திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக்

திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக்.

லிவிங்ஸ்டனின் குடும்பம் ஓடிப்போய் ஹாஸ்பிடலில் சேர்க்கிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். லிவிங்ஸ்டனிடம் அத்தனை பணம் இல்லை. உடைந்து போகிறார்.

இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வழி தெரியாமல் முடங்கி விடுகிறார் லிவிங்ஸ்டன்.

அப்போது ரஜினியிடமிருந்து அழைப்பு வருகிறது. மனைவியின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார். பதினைந்து லட்சம் பணத்தை லிவிங்ஸ்டனிடம் கொடுக்கிறார்.

இன்று லிவிங்ஸ்டனின் மனைவி ஆரோக்யத்துடன் இருக்கிறார். இந்த சம்பவத்தை சொல்லும் போதே லிவிக்கு தொண்டை அடைக்கிறது.

ரஜினிக்கு ஒரு கஷ்டமான காலம் இருந்தது. ஓய்வில்லாமல் மூன்று ஷிப்ட்களும் ரெஸ்ட் இல்லாமல் நடித்து டிப்ரஷனும், நரம்பு தளர்ச்சியும் ஆட்கொள்ள நோயாளி போல் ஆன நேரம். தர்மயுத்தம் என்கிற படம் தொடங்கப்பட்டிருந்தது. அவர் அருகில் செல்ல இயக்குனர் ஆர்.சி.சக்தியே பயப்பட்ட நேரம். பின் பாலச்சந்தர் தலையிட்டு மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

ஒழிந்தார் ரஜினி என எழுதப்பட்டது. ரஜினியின் வளர்ச்சியை பிடிக்காத நாக்குகள் இஷ்டத்துக்கு பேசின. முடிந்தது ரஜினியின் ஆரவாரம் என சொல்லப்பட்டன. சிகிச்சை முடிந்து தர்மயுத்தம் படத்தை முடித்துக்கொடுத்தார். தர்மயுத்தம் ரிலீசானது.

படம் அதிரடி ஹிட். ரஜினி ஏற்றிருந்த அந்த சங்கிலியால் கட்டப்படும் நாயகக்கதாபாத்திரம் தமிழுக்கு புதிதாக இருந்தது. கதையும் அப்படியே. கண்களை திருடி விற்கும் கும்பலை பழிவாங்கும் அந்த படத்தில் ரஜினி அதிரடி Come back கொடுத்தார். கொண்டாடிய வாய்கள் அடைத்துப்போயின. முடிந்தார் ரஜினி எழுதிய கைகள் துவண்டு போயின. அப்படி எழுந்து நிற்க வைத்த அந்த கதாபாத்திரம் பெயர் என்ன தெரியுமா? விஜய்.

பிராம்மாண்ட எழுச்சிக்குப் பிறகு ரஜினி ரசிகர்கள் கொண்டாடிய ஒரு கதாபாத்திரம் ‘அலெக்ஸ் பாண்டியன்’. அலெக்ஸ் பாண்டியன் பெயரை சொன்னாலே அலறும் கூட்டம். அப்படி நேர்மைக்கு பெயர் போன போலீஸ்.

“ஏகாம்பரம் பேரை சொன்னா வயித்துல இருக்கிற குழந்தை கூட வாயைப்பொத்தும்.”

“அதே குழந்தைக்கிட்டப்போய் அலெக்ஸ் பாண்டியன் பேரைச்சொல்லு. இன்னொரு கையால் அவங்க அம்மா வாயைப்பொத்தும்”

ரஜினியின் மூன்று முகம் டயலாக் போலும் பொறி பறந்தது. அனல் அடித்தது.

இந்த விஜய், அலெக்ஸ் இரு பாத்திரங்களையும் வடிவமைத்தது பீட்டர் செல்வக்குமார். பீட்டர் என்கிற கதையாசிரியரின் கை வண்ணம் ரஜினியின் கெரியரை உயரத்துக்கு கொண்டு போக உதவியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பீட்டருக்கு கடன்பட்டவர் ரஜினி.

ஆனால் காலம் காத்திருந்து பீட்டருக்கான நன்றியை பெற்றுக்கொண்டது. ஆம். லிவிங்ஸ்டனின் மனைவியின் ஆபரேஷன் மூலம் நேர் செய்யப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.

இல்லையென்றும் சொல்லலாம். ஆனால் பாருங்கள். லிவியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத அந்த நேரம் அவர் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருக்க வேண்டும். செய்தி ரஜினி காதுக்கு எட்ட வேண்டும். அவர் அழைக்க வேண்டும். உதவ வேண்டும். எழுதி வைத்தது போல் நடந்திருக்கிறது.

பீட்டரின் சகோதரி தான் லிவிங்ஸ்டனின் மனைவி.

அப்படி சில நிகழ்வுகள் நாம் அறியாமலேயே கடவுளால் முடிச்சிட்டு நல்ல முடிவையும் தருகின்றன.

இதை இப்படித்தான் பார்க்கத்தோன்றுகிறது…🙏

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன