ரம்யா/வஞ்சி

(2022-ல் ஜீரோ டிகிரி சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போட்டிக்கு வந்த முந்நூறு சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகளில் ஒன்று)

*

“ஏத்தா எப்டித்தான் ஒன்ன மாதிரி நல்ல புள்ளைக இப்படிப் போயி களிசடைக்காரனுவ கிட்ட விழுகுதியளோ” என்று கண்ணன் அலுத்துக் கொண்டான்.

“நான் நல்ல புள்ள இல்லடா கண்ணா”

“சும்மாக்கெட. ஒன்ன எத்தன பயலுவ நோட்டம் விட்டுட்டுத் திரியுதானுவ தெரியுமா? போயும்போயும் அந்த தேவுடியாக் கூதிமகனப் போயி” என்று சொல்லிக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டான்.

”ஏலே அவுகள அப்டியெல்லாஞ் சொல்லாதலே, என்னருந்தாலும்..”

“மயிரு. ராமன் வேசம் போடும்போது மட்டுந்தேன் அவன கையெடுத்து கும்புடுவேன். அதக் கலைச்சாம்னா அவன் இந்திரனாக்கும்”

“அப்டியா..” என்று வாயைப் பிளந்தவாறு கேட்டாள்.

“நீ இந்த கலைக்குழுவுக்கு வந்து செம்மையா மூனு மாசங்கூட ஆவல.. அதுக்குள்ள எப்டித்தா இப்டியெல்லாம்..” விரக்தியோடும் நம்பமுடியாதவனாகவும் கேள்வியை அடுக்கினான். அவள் மெளனமாக இருந்தாள்.

“அவனுக்கு கலியாணமாயி ரெண்டு புள்ள இருக்கு தெரியும்ல”

“ம்…”

”என்னத்தா ’ம்..’ பொறவு என்ன ஒனக்கு? ரெண்டு புள்ளக்காரனோட போயி படுத்து எந்திருச்சி வந்திருக்க வெக்கங்கெட்டவளே,” சொல்லிமுடித்தபோதே அவள் மேல் அவனுக்கு பரிதாபமும் வந்தது.

“அன்பா, பாசமா பேசினாக.”

“அதுக்காவ?”

“நான் வேணாம்னுதேன் சொன்னேன். அவுக தான். ஆனா அப்டி நடக்கும்போது அவுகள புருசனாத்தேன் நெனச்சேன். பொட்டப்புள்ளயே எனக்கில்ல. எனக்கு பெத்துக் குடுடீன்னு கேட்டாக.”

“ஓ, மவராசி நீயும் பெத்துக்குடுக்கலாம்னு நெனச்சியோ?”

“ஆமாடா கண்ணா. என்ன மனசுல நெனக்காமயா அப்டி கேப்பாக?”

”பைத்தியக்காரிச்சி பைத்திக்காரிச்சி,” என்றவாறு மீண்டும் தலையில் அடித்துக் கொண்டான். “அந்த நேரத்துக்கு ஆம்பளைக என்ன வேணும்னாலும் சொல்லுவாக. பொட்டச்சிக்கு எங்க போவுது புத்தி? ஒனக்கும் அரிப்பு அதேன்,” என்று சொல்லி வாயெடுத்து முடிக்கும்போதே அந்த வார்த்தையை சொல்லியிருக்க வேண்டாமென கனிந்தான். அவள் அந்த வார்த்தையின் முடிவில் மேலும் அழ ஆரம்பித்தாள்.

“நான் இன்னிக்கே ஆசான் கிட்ட இந்த வெவகாரத்த சொல்லிப்போடலாம்னு இருக்கேன்” என்றான்.

உட்கார்ந்திருந்தவள் தன் மடியோடு முகம் புதைத்து கைகளை அவனை நோக்கி கும்பிட்டவாறு, “வேணாம்டா கண்ணா. அவுக ரெண்டு பிள்ளைகளும் என் கண்ணு முன்னாடியே நிக்குது. ஒரு குடியக் கெடுக்க வேணாம்டா கண்ணா,” என்றாள்.

“ஓ, ஒனக்கு புள்ளைக மட்டுந்தேன் கண்ணுக்குத் தெரியுதோ? ஒனக்குத்தேன் குடும்ப எளவு பிரச்சன. போன, சரி. படுக்கும்போது அவென கட்டின பொண்டாட்டிய நீ நெனச்சுப் பாத்தியா?”

“இல்லடா கண்ணா, அந்தம்மா கல்யாணத்துக்குப் பொறவு அவரு மேல பாசமாவே இல்லனு சொன்னாக. ரெண்டாவது கொழந்தைக்குப் பொறவு சேந்தே இல்லன்னும் சொன்னாக. எப்பவும் கடுகடுன்னு கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருக்கும்னு சொல்லி வருத்தப்பட்டாக.”

“அவென் ஒவ்வொருத்திகள்ட்ட ஒவ்வொரு கதைய வுடுவான். அந்தம்மாவும் இந்தக் கலைக்குழுவுக்கு பதினைஞ்சு வருசத்துக்கு முந்தி ஒன்னையமாரி வந்தவுகதேன். ஸ்ரீதேவி கணக்கா இருப்பாக. நல்ல செல்வச் செழிப்புள்ள பார்ட்டி. நல்ல குடும்பமும் இருந்துச்சு. அவுகள என்ன வசியம் பண்ணுனானோ என்ன எழவோ, ஒரு வருசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டியான். இவம் லட்சணம் தெரிஞ்ச பொறவாட்டிதேன் அப்டி கடுகடுன்னு மாறிட்டாவ. ஊரு சிரிச்சுப்போடுமேன்னு தாலிக்குக் கட்டுப்பட்டு கொழந்தைகளுக்காக இவன் கூட வாழுதாக. இல்ல, என்ன கணக்கெழவோ தெரியாது. ஒருகணக்குல நீ அவுக குடிலயும் மண்ணவாரிப் போட்ருக்க கிறுக்கோளிக் கொள்ளு மவளே”

அவளிடமிருந்து அழுகையைத் தவிர பதிலேதும் வரவில்லை.

”ஒன்னச்சொல்லி என்ன குத்தம்? இப்டி ஒன்ன ஏமாற வச்சு வேடிக்க பாக்குத அந்த சாமி மேலதேன் எனக்குக் கோவமா வருது. ஆம்பளைக கணக்கு வேற ராசாத்தி. நீ வந்த புதுசுல சிட்டா பறந்துக்கிட்டு இருக்கும்போதே நெனச்சென். இப்டி எதுனா ஒன்னு ஆவும்னு. பொட்டப்புள்ளைக ஒடுங்கிக் கெடந்தாலே வுட மாட்டானுக. நீ கொழந்த கணக்க கள்ளமில்லாம பேசிக்கிட்டு இருந்தீயின்னா இந்தமாரி பயலுகட்டதேன் மொத அடி விழும்”

கைகளால் முகத்தைப் பொத்தியவாறு அழுதுகொண்டிருந்தாள்.

“சரி கெடக்கு. ஒனக்கு இன்னும் வயசிருக்கு. கொஞ்சம் காலம் போவட்டும். ஒன் அழகுக்கும் தெறமைக்கும் நல்ல அசலூர்க்கார ஆட்டக்காரனா பாத்து ஆசானே கலியாணம் பண்ணி வெப்பாக,” என்றான்.

அவள் குனிந்தவாறே “எனக்கு வேற யாரும் வேணாம். அவுகள மனசுல நெனச்சிட்டேன்டா கண்ணா. அவுக பேசப்பேசவே நெஞ்சுல நெறஞ்சிட்டாக. அதேன் அவர்கூட…”

“என்ன வசியம் பண்ணுதானுவளோ,” என்றவாறு அவளை அடிக்க முடியாமல் அருகிலிருந்த மேசையை ஓங்கி அறைந்தான்.

”புரியுது புள்ள, உண்மையா மனசு வச்சிட்டா பொறவு வேற ஒறவத்தேடி போறது கஸ்டம்தேன். எனக்கும் அந்த வலி புரியும்த்தா. அதும், ஒடம்பக் குடுத்தபொறவு அந்த நெனப்ப அழிக்குதது இன்னியும் கஸ்டந்தேன். ஒன்ன இங்க எத்தன தொலவட்டு ஆசான் நம்பிருக்காரு தெரியும்ல? வார பொட்டப் புள்ளைகல்லாம் ஒன்னுமாத்தி ஒன்னு ஒரு வருசங்கூட தங்காம என்ன காரணம்னே தெரியாமப் போயிறுதாக. நீ நல்ல துடிப்புள்ள புள்ளனு ஆசான் நம்பிக்கிட்டு இருக்காரு. நீ என்னடான்னா..” என்று அலுத்துக் கொண்டான்.

“எனக்கு தெரியுதுடா கண்ணா. என்னால தாங்க முடில. உசிர மாச்சிக்கலாம் போல இருக்குடா. நான் ஆசான ஏமாத்திட்டேம்ல. ஒங்க நம்பிக்கையெல்லாங்கூட ஏமாத்தி செமிச்சிட்டேன்ல. நான் சாவுதேன்,” என்றவாறு அருகிலிருந்த மரக்கம்பத்தில் தலையை இடித்துக் கொண்டே இருந்தாள்

“செத்துப்போ. இப்டி அவன நீ காதலிக்கேன்னு சொல்லுததுக்கு நீ செத்துப் போவலாந்தேன். அது எவ்வளவோ தேவல,” என அவளைத் தடுக்காமல் உச்சகட்ட கோபத்தில் கத்தினான்.

“ஆமா நான் ச்சாவுதேன். இப்பல்லாம் அவுகளும் என்ன கண்டுக்க மாட்டிக்காக. நான் காதலிக்கேன்னு சொன்னதுக்கு என் புள்ளைகளத் தவர நான் யாரையும் காதலிக்கலங்காரு. பின்ன என்ன மயித்துக்கு தொட்டீருன்னு கேக்கனும்னு ஆசதேன். ஆனா அவரு முன்ன வாயெடுக்க முடில. நான் அழுது பொலம்பினதுக்குப் பொறவு என்கூட பேசறதையும் நிறுத்திட்டாக. நான் செத்தாத்தேன் என் மனசு அடங்கும்டா கண்ணா,” என்றவாறு மரக்கம்பத்தை பிடித்தவாறு கிறுகிறுத்து தலையில் கைவைத்து கீழே உட்கார்ந்தாள்.

“இதெல்லாம் ஒரு ட்ரிக்குத்தா. அப்பதேன் நீ அவன நெனச்சு புழுங்கித்திரிய்வன்னு கண்டுக்காம இருப்பான். உன்னத்தவிர அவனுக்கு ஏகப்பட்ட பொட்டப் புள்ளைக சகவாசம் இருக்கு. அவுக பின்னாடி கொஞ்ச நாள் திரியுவான். புதுசா எவளாச்சும் வந்தா அவள.. பின்ன நீ சலிக்கற வர உன் பின்னாடி. இவனுகளுக்குல்லாம் பொம்பளனா ஒடம்பு மட்டுந்தேன். சோலக்கொள்ளைக்கு சேல கட்டி விட்டாக்கூட பாப்பானுவ. அவனே நடுக்கெழவென். ஆனா அவன விட மூத்தாளு பொம்பளகக்கிட்ட கூட வழிஞ்சுக்கிட்டு திரியுவான். எத்தன பொம்பளைக அவன பத்தி ஏளனமா பேசறத நானே கேட்ருக்கேன் தெரியுமா?”

“அப்படியா!” என நம்பமுடியாதவளாகக் கேட்டாள்.

“என்ன நொப்புடியா. சரி கெடக்கட்டும். வுட்டுத்தள்ளு. இதெல்லாஞ் சொல்லித்தேன் நீ அவன விடனும்னு இல்ல. அவென் ஊரறிஞ்ச பொம்பளப் பொறுக்கி. நீ புதுசுனால இப்டி வந்து ஏமாந்து நிக்க. ஒருதடவ படுத்து எந்திச்சதும் அவன புருஷேன், சாமிங்கறது, அவன்கிட்ட என்னத்தையோ பரிகுடுத்தவமாரி நிக்கது இதெல்லாம் பைத்தியக்காரிச்சிகதேன் செய்வாளுக. அவனப்பாத்து தல கவுந்தா அது அவென் ஜெயிச்சாப்ல ஆயிடும். அரிப்பெடுத்த பயலுக்கு பிச்ச போட்டன்னு நெஞ்ச நிமித்தி நடந்து போவனும் ராசாத்தி. சீக்கிரம் அவன மறந்துட்டு கூத்துல எப்படி ஒசந்து நிக்க முடியும்னு பாரு. இன்னும் ரெண்டு வாரத்துல கூத்து. தெரியும்ல”

இன்னும் இவைகளெல்லாம் நம்பமுடியாதவைகளாக கண்முன் விரிய ஜடம் போன்ற பாவனையில் “ம், சூர்ப்பனக வேசம்னு ஐயா சொன்னாக,” என்றாள்.

”உன்னைய தான் கூத்துக்கு நடு நாயகம்னு ஆசான் சொல்லிக்கிட்டு இருந்தாக. ஒன் தெறமையப் பத்தி பெருமையா எங்ககிட்டல்லாம் பேசுவாக. எல்லாவனும் ஒன் நடிப்பப் பாத்து விழுந்து கெடக்கானுவ. நீ என்னடான்னா ஒன் ஒடம்பப் பாத்து கெடக்கவனுக்காவ இழிஞ்சிக்கிட்டு சாவுறேங்க. இந்த பொம்பளைக எப்டி இப்டியாப்பட்டவன் பின்னாடி போய் விழுகுதீயளோ!”

அவளது அழுகை நின்றுவிட்டிருந்தது. வெறித்து மண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். புரிந்து கொண்டவனாய் இனி ஏதும் தவறான முடிவை எடுக்க வாய்ப்பில்லையென தெரிந்து கொண்டவனாய் மெல்ல மேசையிலிருந்து எழுந்து, ”கூத்து ஆயிரம் துக்கத்த மறக்கடிச்சிடும்த்தா. போயி சோலியப்பாரு ராசாத்தி.” என்றான்.

தலை நிமிர்ந்து அவன் கண்களை கூர்ந்து இறுக்கமாக நோக்கி “ஏண்டா கண்ணா உண்மையாவே அவுக நல்லவுக இல்லயா.” என்று கேட்டாள்.

*

”எப்டிண்ணே அவள? எம்புட்டுப் பய வயித்தெரிச்ச உம்மேல இருக்கும் தெரியும்ல? பலே ஆளுண்ணே நீயி,” என்று சொல்லிக் கொண்டே குமார் மூன்றாவது புட்டி சாராயத்தை எடுத்தவாறு உட்கார்ந்தான். செல்லப்பன் எதுக்களித்துச் சிரித்தவாறு, ”இவ பொம்பளல்லாம் எம்மாத்ரம் எனக்கு. குந்தானி. ரதி தேவி கணக்கா இருந்த ஜெயா ஆச்சியே அண்ணனுக்கு மயங்கிப்புட்டா,” என்றவாறு மேலும் மேலும் எதுக்களித்துச் சிரித்தான்.

“இருந்தாலும் இவ சின்னப்புள்ளண்ணே. பக்கிச்சிட்டுமாரி பறந்துக்கிட்டு இருந்தா, ஆளு ஒருமாசமா வாட்டமாத்தேன் இருக்கா.”

”ஏலே கண்ணா, ஓட்டமா ஓடிப்போயி அண்ணனுக்கு ஒரு ப்ளேட் சொவரொட்டி வாங்கிட்டுவாலே. அதுக்கு நல்லதாம்,” என்று வெறுமனே அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கண்ணனை நோக்கிச் செல்லப்பன் ஏவினான்.

“கிறுக்குத்தாயொளி, இந்த கண்ணம்பய அவகிட்ட போயி எல்லாத்தையும் சொல்லிப்புடுவாம். பாத்துப் பேசு,” என அவன் போனபின் குமாரைக் கடிந்து கொண்டான்.

“ஓ, அப்டியா சங்கதி”

”குமாரு, இந்தப் பொட்டச்சிக படுக்கும்போது சொகங்காணுவாளுக. அப்பறம் வந்து காதல் மயிறுன்னு நிப்பாளுக. பொழப்பத்தவளுக. அதச் சொல்றப்பவே வெட்டிவிட்றனும். இல்லன்னா நம்ம தலைக்கு ஆபத்து” என்றவாறு சாராயத்தை மண்டினான்.

“காதலா, அப்டின்னா என்னண்ணே?” என்று நக்கல் தொனியில் கைகளைக் கட்டியவாறு அவனிடம் கேட்டான்.

“அது படுக்குததுக்கு முன்னாடியும் படுக்கும்போதும் சொல்லுத பொய்யிலே,” என்றவாறு குமரனை ஓங்கி அறைந்து சிரித்தான். அவனும் அதை உணர்ந்தவன்போல விக்கிக் கொண்டே சிரித்தான்.

“இருந்தாலும் ராசாத்திய, பலே ஆளுண்ணே நீயி. எப்டிண்ணே. எனக்கும் சொல்லிக் குடுண்ணே”

”கூத்து, பட்டறனு நடிக்க வாராளுகனாலே ஏதோ நெறயாமத்தான வாராளுக. கொஞ்சம் பாசமா ஆறுதல் சொல்ற மாதிரி பேசுனாளே விழுந்திருவாளுக. நல்ல குடும்பம், குட்டின்னு ஐஸ்வரியமா இருக்க பொம்பளைக எதுக்கு இங்கின பொழைக்க வாராளுக.”

”அதுவும் சரித்தேன், அதுவும் சரித்தேன்”

”என்னைக்கு ஒன்னய நம்பி ஒருத்தி சொல்லமுடியாத அவளோட ரகசியத்தச் சொல்லுதாளோ அப்பவே அவ நம்மகிட்ட மடிஞ்சிட்டான்னு அர்த்தம்லே. அதுக்கப்பறம் நேக்குபோக்கா காய நகத்துனா போதும்.”

“அத எப்டிண்ணே சொல்ல வைக்கிதது?”

“அதுதேன் ரகசியம். அதச் சொல்லிட்டா ஒனக்கும் அண்ணனுக்கும் வித்தியாசமில்லாமப் போயிரும்லே. ஆனா இது எல்லாத்துக்கு மேலயும் இப்டி ஒருத்தன நம்புததுக்கு இன்னொன்னு இருக்கனும்”

”என்ன?” என்று ஆவலாகக் முகத்தை முன் நகர்த்திக் கேட்டான்.

“அதுக்கு அவ கொஞ்சம் கிறுக்கச்சியா இருக்கனும்,” என்று சொல்லிக் கொண்டே தரையில் அறைந்து சிரித்தான்.

“அண்ணே, என் தெய்வமே, ஒன் காலக்கழுவி தண்ணி குடிச்சாக்கூட தகும்ண்ணே. ஆனாலும் பலே அளுண்ணே நீயி, எனக்கு மடிய்வாளாண்ணே இப்ப?”

அவன் யோசித்தவாறு “வாய்ப்பில்லடா, இந்தமாரி பொம்பளைக நானே அடிச்சுத் தொரத்தி அவமானப்படுத்தாம என்னய விட்டு போமாட்டாளுக. ஒரு கணக்குல இவளமாதிரி பொம்பளைகளும் பத்தினிதேன்,” என்றவாறு ஆழ்ந்து இழுத்த சுருட்டை மூக்கின் வழியாக வெளியேற்றினான்.

“பத்தினியா? பத்தினினு இந்த ஒலகத்துல ஒருத்தி இல்லன்னுல்ல நெனச்சிக்கிட்டு இருந்தேன்.”

“அதுவும் சரித்தேன். ராமேன், சீத, இந்த பத்தினி இதெல்லாம் கதலே குமாரு. ஆம்பளைகள்ல ராமேன் இல்லன்னா பொம்பளைகள்ல பத்தினிகளும் இல்ல தான. எவ காலம்பூரா ஒருத்தனையே நெனச்சிக் கெடந்து சாவுதா?”

“சரித்தேன்.. சரித்தேன்…” என்றான் குமார் விக்கிக் கொண்டே.

கண்ணன் வருவதைக் கண்ட செல்லப்பன் “ஏம்லே நாடகப்பேரு என்னனு முடிவெடுத்துட்டாரா இல்லயா அந்தாளு?” என்று கேட்டான்.

”ஆமாண்ணே. இன்னைக்கு காலைல வெள்ளன கோழிகூப்புடவே நாடகத்தலைப்ப துணில எழுத்தச் சொல்ல ஆள வரச்சொல்லிருந்தாரு. ’சூர்ப்பனக வதை’னு வச்சிருக்காரு”

“எந்தக்காலத்துல ராமாயணத்துல அவ செத்திருக்கா? பைத்தியக்காரங்கணக்கட்டா இவன் நாடகம் போட்டு வெளங்காம போயிடப்போகுது. வயசாக வயசாக அந்தாளுக்கு மண்ட கோளாறாவுது. கூத்துக்கு எவனும் வராமப் போனாம்னா எம் பொழப்புலாம் நாறிடும். இதவச்சுதான் என் மத்த தொழிலும் ஓடுது.”

”ஒத்திக எப்படா?” என்று குமார் கேட்டான்.

“சூர்ப்பனக ஒத்திக போன வாரமே ஆரம்பிச்சிடுச்சுண்ணே. இந்த நாடகத்துல அவுக தான் முக்கியமான வேசம். நமக்கெல்லாம் நாளைக்குன்னு ஐயா பேசிக்கிட்டு இருந்தாரு.”

“இருக்கட்டும், இருக்கட்டும். நேத்து வந்தவளுக்கு இவ்ளோ முக்குறாரே, இப்டில்லாம் ஆவக்கூடாதுன்னு தான் இவளுகள அடக்குதேன். அப்பையும் எந்திரிச்சு வாராளுவளே தேவ்டியா முண்டைக,” என்று சொல்லிக் கொண்டே தள்ளாடி எழுந்தான் செல்லப்பன்.

“அந்தக் கிறுக்கச்சிய எங்கடா?”

“நாடகக் கொட்டகைலயே ஒறங்கிட்டாகண்ணே.”

*

ஊசலொன்று முன்னும் பின்னும் மெதுவாக காதலா காமமா என்றறியாது தத்தளித்து இயங்கிக் கொண்டிருப்பது போல ஆசானின் குரலில் அந்த தாளகதி எழுந்தது

”தத்தடட தத்தடட தத்தடட டட்டா,” என்று பாட மத்தளமும் உடுக்கையும் இணைந்து கொண்டது.

”பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
வஞ்சி என
நஞ்சம் என
வஞ்ச மகள் வந்தாள்”

என்று பாடல் ஒலிக்க திரை விலகியது. மக்கள் ஆரவாரத்துடன் விசிலடித்து கைதட்ட சூர்ப்பனகை அழகிய பதுமையென வேடமிட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைக் கண்ட மயக்கம் கூட்டத்தில் அலையலையாகப் பரவ மேடை வெளிச்சத்தைத் தவிர பிற டியூப் லைட் வெளிச்சங்கள் யாவும் நிறுத்தப்பட்டன. கரும் இருட்டில் நாடக மேடையின் மீதான வெளிச்சத்தில் அடர் கானகமும், திரண்ட கன்னியொருத்தியின் பச்சைப்பட்டுச் சேலையும், சிவப்பு நிற சட்டையும், கற்கள் பதித்த ஆரங்களும் மினுக்கிக் கொண்டிருந்தன. மத்தளமும், உடுக்கையும் ஒலிக்க,

”தத்தடட தத்தடட தத்தடட டட்டா. அப்படியாக சூர்ப்பனக” என ஆசான் ஆரம்பித்தார்.

“ஆமா, ஆமா,” என சிங்சாங் அடித்துக் கொண்டே ஜால்ராக்கள் சேர்ந்து கொண்டனர்.

“ராவணனோட தங்கச்சிகாரி..”

“ஓஹோ”

”முட்டத் தின்னுட்டு வருசத்துல பாதி ஒறங்குவானே கும்பன், அவனோட தங்கச்சி.”

“யாரு?”

“சூர்ப்பனகதான்.”

“ஓ…”

“அப்படியாக… நடந்து ஒயிலா வாரா.”

”பொன் ஒழுகு பூவில் உறை பூவை
மேனி நனி பெற்று
தேனின் மொழி உற்று
ஓர் மானின் விழி பெற்று
மயில் வந்ததென வந்தாள்”

என்று பாடல் ஒலிக்க ராசாத்தி குறுக்கும் நெடுக்குமாக மயில் போல ஒயிலாக நடந்து கொண்டிருந்தாள். மேடைக்கு வலப்பக்கமிருந்து ராமனும், லட்சுமணனுமாக செல்லப்பனும் குமரனும் தோன்றினர். கூட்டத்திலிருந்து அவர்களின் ரசிகர்களின் விசில் சத்தமும், கைத்தட்டலும் பறந்தன. பெருமையோடு கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு மேடையில் சூர்ப்பனகையின் அழகை ரசிப்பவன் போன்ற பாவனையில் நின்றிருந்தான் செல்லப்பன்.

”அப்படியாக, ராமங்காரன் யாருடா இந்த அழகின்னு உத்துப் பாக்கான்,” என ஆசான் ஆரம்பித்தார்.

“ஆமா ஆமா”

”வெக்கப்பட்டு நிக்கிற சூர்ப்பனகையப்பாத்து ராமன் கேக்கான்.”

“ஓஹோ”

“அழகியே, வஞ்சியே, பதுமையே, ஒன் ஊரென்ன, ஒன் பேரென்ன, ஒன் ஒறவுக்காரங்க யாரு” என செல்லப்பன் நளினமாக நின்றுகொண்டிருந்த சூர்ப்பனகையைப் பார்த்துக் கேட்க நாடகம் ஆரம்பித்தது.

“சுவாமி.. பிரம்மனோட மகன் புலத்தியன். அவனோட மகன் விச்சிரவசுவோட மக! சிவனோட நண்பேன் குபேரனோட தங்க. இந்திரங்காரனையே வேலையாள் கணக்கா நடத்துற ராவணனோட தங்கச்சி. என்பேரு சூர்ப்பனக!” என குழைவும் செருக்கும் ஒருசேர நின்றாள்.

“ஆமா சூர்ப்பனக! ஆமா சூர்ப்பனக!” என ஜால்ராக்கள் முழங்கினர்.

“ராவணனோ கரிய கறுப்பு! ரத்தச்செவப்பு கண்ணு, கூரான பல்லு. கொடூர அரக்கன்! பாக்கவே பயங்கரமா இருக்கவன்! அவனோட தங்கச்சி நீ மட்டும் வடிவா அழகா இருக்கியே,” என சந்தேகத் தொனியோடு ராமன் கேட்டான்.

“அரக்கியாப் பொறந்தது என்னவோ உண்ம தான் சாமி. ஆனா பொறப்பால எடுத்த ஒடம்ப நல்ல வழில தவஞ்செஞ்சு தெய்வ அருளால இந்த வடிவத்த அடைஞ்சேன் எஞ்சாமி!”

“பாதுகாப்பில்லாத இந்த காட்டுப்பக்கம் தனியா வந்திருக்கிறியே. ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிப்போச்சுனா என்ன பண்ணுவ? வெவரம் இல்லாத புள்ளையா இருக்கியே,” என ராமன் அக்கறையோடு கேட்டான்.

அந்த அக்கறையில் பூரித்தவளாய், “நீங்க இருக்க சேதி கேள்விப்பட்டு ஒங்க ஆசிய வாங்கிக்கிட்டு அப்டியே ஒரு சேதி சொல்லிட்டுப் போவலாம்னு வந்தேன் சாமி,” என்றாள்.

“ஆமா வந்தேன் சாமி. ஆசி வாங்கிப்போக வந்தேன் சாமி. ஆமா, ஒரு சேதி சொல்ல வந்தேன் சாமி. கேளுங்க சாமி,” என ஜால்ராக்கள் சிங்கி தட்டினர்.

“லெச்சுமணா” என ராமன் விளிக்க, “சொல்லுங்கண்ணே,” என்றவாறு அவன் அருகில் வந்தான் லட்சுமணன்.

“இந்த அழகிகள நம்பவே முடியாதுன்றது நமக்கு தெரிஞ்ச விசயந்தேன். இவள நம்பலாமா? சொல்லுடா லச்சுமணா.”

“என்னதேன் சொல்லுதான்னு கேட்டுப்பாப்பம் அண்ணாச்சி” என்றான் லட்சுமணன்.

“அழகியே, வஞ்சிக் கொடியே சொல்லு. என்கிட்ட என்ன சொல்லனும் சொல்லு.”

“சாமி நான் வீரமானவ, அறிவானவ, அழகானவ, முனிவர்களுக்கு பணிவிட செஞ்சு வாழரவ. என் அழகுக்கும் தெறமைக்கும் ஏத்த ஆம்பள நீங்கதான்னு தேடிவந்தேன். என் காதல ஏத்து என்ன கலியாணம் செஞ்சுக்கங்க சாமி.”

“ஆமா கலியாணம் செஞ்சுக்கங்க ஸ்வாமி. ஆமா கலியாணம் செஞ்சுக்கங்க ஸ்வாமி,” என ஜால்ராக்கள் பாடினர்.

”நீயோ அரக்க குலம், நானோ ராசா மவன். ஏதோ என் போறாத காலம் இங்கின கெடக்கேன். நமக்குள்ள சரிவராது பொண்ணே” என்றான் ராமன்.

“சாதி தான் பிரச்சனையா சாமி? அரக்க சாதில பொறந்துட்டதுக்காவ ஒருத்தி அரக்கியாத்தேன் இருக்கனுமா சாமி? நான் நல்ல வழியில் வளந்து தபசு செஞ்சு ஒங்கள அடைய வந்து நிக்கேன். நாளு பொழுது இல்லாம உங்கள நெனச்சு ஏங்கிப் போயி கெடக்கேன். என் காதலையும் காமத்தையும் தீத்து வைங்க சாமி.” என சூர்ப்பனகை ராமனை சுற்றி வந்து ஏக்கமாக சொல்லி கை எடுத்து கும்பிட்டு அவன் முன் பணிந்தாள்.

“ஏண்டா லெச்சுமணா, இப்டி வெளிப்படையா காதலையும் காமத்தையும் சொல்லுத பொம்பளைக நல்ல பொம்பளைகளாவா இருப்பாளுக. கூச்சமில்லாதவளுகளுக்கும் கற்புக்கும் ரொம்ப தொலவட்டுல்ல?” என லட்சுமணன் காதில் ராமன் கேட்டான்.

“ஆமாண்ணே.” என லட்சுமணன் அதை ஆதரிக்க, ஏளனமும், பரிகாசமும் நிறைந்த தொனியில் “பெண்ணே! சூர்ப்பனகைக் கண்ணே!” என்றழைத்தான் ராமன்.

“சொல்லுங்க சாமி” என்று அவன் அருகில் ஆவலாய் வந்தவளை நோக்கி, “ஒனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. வேணாம்,” என்று கைகளை மறுத்தவாறு கூறி முகம் திருப்பிக் கொண்டான் ராமன்.

”ஐயோ சாமி், என்ன வெறுத்துடாதீக! நான் செத்தாலும் ஒங்க மேல உள்ள ஆச சாவாது. கனவுலயும் நெனப்புலையும் எப்பவும் நீங்க தான் இருக்கீக சாமி. ஒங்க கூட ஒரு ஓரமா எப்பவும் நான் இருந்தா போதும் சாமி. என்னய வேணாம்னு சொல்லாதீக!” என இறைஞ்சினாள்.

இறைஞ்சும் தோறும் ஏளனத்தை அதிகப்படுத்திக் கொண்டே அவளைத் தன் பின்னால் அலைய விட்டுக் கொண்டிருந்தான் ராமன். ”அண்ணே.. சீத இருக்கானு சொன்னா.. அவள மட்டுந்தேன் மனசார காதலிக்கேன்னு சொன்னா போய்டப்போறா. மீன் கன்னி! அழகி! அவகிட்ட லட்சுமணன கட்டிக்கிறியானு கேட்டுப்பாரு. என்ன சொல்லுதாம்னு பாப்பம்,” என லட்சுமணன் ராமனுக்கு யோசனை சொன்னான்.

“அழகியே சூர்ப்பனக! நான் சொல்லுதத கேப்பியா?” என ராமன் அவளை நோக்கிக் கேட்க, “சொல்லுங்க ஸ்வாமி,” என ஆவல் மிகுந்தவளாய் அவன் முன் நின்றாள்.

“மீன் விழி கொண்டவளே. ஒனக்கேத்த ஜோடி லட்சுமணன் தான். நீ அவன கலியாணம் செஞ்சுக்க. எப்பவும் அவனபோலவே என்கூட இருந்து எனக்கு சேவகம் செஞ்சு ஒன் ஆசைய ஆத்திக்கலாம்,” என்று அவளுக்கு அறிவுரை கூறிய ஒரு நொடி தயங்கி அவள் லட்சுமணனின் பாதம் பணிந்தாள்.

”சாமி, ஒங்களையும் ராமனையும் நான் என்னைக்கும் பிரிச்சு பாத்ததில்ல. உருவத்துலயும் மனசுலயும் நீங்களும் அவுகளும் ஒன்னுதான்னு எல்லாருஞ் சொல்லுவாக. நானும் அத இன்னைக்கு கண்ணாற பாத்துட்டேன். இனி மிச்சமிருக்க காலம்பூராவும் ஒங்க கூடவே இருக்கேன். என்ன ஏத்துங்க சாமி,” என ஒரு பொருளை மறக்க அதற்கிணையான இன்னொன்றைக் கொடுத்ததும் பற்றிக் கொள்ளும் குழந்தைபோல அவன் முன் வணங்கி நின்றாள்.

“வெக்கங்கெட்ட பெண்ணே!” என லட்சுமணன் அவளை விளித்த போது முதல் முறையாக அவமானத்தை உணர்ந்து துடித்தாள். அவளின் மீன் கண்கள் மேலும் ஒளி பெற்று உருள, அடக்கி வைத்திருந்த அரக்கப் பற்கள் மெல்ல வெளியில் தெரிய லட்சுமணன் கோபமும் செறுக்கும் கொண்டான். அவளை மேலும் அவமானம் செய்யும் பொருட்டு “ராவணனுக்கு தங்கச்சியாப் பொறந்தென்னடீ பிரயோஜனம்! அரக்கனுக்கு மனைவியான! பின்ன விதவையான! எங்கண்ணே மேல காதல்ல விழுந்த! இப்ப என் முன்னாடி நிக்க! சுத்தமில்லாத மனச தூக்கிக்கிட்டு அழகால மட்டும் என்ன அடஞ்சிடலாம்னு பாக்குறியாடீ அரக்கி!” என லட்சுமணன் கூற ராமன் அதைக்கேட்டு ஏளனமாகப் புன்னகைத்தான்.

பற்களை நற நறவென கடித்தவாறு ராமனையும் லட்சுமணனையும் பார்த்து உறுமிக் கொண்டு “கல்நெஞ்சக்கார அரக்கனுககிட்ட அல்லோலப்பட்டு, விதியேன்னு ஒக்காராம தெய்வங்கணக்கா இருக்க ஒங்ககிட்ட காதலச் சொல்லலாம்னு வந்தா, நீங்க அவனுகள விட மோசமா இருக்கீகளே,” என்று சொல்லிக் கொண்டே உறுமினாள்.

”என்னடீ உறுமல். பயந்திருவேன்னு நெனக்கியோ? கேடுகெட்ட விதி கொண்டவளே. இந்த ஜென்மத்துல இனி நீ யாரையும் அடைய முடியாதபடிக்கு செஞ்சிடறேன் பாருடீ” என்று சொல்லிக் கொண்டே அவள் கூந்தலைப் பற்றி இழுத்து லட்சுமணன் உதைத்தான். எழ முயன்றவள் ராமன் தனக்காக பரிந்துபேசுவானா என ஏக்கமுற்று அவனை நோக்க அவனின் மெல்லிய புன்னகை கண்டு நெஞ்சு விம்மி தலையைப் பிய்துக்கொண்டு “மோசம்போனேனே, எஞ்சாமி மோசம்போனேனே. காதலால மோசம்போனேனே,” என்று சொன்னவாறு அழுதாள்.

“ஆமா மோசம்போனேனே.. காதலால மோசம்போனேனே” என ஜால்ராக்கள் துக்கமான தொனியில் பாடினர்.

தன் மொத்த வெறுப்பையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு “பத்தினி வேசமா போடுற?” என்று சொல்லிக் கொண்டே அவள் கூந்தலை தன் வலக்கையால் பற்றி அவள் மேல் தன் வலக்காலை வைத்து காறி அவள் மீது தான் இதுநாள் வரை வெளிப்படுத்தியிராத நஞ்சை எச்சிலாக உமிழ்ந்தான். இடக்கையால் குறுவாளை உறுவி மூக்கை முதலில் அறுத்தான். பின் காதுகளை அறுத்து, வெறி அடங்காதவனாய் அவள் மேலாடையை விலக்கி முலைகளைக் கைகளால் பற்றி ”மூளி” என்று சொல்லிக்கொண்டே முலைக்கண்களிரண்டையும் அறுத்தெறிந்தான். அந்தக்கணத்தின் உடல் வேதனையால் வீரிட்டு அழுத சூர்ப்பனகையின் ஒலியால் உச்சமடைந்து இறங்கித்தணியும் பொருட்டு மீண்டும் அவளைக் காறி உமிழ்ந்து அவள் மேல் வைத்திருந்த வலக்காலால் ஓங்கி மிதித்துவிட்டு திரும்பி நடந்தான் லட்சுமணன்.

கூட்டம் ”ஓ” வென தன் அதிருப்தியைக் காட்டியது.

லட்சுமணனும் ராமனும் சென்றுவிட மேடையின் விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு சூர்ப்பனகையின் மேல் மட்டும் ஒளி குவிக்கப்பட்டது.

”காதல்ல கொடியது என்னவோ?” என்று ஆசானின் குரல் ஒலிக்க, “என்ன? என்ன?” என ஜால்ராக்கள் சிங்கிச் சத்தத்துடன் இணைந்து கொண்டனர்.

“அவமானம். பெண்ணென மதியாமல் ஆண் செய்யும் அவமானம். ஆமா அவமானம்.” தீர்க்கமாக ஆசானின் அந்த வார்த்தை மட்டும் முழங்கிக் கொண்டிருந்தது.

சூர்ப்பனகை அழுது கொண்டே கீழே கொட்டப்பட்டுக் கிடந்த கரியை அள்ளி அள்ளி முகத்தில் அறைந்து பூசினாள். ரத்தம் வழிந்துகொண்டிருந்த முகத்தில் கரி மேலும் அடர்த்தியைக் கூட்டி முகத்தை விகாரமாக்கியது. முலைகளிலிருந்து வடிந்த ரத்தம் அவளைச் சூழ்ந்திருந்தது. கரியை அள்ளி முலைகளில் பூசிக்கொண்டே மாரடித்து அறைந்து கேவிக் கேவி அழுதாள்.

“ஆத்தா பொங்க வச்சு பூச பண்ணுதோம் தாயி. சாந்தியாகும்மா. காளி, கூளி. நீலி, எந்தாயி,” என்று கூட்டத்திலிருந்த கிழவி ஒருத்தி கத்திக்கொண்டே எழுந்து குலவையிட பிற பெண்களும் குலவையில் இணைந்தனர்.

எழுந்து நின்று விகாரமான முகத்தில் கூரிய பற்கள் எழுந்தவளாய் நரம்புகள் புடைக்க தலைவிரி கோலமாய் மாரடித்துக் கொண்டே, “ராமா! இந்த அன்பையும் பாசத்தையும் உதாசீனப்படுத்தின ஒனக்கு இனி காதலே இல்லாமப் போட்டும். காலம்பூரா தனிச்சிருந்து தான் நீ சாவனும். இது என் சாபம். பத்தினியோட சாபமில்ல. அவமானப்பட்ட பொண்ணோட சாபம். என் வலியும் வேதனையும், கண்ணீரும் உண்மைனா, நான் ஒம்மேல வச்ச காதல் உண்மைனா இந்த சாபம் ஒன் தலைமேல என்னைக்கும் இருக்கும்.” என்று சொல்லிக் கொண்டே வலி மிகுந்து கீழே விழுந்தாள். சிரமப்பட்டு எழ முற்படுபவளாய் கைகளை உயர்த்தி ”அப்பனே சிவா! ஒருத்தன மனசுல நெனச்சதும் காதலுக்காக வந்து நின்னதும் தான் என் குத்தம்னா இனி இந்த உசிரு என்னத்துக்கு? இந்த நொம்பலப்பட்ட ஆன்மாவ நீயே எடுத்துக்கய்யா! ஆமா நீயே எடுத்துக்க!” என்று சொல்லியவாறு முலையைப் பற்றிக் கொண்டே சரிந்து விழுந்தாள்.

மெய்மறந்து அவளின் கதறலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசான் தன்னிலை உணர்ந்து மென்மையாக, “தத்தடட தத்தடட தத்தடட டட்டா,” என்று மிக மென்மையாகப் பாட மேடையின் திரை மூடிக் கொண்டது. பெருங்கூச்சலுடன் கூடிய கைத்தட்டல் சத்தம் முழங்கிக் கொண்டிருக்க, மேடையினுள் முகம் குப்புற விழுந்து ராசாத்தி அழுது கொண்டிருந்தாள். அவளைத்தூக்கி ஆசான் தோளோடு தோள் நிறுத்தி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். அவளின் உடல் அதிர்வுகளை அவர் உணர்ந்தார். “சாந்தியாகுமா,” என்றவாறு அவளின் தோள்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவர் நகர பிற கூத்துக்காரர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

*

”ஏத்தா இங்காரு, ரொம்பத்தேன் பகுமானம் பண்றியே இப்பல்லாம்,” என செல்லப்பன் ராசாத்தியைப் பின்னிருந்து அழைத்தான்.

“சொல்லுங்க,” என்றவாறு அலட்சியமாகத் திரும்பிப் பார்த்தாள்.

“இன்னைக்கு ரவைக்கு கொல்லப்பக்கம் வாத்தா. பேசனும்,” என அன்பு கனிந்த குரலில் கூப்பிட்டான்.

“ரெண்டு மாசமா என்ன காரணம்னே சொல்லாம பேசாம இருந்தீயளே ஏன்?” என்று கேட்டாள்.

இவ்வளவு அப்பட்டமான கேள்வியை எதிர்பாரதவனாக திணறி, “அது.. அது வந்து நீ ரொம்ப அழுதுவடிஞ்சிக்கிட்டு இருந்த. இந்த அழுகுத பொம்பளைகள என்னால சமாதானப்படுத்தறது கஸ்டம். அப்டியே விட்டா சரியாயிடுவன்னு நெனச்சேன். அதேன் ராசாத்தி. பாத்தியா. இப்ப நீ சரியாகிட்ட” என்று தணிந்த குரலில் கூறினான்.

“செத்து பொழச்சு வந்திருக்கேன் தெரியுமா ஒங்களுக்கு. கண்ணனும், இந்த கூத்தும் இல்லனா செத்து தான் போயிருப்பேன்” என உணர்ச்சியற்ற பார்வையால் அவனை வெறித்துப் பார்த்தாள்.

“சரி அதெல்லாம் கொள்ளப்பக்கம் போயி பேசுவோம். வா” என மென்மையாகக் கூறினான்.

“இல்ல, இனி நாம பாக்க வாணாம்.”

“என்ன? நான் ஒன்கிட்ட சொன்னத நீ எனக்கே திருப்பி சொல்லுதியோ?”

“இல்ல இனி எப்பவும் வாணாம்.”

“என்னடி வாணாம்? வேற எவனாம் கெடச்சிட்டானோ?”

“யாரும் எனக்கு வாணாம்.”

”ஓ, அப்ப நான் இல்லன்னா செத்துருவேன்னு சொன்னதெல்லாம் பொய்யா? அதுசரி, இப்பத்தேன் ஒனக்குள்ள சூர்ப்பனக ஏறிருக்கால்ல. அப்டித்தேன் பேசுவ. ஒன்னு தெரிஞ்சுக்க. இங்க எவனும் ராமேன் இல்ல வெளங்குதா? அப்டியாரும் என்னவிட ஒசத்தியா கிடச்சிறமாட்டானுக” என்றவாறு அவள் கைகளைப் பற்றினான்.

“தெரியும். கூத்துலயும், கதைலயும் தான் ராமேன் இருப்பான். அவனுக்காக கூட ஒரு பொட்டச்சி அவமானப்பட்டு சாவனும்னு இல்ல. நானும் இனி யாருக்காகவும், எந்த ஆம்பளைக்காகவும் வாழவோ சாகவோ போறதில்ல. என்ன விட்றுங்க” என்றவாறு லாவகமாக கையை விடுவித்துக் கொண்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

“நில்லுடி பலவட்ற தேவுடியாச்சிறுக்கி. நின்னு பேசிட்டுப் போடி. ஒன் சங்கதிய ஊரு நாறச் செஞ்சிருவேண்டி.”

அவள் திரும்பி நின்று தீர்க்கமான பார்வையோடு அவனை முறைத்தாள். அவள் தன்னுடன் படுத்து பேதையாகிக் கிடந்த ராசாத்தி இல்லை என்பதை அந்தப்பார்வையில் உணர்ந்துவிட்டிருந்தான். எதற்கும் துணிந்தவளென அவன் முன் செறுக்கி நின்றிருந்தாள். மெல்ல தொண்டைக்குள் அவன் எச்சிலை முழுங்க, அவள் ஏளனச் சுழிப்போடு அவனை மேலிருந்து கீழ் வரை நோக்கினாள். அது அவன் உடலைக் கூசச் செய்தது. அந்த கூச்சத்தை எதிர்பார்த்தவளாய் புன்னகைத்தவாறு முகம் திருப்பி ஒயிலாக நடந்து சென்றாள்.

”பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க
கஞ்சம் நிகர் சீ…றடியள் ஆகி
வஞ்சி என.. நஞ்சம் என..
வஞ்ச மகள் வந்தாள்”

என உடுக்கையும் மேளமும் கூடி அவன் காதில் மிக மென்மையாக ஆசானின் குரலில் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன