வளவ. துரையன் மூன்று கவிதைகள்

10-4-26அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட மூன்று கவிதைகள்

1 அவரவர்க்கு

நீங்கள் பார்த்திருப்பீர்கள்
நான்கு மூலைச்சந்திப்பில்

ஓரமாக நின்றுகொண்டு
ஒற்றை விரல் நீட்டிக்
காற்றில் கணக்கு போடுபவரை.

ஆறேழு காகங்கள்
பறந்தலைந்து கொண்டிருக்கையில்
அமைதியாக அமர்ந்திருக்கும்
காலொடிந்த காக்கையை

மல்லிகை ரோஜா
மலர்ச் செடிகளுக்கிடையில்
மறைந்து வளர்ந்து
தலைநீட்டும் முள்செடி ஒன்றை.

கோயில் வாசலில்
அனைவரும் கூக்குரலிட்டுக்
கும்பிட்டுக் கேட்கையில்
வாய் பேசாமல் தட்டை நீட்டும்
வயோதிகர் ஒருவரை.

மந்தையில் சேராமல்
தனித்து மேயும்
மாடறியும் எப்பொழுதும்
அவரவர்க்கு உண்டென்பது
அவரவர்க்குக் கிடைக்குமென்று

  1. எங்கே அனுப்புவது?

பிரம்மா தலைநிமிர்ந்தார்
எதிரே ஒருவன்
எப்படி வந்தான் இவன்
முழுதாய் முடிப்பதற்குள்
முளைத்து விட்டானே!

அவனே கேட்டான்

என்னை எங்கே
அனுப்பப் போகிறீர்?

அதோ அவள் தன்
அசுரப் பசியைத்
தீர்க்க முடியாமல்
அல்லல் படுகிறாளே அவளிடமா?

அதிகமாகத் தின்று
உடல் கொழுத்து
அதை இளைக்கச் செய்ய
அலைகிறாளே அவளிடமா?

இல்லாத காரணங்களை
இங்கென்று காட்டி
இனம்பிரித்து சண்டையிடும்
இவர்களிடமா?

பிரம்மா சிந்தித்தார்.
சிந்தினார் புன்சிரிப்பை
எமனை அழைத்தார்.

  1. அருவம்

இன்னும் அது
புகைந்து கொண்டிருக்கிறது
தன் இருப்பை உணர்த்தியபடி.

உள்ளிருப்பவருக்கு
மூச்சுத்திணறுமா இல்லை
மூச்சுதான் நின்றுவிட்டதே,

சுற்றியுள்ள பானைகளும்
உடைக்கப்பட்ட கழிகளும்
சூழலை உணர்த்தி
எச்சரிக்கின்றன,

மரத்தடியில் துணி விரித்து
மற்றவரின் கணக்கு தீர்க்க
மந்தையாய் எல்லாரும்
மௌனமாக அமர்கிறார்கள்.

மண்தானே எல்லாமென்று
மண்ணைப் பார்த்தபடி
மற்றவர் செல்கிறார்கள்.

அதோ எழும்பிச் செல்லும்
அந்தப் புகையில்
அருவம் ஒன்று செல்வது
போலிருக்கிறது.

அதோ
கையில் தடிகொண்டு
கவனமாகக்
காத்திருக்கிறான் ஒருவன்.

One Comment on “வளவ. துரையன் மூன்று கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன