கோவை எழிலன்/பாபம் போக்கும் இராம நாமம்

கோபத்தில் அகலி கைக்கு
கௌதம முனிவர் தந்த
சாபத்தைக் காலால் தீர்த்து
சனகனின் அவையில் தெய்வ
சாபத்தைக் கையால் தீர்த்து
சானகி தன்னை வென்ற
பாபத்தைப் போக்கும் இராம
நாமத்தைப் பாடு வோமே

குகனொடு விராதன், தீராக்
கொடும்பசிக் கவந்தன், தூய
அகனுடை சபரி, பொல்லா
அரக்கனின் தம்பி மற்றும்
பகலவன் மைந்தன் என்று
பலரையும் உய்விக் கத்தன்
நகரினை விட்டு பாதம்
நோகவே நடந்தோன் வாழி!

ஒருத்தனுக்(கு) உலகில் என்றும்
ஒருத்தியே இல்லாள் என்னும்
கருத்தினை வாழ்ந்து காட்டி
காதலின் இறையென்(று) ஆன
கருத்தகார் வண்ணன் ஆன
காகுத்தன் பெயரை நெஞ்சில்
இருத்தியே நாளும் வாயால்
எழிலுறப் பாடு வோமே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன