சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

10-4 2026 அன்று கவிதை வாசிப்போம் நிகழ்வில் வாசித்து அளித்த கவிதைகள்


(1)
நசையுறு மனம் கேட்பின்….

நசையறு மனம் கேட்டேன்;
அது,பிசகு என்று
பின்பே உணர்ந்தேன்.
பற்றின்றி பாரில்
பிழைக்க முடியுமா
மனதில் ஈரமின்றி
தரணியில் இருக்கலாகுமா
நம்பிக்கை இன்றி
நடத்த முடியுமா வாழ்வினை?
அன்பின்றி மேதினியில்
உயிரொன்று பிழைக்குமா?
ஆசையின்றி அவனியில்
இசைய இயலுமா?
ஈரமின்றி மனதில்
கருணை கனியுமா?
விழைவின்றி வாழ்தல் எங்கனம்?
பிழையின்றி வாழ
நீர் வார்க்கும் சுனை
அன்பெனும் கேணிஅன்றோ?
அற்புத அமுதம்
அதன் நசை வழி
ஈரம் கசிந்து
கருணை கனி
கையில் கனிய
நசையுறு மனம்
இச்சையுடன் கேட்பின்;
பிழை ஏதும்
உண்டோ; சொல்வாய்;
நீயும்
பராசக்தி தாயே!

(2) துறத்தல்

புறப்படுதல் ஒரு விதி
என்றாக;
துறத்தலும் ஒரு
தியதி
என்றே கொள்

நிலம் விழும் கனியின் காம்பு
கிளை விடுதல் போல்;

விடுவாய்; அனைத்தையும்

கூடுவிட்டு பறக்கும் பட்டாம்பூச்சி போல்

விருப்புடன் ஒறுப்பாய்; இருப்பை

அலர்ந்த பவளமல்லி மண் சேர்தல் போல்;

இயல்பாய் உதிர்வாய்

ஓடு விட்டு ஆடும்
தெங்கின் கனிபோல்

முதிர்ந்து விட்டு விடுவாய்

துரத்தலையும்,
இருத்தலையும்,
பிடித்தலையும்,
விலக்கி நிறுத்த

துறத்தல் தானே
வந்தமையும்.

(3)

(துளிப்பாக்கள்
விளைச்சல்)
🌳
(1)
விதைப்பவன் அறியான்
விதையின் விதி
விளையுமா விளையாதா
🌳
(2)
விதியோன்
அறிவான்
விளைவது தினையா
விதைப்பவன் வினையா
🌳
(3)
விளையும் நன்னிலத்தின்
மண் அறியும்
விதையின் உயிர்ப்பு
🌳
(4)
முளை விடும்
செடி அறியும்
உயிர்ப்பின் உயிரோட்டம்
🌳
(5)
உதிரும் மலர்
உணர்ந்தது இன்று
வாடும் துன்பத்தை
🌳
(6)
மரம் விட்டு
கழலும் காம்பறியும்
பழம் கனிந்ததென்று
🌳
(7)
உதிரும் சருகு
உணர்ந்தது இன்று
மண்ணின் ஈரத்தை
🌳
(8)
மண்ணின் ஈரம்
உணர்ந்தது சருகு
தன்னில் தன்மயமாகுமென்று

வளவ. துரையன் மூன்று கவிதைகள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்”

Comments are closed.