் அவர் வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார். பாபுவும் முரளியும் முதலிலேயே காரில் போய் உட்கார்ந்து விட்டார்கள். அத்தை பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவர் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி
விட்டு, “அண்ணா வந்தால் உட்கார இடம் இல்லை” என்றார்.
அத்தை உரத்த குரலில் ஆரம்பித்து விட்டாள். அவர் பாட்டுக்கு விளையாட்டாகப் பேசிப் போய்விட்டார். அத்தையை அடக்கவே முடியவில்லை.
“அப்பா படுத்துக்கொள்கிற இடம். அநியாயமா இடித்து விட்டானே! உட்கார இடமில்லாமல் ‘நில்லுடி நடுத் தெருவிலே’ என்று கறுவிவிட்டான். திண்ணை…”
அத்தையை ஆசுவாசப்படுத்தி ஒரு விழுங்கு காபியும் கொடுத்துப் பட்சணமும் கொடுத்தேன். அத்தைக்குக் கண்தான் கோளாறு; காது, பல் யாவும் நன்றாக இருந்தன. எப்படி இருந்த அத்தை! இன்று இப்படி இந்த வீட்டில் தலை தீபாவளி நடக்கப் போகிறது என்றால் எப்படிப் பம்பரமாகச் சுழலுவாள்! என்ன நிர்வாகத் திறன்! எத்தனை அன்பு! என்னை வளர்த்துப் பெரியவளாக்கித் தன் வாரிசுக்கு வீட்டுக்குச் சேர்த்துவிட்டாள். எவ்வளவு விமரிசையாக என் நாத்தனார் கல்யாணங்கள், என் கல்யாணம் எல்லாம் நடந்திருக்கும்! இப்பொழுதோ சதா…
“ஏனடீ..”
வாயில் வராத வசைச் சொற்களை எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்து என் மீது வீசுகிறாள். உறக்கம் போய்விட்டது. இதே புலம்பல், இதே சத்தம். இரவானால் குரல் எங்கிருந்தோ எழுப்பிவிடுகிறதே! பூட்டி வைக்க வேண்டி வருமா? கடவுளே! அதை விட நீ அத்தையை அழைத்துக்கொண்டு விடு.
“செத்தால்கூட நெஞ்சு வேகாது. நீங்கள் திண்ணையை இடிச்சிருக்கக்கூடாது.”
அக்கம்பக்கத்தினர் சுலபமாகச் சொல்லி விடுகிறார்கள். வேண்டு மென்று அத்தையைப் பழி வாங்கவா நாங்கள் இடித்தோம்? வேறு வழி?
சுற்றுப்புறத்தோடு தோட்டத்தோடு இருந்த பங்களா வீட்டை விட்டு இங்கு வந்தது அத்தைக்காகத்தான். தன் வாழ்நாளில் பெரும்பாலும் இருந்த பூர்வீக வீட்டுக்கு வர வேண்டும் என்றாள். வந்தோம். தெருவீடு, கார் விட இடம் இல்லை. மதிப்புக்காகவும் கொஞ்சம் வசதிக்காகவும் ஒரு திண்ணையை இடித்துவிட்டால்.!
“மீனா சண்டாளி!”
“என்ன, அத்தை?”
“திண்ணையை இடித்து வாரிவிட்டாயே! நான் எங்கேடி நிற்கிறேன்?”
நான் என்ன பதில் சொல்வது? நல்ல காலம், அதற்குள் பெரியப்பா, பெரியம்மாவையும் தமக்கைகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள்; முரளியும் பாபுவும்.
“அத்தை, பெரிய அத்தான் வந்திருக்கிறார். பார்த்தாயா? குழந்தைகள் – சுதா, மது, ரேகா எல்லோரும்…”
“எதோ?”
“இதோ பாட்டி,” என்றான் முரளி, அவள் கையில் ஒரு திராட்சைப் பழத்தைத் திணித்தபடியே.
“வரட்டும். திண்ணையை இடித்துவிட்டாயே. சொல்கிறேன் – உன் கையை முறித்து…”
திண்ணை! திண்ணை! திண்ணை! எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் தலை சுழலுகிறது. பேசாமல் இந்தத் தலை தீபாவளியை டில்லியிலேயே செய்திருக்கக் கூடாது இவர்கள்? இங்கே வந்து என் பிராணனை எடுக்கிறார்கள். வருகிறவர், போகிறவர் மத்தியில் அத்தையை எப்படிப் பாதுகாப்பதோ? எத்தனை பேர் இன்னும் இடித்துக் காட்டுவார்களோ, கேலி செய்து சிரிப்பார்களோ?
“வாங்க, மன்னி,” என்றேன்.
“ஏனடி, மீனா? மிகவும் சோர்ந்து கிடக்கிறாய்?” என்று கேட்டாள் என் ஓரகத்தி.
“பத்து நாட்களாக அத்தைக்கு அதிகம் தூங்குவதில்லை, மன்னி.”
பெரிய அத்தான் வந்துவிட்டார். “என்ன, மீனா? ஏற்பாடெல்லாம் பலே ஜோராகச் செய்துவிட்டாயே! மாடி ரூம் நன்றாக இருக்கிறது. கூட ஒட்டினாற்போல் பாத்ரூம்…”
“கலெக்டர் மாப்பிள்ளை வந்தால்…” என்று நான் சிரிக்க முயன்றேன். ஆயாசம் என்னைக் கவ்விக் கொண்டது.
எல்லோருக்கும் காபி, பலகாரத்துடன் முன்கட்டுக்கு வந்தேன். குழந்தைகள் ஒரு பக்கமாகச் சூழ்ந்து கொட்டம் அடித்தனர்.
பெரியவர்கள் ஒரு பக்கம் குழுமியிருந்தனர். என்னைக் கண்டதும் எல்லோரும் என்னைச் சுற்றித் தரையிலேயே அமர்ந்துவிட்டனர்.
“மீனாவுக்கு உடம்பு சரியாக இல்லையா, என்னடா?” என்று பெரிய அத்தான் தம்பியைக் கேட்டார்.
“அவளுக்கு என்ன இப்போது?” என்றார் இவர்.
என் களைப்பை விட அவர் பதில் என்னைச் சித்திரவதை செய்தது.
“இல்லை, மீனா. தீபாவளி ஆனதும் நீ எங்களுடன் வந்துவிடு. கொஞ்ச நாள் ஓய்வு வேண்டும். சே சே! உடம்பு சத்தக் கேடாக இருக்கிறதே! இளைத்துக் கறுத்துக் கன்னம் குழி விழுந்து…”
“நான் எங்கே போவது அத்தையை விட்டு? அத்தைக்கும் என்னை விட்டால் இல்லை; எனக்கும் அவளை விட்டால் இல்லை,” என்று முணுமுணுத்தேன்.
எல்லோரும் பலகாரம் முடிந்ததும் புடைவைகளைப் பார்வையிட ஆரம்பித்தனர். நான் இரவுச் சமையலுக்கு ஏற்பாடு செய்யப் பின்புறம் சென்றேன். அங்கே காத்துக் கொண்டிருந்தார் என் கணவர் தயாராக.
“உனக்கு மூளைக் கோளாறா? அவர்கள் வந்து இறங்கினதும் இறங்காததுமாக அப்படிப் பேசுகிறாயே; மன்னிக்கு உடம்பு சரியில்லை. நீ…”
“நான் சொன்னது அவர்கள் காதில் விழுந்திருக்காது,” என்றேன். எனக்கே வெட்கமாக இருந்தது என் செய்கை.
“மறுபடியும் இப்படி ஏதாவது அசட்டுப் பேச்சுப் பேசினால் பார்.”
“என்னால் முடியவே இல்லை. உடம்பு தள்ளவில்லை.”
“கூட இரண்டு ஆள் போட்டுக்கொள். அதற்காக?”
நான் அதற்குப் பிறகு சற்று ஜாக்கிரதையாகவே இருந்தேன். வராத புன்சிரிப்பை இழுத்துப் பூசிக் கொண்டேன். இல்லாத சுறுசுறுப்பை முடுக்கி விட்டுக் கொண்டேன்.
“மீனா, அம்மா என்ன, இதே திண்ணைப் புலம்பல்தான?” என்று கேட்டார் பெரிய அத்தான்.
“என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த இடமெல்லாம் புதியதாகக் கட்டி அமைத்தாகிவிட்டது. பழைய ரேழி இருந்தாலும் திண்ணையைக் கட்டியாவது விடலாம்.”
“நீ பேசாமல் இரு, நான் வழி பண்ணுகிறேன்,” என்றார் அத்தான்.
அன்று இரவே இரண்டு கொல்லத்துக்காரர் ஒரு வண்டி செங்கல், சிமெண்டு, மணல் எல்லாம் வந்து சேர்ந்தன. காலையில் புழக்கடையில் ஒரு பெரிய திண்ணை அடைத்துக் கொண்டு நின்றது. அதன் மீது கோணி போர்த்தி, தண்ணீர் தெளித்து, காப்பாற்றினோம் – நான்கு நாட்களில்.
தீபாவளி நாளும் வந்தது. சம்பந்திகள் முதல் நாள் மாலை, வத்து சேர்ந்தனர். எப்படியோ ஏற்பாடுகளில் ஒரு தகராறும் இல்லாமல் செய்து முடித்துவிட்டேன். பெண் குழந்தைகள் வேறு இருந்தன. வீடு கலகலப்பாக இருந்தது. “சித்தி, சித்தி” என்று என்னைச் சுற்றி வளைய வந்து உதவி செய்தனர்.
திண்ணை நன்றாகக் கெட்டிப் பட்டுவிட்டது. அத்தையை மெதுவாக அழைத்து அந்த இடத்தில் அமர்த்திவிட்டோம். உடலைப் பாதிக்காமல் இருக்க ஓர் ஊஞ்சல் பலகையைப் போட்டு அதில் உட்கார்த்திவிட்டோம்.
அத்தையின் கூச்சலும் அடங்கியது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
நான் போய், “அத்தை, மாப்பிள்ளை உனக்கு நமஸ்காரம் செய்ய வந்திருக்கிறார்,” என்றேன்.
“நான் திண்ணையிலேயே இருக்கிறேன்; இங்கே வரச் சொல்,” என்றாள் மெதுவாக.
“நீதான் அங்கே வா, அத்தை,” என்றேன்.
“திண்ணையை விட்டா? ஏனடி, கண் தெரியவில்லை. அப்பா இங்கேதான் படுத்துக்கொள்வார். பெரிய சரீரம்; காலை நீட்டினால் எதிரே சுவரிலே போய் இடிக்கும். ராஜா குழந்தையாக இருந்த போது இங்கேயிருந்து மண் வெட்டியைத் தூக்கிப் போட்டான். காரை கூடப் பெயர்ந்து இருக்கிறது, பார்,” என்று அத்தை துழவினாள். புத்தம் புதிய திண்ணையில் எங்கே கிடைக்கப் போகிறது?
“இதோ இருக்கிறது,” என்று புளுகினேன்.
அத்தை தேடவில்லை.
நானும் நிம்மதியாக உட்புறம் சென்றேன். அத்தை இப்பொழுதும் ஏதோ பேசிக்கொண்டாள். உரக்கக் கத்தவில்லை. வசைகள் பொழிவில்லை.
“பெரிய அத்தான், நீங்கள் டாக்டராக இருப்பது இன்றுதான் மிகவும் உதவியது. அத்தையைக் குணப்படுத்திவிட்டீர்களே!” என்றேன்.
“அவள் வெறும் திண்ணையைத் தேடவில்லை, மீனு,” என்றார் அத்தான்.
அதற்குள் யாரோ கூப்பிட்டார்கள். அவர் போய்விட்டார். நான் மட்டும் அத்தையையும், அவள் துழாவும் திண்ணையையும் பார்த்தபடி நின்றேன்.
அத்தையின் திண்ணை – இந்தச் செங்கல்லும் சிமெண்டும் சேர்த்துக் கட்டப்பட்டது அல்ல. அனுபவம் என்ற கல்லை வைத்து, , ஆசை என்கிற சாந்தைப் பூசி கட்டிய அந்தத் திண்ணையைத் தேடினாள் அவள்.
வயது முதிர்ந்த பிறகு ஒரு தனிமை யாருக்கும் வரும். வரத்தான் வரும். உடன் இருந்து பழகிய கணவர் போய்விட்டார். பெற்ற குழந்தைகள் பெரியவர்களாகிப் பராமரிப்பின் பிடிக்கு எட்டாமல் போய்விட்டனர். தனக்கு ஒரு மனத் தண்மையைக் கொடுக்கப் பற்றுக்கோல் – பழகிய ஆசைகள், பாசங்கள் யாவும் தான்.
கட்டின புருஷனின் நினைவு, அந்தத் தோழமை, பெற்ற குழந்தைகளின் பாசம் – யாவற்றுக்கும் இருப்பிடமாக இருந்தது அந்தத் திண்ணை. அத்தையின் அடிமனத்தில் வேரூன்றிய பற்றுதான் இப்பொழுது வெளிவந்து விட்டது. அன்பினால் எழுப்பப்பட்ட அந்தத் திண்ணைதான் ஆதாரமாக இருந்தது.
“சித்தி, மாப்பிள்ளை கூப்பிடுகிறார். உங்களோடு நின்று நாங்கள் படம் பிடித்துக் கொள்ள வேண்டுமாம்,” மூத்த பெண் மது அழைத்தாள்.
நான் அத்தையை ஒரு முறை பார்த்தேன். திண்ணையைத் தடவிக்கொண்டே என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். நான் என் பெண்ணைத் தொடர்ந்து முன்பக்கம் போனேன்.
மாப்பிள்ளையும் சம்பந்திகளும் மிகவும் சந்தோஷமாகப் பேசினார்கள். அவர்கள் இருந்த மூன்று நாட்களும் எப்படிக் கழிந்தனவோ – கனவாக இருந்தது. முன்னால் கவலைப்படுவதும் பாடுபடுவதும். பெரியனவாக இருக்கின்றனவே தவிர, நடக்கும் போது நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடந்துவிடுகின்றன. தெருவில் குழந்தைகள் பட்டாசு வெடித்தது . வெடித்தபடி தமக்கைகளுடன் ஐக்கியமாகி விட்டனர் போலும்.
அவர்கள், சம்பந்திகள் ஊருக்குப் போன பிறகு, கூடத்தில் விசிறியை முடுக்கிவிட்டு உட்கார்ந்தேன். மன்னியும் வந்து அமர்ந்து என் இரு கைகளையும் எடுத்துக் கொண்டாள்.
” என் தங்கைகளும் இருக்கிறார்கள், மீனா. டில்லியிலே பக்கத்திலே இருந்தும் கூட ஒத்தாசைக்கு வரவில்லை. நீ முழுப் பொறுப்பையும்…
ஏற்றுக்கொண்டு எப்படித்தான் நடத்திவிட்டாய்? சம்பந்தியம்மாள் வேறே உட்காரச் செய், அதைக் கொண்டு வா, இதை வை என்று ஆர்ப்பாட்டம் செய்கிறாள். நீயும் சளைக்காமல் சிரித்துச் சிரித்து செய்து முடித்தாயே, அம்மா! உனக்கு நான் எப்படி…”
“அழகாகத்தான் இருக்கிறது, மன்னி. யார் வீட்டு வேலை இது? நான்தானே! இந்தப் பஞ்ச காலத்திலே பெண்டாட்டி, பிள்ளைச் சோறு நான் பதில் சொன்ன போது எனக்கே பெருமையாக இருந்தது.”
“எங்கள் மீனாவை என்னவென்று நினைத்துவிட்டாய் நீ?” என்றார் என் பெரிய அத்தான்.
எனக்குப் பொற்கிரீடம் வைத்தது போல இருந்தது அந்தப் பேச்சு. அவ்வளவு அன்பு, ஒற்றுமை. நான் முன்னே சொன்னது தவறு. அத்தை மகளை மணந்து கொண்டாலன்றி இந்த ஒற்றுமை வராது.
“மீனா, எங்களோடு வந்துவிடு. உடம்பு சற்றுத் தேறிய பிறகு.”
“எப்படி, அத்தான், வர முடியும்? என் அத்தையும் நானும் வருவதானால் இரண்டு கொல்லன், ஒரு வண்டி செங்கல்,” என்று கேட்டுவிட்டு கலகலவென்று சிரித்தேன்.
எல்லோரும் கூடச் சிரித்தனர்.
“அன்பினாலே, அன்புக்காக, நாம் எல்லோரும் ஒருவர் மனத்தில் ஒருவர் திண்ணை எழுப்பிக்கொண்டால் அதைவிட ஆதாரம் தேவையே இல்லை. அம்மா உன்னிடம் இருப்பதில் மனம் எவ்வளவு மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறது தெரியுமா?” என்றார் அத்தான்.
“உங்கள் அம்மாவுக்கு வயசாகிவிட்டது. பற்றுப்பிடித்து ஆட்டுகிறது,” என்றாள் மன்னி, ஒன்றும் புரியாமல்.
“அந்தப் பற்று வாழட்டும், மன்னி. அன்புப் பற்றுதான் உலகத்தை வாழ வைக்க வந்த பசை,” என்றேன்.
என் அத்தையும் திண்ணையும் எனக்கு அன்புத் தெய்வம் போலக் கோயில் வாண வேடிக்கையில் பூ உதிர்ந்தது. கோயிலும் போல தோற்றம் அளித்தது. என் பேச்சை ஆமோதிப்பது குழந்தைகளின் கொட்டம் காதைப் பிளந்தது. உள்ளத்தின் விளக்கிலும் பொறி பறந்து சுடர் விட்டது.

கலைமகள், தீபாவளி மலர் – 1960.

One Comment on “அநுத்தமா/திண்ணை”

  1. மிக அருமையான கதை.எனக்கு என் பாட்டியின் நினைவு வந்தது.அந்த காலத்து மனிதர்கள் அப்படி தான் வாழ்ந்தார்கள். ஆசிரியர் அனுத்தமா கதையை கையாண்ட விதம் பிரமாதம்.

Comments are closed.