
கூத்து என்ற கலை நமது தொன்மங்களில் ஒன்று. தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் இவற்றில் அரங்க அமைப்புகள் , ஒப்பனை , வெளியீட்டு முறைகளுக்கு இலக்கணம் உண்டு
ஆனால் பல குழுக்கள் நாடகக் கலையை சிறுவர் முதற்கொண்டு அனைவரையும் உள்ளடக்கி வளர்த்தது 19 ஆம் நூற்றாண்டுகளின் இறுதி , 20 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில். எழுத்தாளர் , நடிகர்களை புதிதாக வந்த திரைத்துறைக்கு அளித்ததில் தொழில்முறை நாடகக் குழுக்களுக்கு பங்குண்டு.
புராணங்கள் , பாடல்களை மீறி , சமூக நாடகங்கள் 40 களில் ஆரம்பம் கண்டாலும் 50 , 60 களில் உச்சம் தொட்டது. தொழில்முறை குழுக்களுடன் அமெச்சூர் என்ற வேறு தொழிலை செய்து கொண்டிருந்த கலையார்வலர்கள் ஆரம்பித்த குழுக்களும் பிரபலமாக ஆரம்பித்தன.
பெரும்பாலும் ப்ரொசினியம் என்ற பார்வையாளர்களை அந்நியப் படுத்தி சட்டமிடப் பட்ட புகைப் படங்கள் போல நாடகக் காட்சிகள் விரிந்தன. வளர்வதற்கு பதில் துணுக்கு தோரணங்கள் , மாஜிக் ஷோ என்று நாடகங்கள் தங்கள் தரத்தை இழந்து ஃபோகஸ் இன்றி சென்னை சபாக்களின் கைங்கரியத்தால் ஒரு பத்து குழுக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன.
உலக அரங்கில் ஷேக்ஸ்பியர் தியேட்டர் ,ஓபரா ,மியூசிகல்ஸ் என்று ஒரு புரம் கிளாஸிக் பேணப் பட, அபத்த நாடகங்கள் என்ற வகை நாடகங்கள் சிறிதே புதிர்த் தன்மை கொண்ட வித்தியாச அணுகுமுறையில் பார்வையாளர்களுடன் , நடிகர்களின் பங்களிப்பை இணத்து வட்ட மேடை , தெரு நாடகங்கள் என்று தனது வெளியீட்டு முறைகளை நவீனமாக்கியது.
வங்காளம் , மராத்தி என்ற மாநிலங்களில் இந்த வகை அபத்த வகை நாடகங்கள் அங்கன் மஞ்ச் என்கிற வட்ட மேடை , தெரு நாடகங்கள் என்று புதுமைகளை அரங்கேற்றியது.
பாதல் சர்க்கார் நவீன நாடக தந்தை(Third Theatre) என்று போற்றப் படுபவர் ஸதாப்தி என்ற குழுவை ஆரம்பித்தார்.
தமிழில் இதன் தொடக்கம் ஞாநியின் பரிக்ஷா குழுவாலும், முத்துசாமியின் கூத்துப் பட்டறையாலும் பின் எழுபதுகளில் முன்னெடுக்க பட்டது.
எனது நாடகக் காதல் சிறு வயதிலிருந்தே என்னத் தொடர்ந்தது. பெரும்பாலும் பள்ளி நாட்களில் எல்லா மாணவ நாடக விழாக்களின் ( கலை?) நாடகங்களில் நானே நாயகன்.பிறகு பரிக்ஷா ஆரம்ப நாட்களில் இருந்து சுமார் ஆறாண்டுகள் இருந்து முட்டை , நாற்காலிக்காரர் , ஊர்வலம் நாடகங்களில் பங்கெடுத்தேன்.
வேலை நிமித்தமாக தொடரும் அதிர்ஷ்டம் இல்லாமல் போயிற்று.ஆனாலும் தொடர்பை இழக்காமல் இன்று வரை பார்வையாளனாக தொடர்கிறேன்.
நவீன நாடகத்துக்கு வாசல்களை திறந்த 70 களின் முக்கிய குழுக்கள் பரீக்ஷாவும் , கூத்துப் பட்டறையும்.
முத்துசாமி நாடக எழுத்தாளர்களில் முக்கியமானவர் முதன்மையானவர். இவருடைய நாடகங்கள் வேறுபட்டவை என்ற போதிலும் இந்த வகை என்று பகுக்க படுவதில் உடன்பாடற்றவர்.
இவர் எழுத்துக்களில் நவீனத்துவம், அபத்தம், சர் ரியலிசம், மேஜிகல் ரியலிசம், புராண இதிகாச கதைகளின் மறு உருவாக்கம் என்று கணக்கில்லாத வேறுபட்ட நாடகங்களை ஆக்கியும் , இயக்கியும் வெற்றி கண்டவர்.
இவர் நாற்காலிக்காரர் நாடகத்தில் 1981 இல் நான் நடித்த போது இவர் எனக்கு அறிமுகமானார்.
எனது பார்வையில் இந்தியாவின்( மேலை நாட்டு தழுவல்களும் சேர்த்து) மிகச்சிறந்த நவீன நாடகங்கள்
பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் ( 1963),
கிரீஷ் கர்னாடின் துக்ளக் (1964)
விஜய் டெண்டுல்கரின் ஷாந்ததா கோர்ட் சாலு ஆஹே (1967),
மோகன் ராகேஷின் அதே ஆதுரே (1969),
இந்திரா பார்த்தசாரதி யின் நந்தன் கதை (1973),
முத்துசாமியின் நாற்காலிக் காரர் ( 1976)
போன்றவைகளை நல்ல ஆரம்ப முயற்சிகளாக குறிக்கலாம்
உலக அளவில் என்னைக் கவர்ந்த அபத்த நாடகங்கள்
வழியில்லை (no exit) சாத்தர் 1944
வெயிட்டிங் ஃபார் கோடோ – சாமுவேல் பெக்கெட் – 1952
காண்டாமிருகம் – இயானெஸ்கோ- 1959
நிரபராதிகள் காலம் – ஸிக்ஃப்ரைட் லென்ஸ்-1961
போன்றவை
எனது நாடக ஆசான்கள் என்று நான் மதிப்பது பரீக்ஷா ஞாநி மற்றும் கூத்துப் பட்டறை முத்துசாமி
