
1. தண்ணீர்த் தகராறு
ராத்திரி இழுத்துவிட்ட
வாய்க்கால் தண்ணி
அடுத்தவன் வயலுக்கு
மாத்திப் பாயுது
பக்கத்து வயலும்
பசியாறப் பார்த்து
இந்த வயலுக்கு
எரிச்சல் இல்லை
கண்மாய்த் தண்ணீ
பிரிச்சு விட்ட
கணக்கு நேரம்
தவறிப் பாய்வதால்
அறுவடை நெல்லோட
கணக்குத் தவறுமுன்னு
வாய்க்கால் சண்டை
வரப்பிலே நடக்குது
2. வரவும் செலவும்
வருவேன் என்று சொல்லிவிட்டு
வராமல் இருந்தால் பரவாயில்லை
பேசுவேன் என்று சொல்லிவிட்டு
பேசாமல் இருந்தால் பரவாயில்லை
சிரிப்பு ஒன்றை மட்டும்
செலவழித்து விட்டுப் போகிறாய்
எந்தக் கணக்கில்
எழுதுவது என்று தெரியாமல்
சேமித்து வைத்திருக்கிறேன்
செலவு செய்ய வழியில்லை
3. வேரை மறந்த மரம்
நெளிஞ்சு இருந்தாலும்
நிறைகுடம் தளும்பாது
நேராய் இருந்தாலும்
குறை குடம் கூத்தாடும்
ஆங்கில இலக்கியம்
படிச்சு இருக்கியா
அமெரிக்கா எல்லாம்
போயி இருக்கியா
ஆயிரம் பக்கம்
எழுதி இருக்கியா
வீட்டை மறந்த
ஆணவப் பேச்சில்
வேரை மறந்த
மரத்தின் வீழ்ச்சி
விறகுக் கடையில்
விற்றுக் கரியாகும்
சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள் – விருட்சம் நாளிதழ்

Arumai