
இன்று விருட்சம் சொல்புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள்
கடவுச்சீட்டு
இந்த நிலவொளி
எனது நிழல்களைப்
பறித்துக் கொண்டுவிட்டது
மெல்ல மெல்ல
ஊர்ந்து வந்து
என்னைத் தீண்டிவிட்டு செல்கிறது
சிறு வெளிச்சம்
விலாசத்தை தொலைத்த
காற்று
என் முன்பு மண்டியிட்டு
அழுகிறது
யாருமற்ற வனத்தில்
மனிதனின் காலடித்தடங்களை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வெளியேறும் வழி தெரியாமல்
இந்த முறையும்
நான் தப்பிவிடுவேன்
எனது தரப்புக்கு
நானே வாதிடுவதால்
விட்டுவிட்டுப் போய்விடுதல்
அவ்வளவு எளிதல்ல
ஒவ்வொரு முறையும்
நான் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்
பின்னிரவில் ஓலமிடும்
நாய் மீது கல்லெறிந்தபடி…
இந்த நதியும் ஓடத்தைத் தேடுகிறது
எனது இரவுகளைப்
பறிகொடுத்துவிட்டேன்
என்னை இரட்சிப்பது போல்
நீலவானிலிருந்து ஒரு துளி
என் கன்னத்தில் வீழ்ந்தது
ஆயுதமற்ற எனது கரங்கள்
யாசித்தது
மனதில் ஈரமற்ற
கொடியவர்களிடம்
உயிர்பிச்சை இடச்சொல்லி
இந்த பாழடைந்த வீட்டில்
நான் மட்டுமே இருக்கிறேன்
என்றாலும்
இன்னொருவர் இருக்கிறார்
என்ற உணர்வு மட்டும்
எனக்கு இருந்துகொண்டேதான்
இருக்கிறது
எப்போதுமே புரிபடாத
வாழ்க்கை
மற்றவர்களிடம் புறம் பேசுகிறது
எனது அந்தரங்கத்தைப் பற்றி
எனக்கு தேவைப்படாதது
வலிந்து திணிக்கப்படுகிறது
தேவைப்படுவது மறுக்கப்படுகிறது
என்றாலும் நான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
கனவுக்குள் தலைபுதைத்து.
நான் உனக்குச் சொல்கிறேன்
நெஞ்சில் தைத்த அம்புகளோடு
கர்ணனைப் பார்த்தேன்
புண்ணியத்தை யாசகமாக கேட்கும்
சிறுபிள்ளைத்தனம் என்னிடம் இல்லை
அந்த பரந்தாமன்
அம்புபட்டு துடித்த போதும்
அவனருகில் தான் இருந்தேன்
அதனால் தான் அவனை
கடவுளாக என்னால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை
யூதாஸ் வௌ்ளிக்காசுகளை
எண்ணிக் கொண்டிருந்தபோது
நான் அவனருகில் இருந்தேன்
சிலுவையில் இயேசு பிதாவே
என்றழைத்தபோது
நான் அங்கு இல்லை
புத்தரின் ரதத்தை
மயானப் பாதையின் வழியே
செலுத்தியது நான் தான்
காவி உடையணிந்து
சிகை மழித்து
நள்ளிரவில் அனாதைபோல
அரண்மணையை விட்டு
அவர் வெளியேறிய போது
நான் அங்கு இல்லை
நேற்றுக்கும் இன்றுக்கும்
நடுவில் நான் இருக்கிறேன்
சரிந்த சாம்ராஜ்யங்களுக்கு
இரங்கல் பா எழுதியபடி….
எனக்கானது
வானம் முழுவதும் நீலம்
ஏதோவொரு எல்லையில்
நின்றுவிடும் என் பார்வை
கடல் முழுவதும் தண்ணீர்
என் கால்களை நனைப்பதென்னவோ
கொஞ்சம் தான்
பூமி முழுவதும் காற்று
நான் சுவாசிப்பதென்னவோ
அதிலொரு சிறுஅளவு தான்
பிரபஞ்சம் முழுவதும் வெளிச்சம்
எனக்கு தேவைப்படுவதென்னவோ
சிறுகீற்று தான்
வெட்டவெளியெங்கும் மேகங்கள்
எனக்கு நிழல்தருவதென்னவோ
ஏதோவொன்றுதான்
பூமி முழுவதும் மரங்கள்
எனக்கு ஞானம்
தரப்போவது அதில் எதுவோ?
நிலம் முழுவதும் மலர்கள்
என் காதலியின் கூந்தலுக்கு
ஒற்றை ரோஜா போதும்
மண்ணெங்கிலும்
கல்லறைத் தோட்டம்
எனக்கு ஒரு சவப்பெட்டி போதும்!
