மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்..

10.04.26 அன்று விருட்சம் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசித்த எனது கவிதைகள்..

1.அசைகிறது ஓர் அஸ்திவாரம்

ஆண்டவனின் வளாகத்தில்
அன்று
குறை தீர்க்கும் வரம்தரு நாள்.
பொன்
வேண்டும்,பெண் வேண்டும்,
மாடிமனை
வேண்டும், புகழ் வேண்டும்,
பிறவாமை
வேண்டும்.

என்முறை;
உனக்கென்ன வேண்டும்?
குழந்தை வரம்..
மகனா? மகளா?.
முதலில் மகன்.
எப்படி?
அறிவாய்,அழகாய்.,..
தந்தோம்.

அடுத்து மகள்..
எப்படி?.
அறிவாய்,அழகாய்..
ஆயுள் வேண்டாமா?
ஆமாம் ஆயுளும் வேண்டும்.
அப்படியே
தந்தோம்.

மகனுக்கு மறந்தேனே,
ஆயுள்
சேர்க்க வேண்டும் இறைவா.
இந்த
பிறவிக்கு முடிந்தது வரம்.
அசைகிறது
எனது
இல்லற
அஸ்திவாரம்.

2.வேப்பமரம்.

வாசலில் கிளைவிரித்து வருவோரை
வரவேற்கும்.
பச்சைப் பசேலெனப் பட்டாடை
போர்த்திருக்கும்.

வானளாவும் மருத்துவ உலகு
கைவிரித்த
தீராத நோயெலாம் தீர்க்கும்
வேப்பிலைக்காரி.

ஊர்மாறி பேர்மாரி கருமாரி
மஞ்சள் குங்குமம்
இட்டு
மங்கையர் வணங்கும்
கோவில்.

வெப்பபூமியில் வேம்பு
வெப்புநோய்
தீர்க்க நிற்கும் தேவதை.

இன்னும் சொன்னால்,
பறவைகள்,
அணில்கள் கசக்கும் வேம்பின்
இனிக்கும்
தங்கப்பழம் தின்ன ஓடோடி
வரும்.

வேப்பமரம் கிருமிநாசினி
மட்டுமல்ல,
கெட்ட ஆவிகளை விரட்டும்
என்றும்
சொல்வார்.

தகிக்கும் கோடையில்
குளிர்நிழல்
வேம்பு வரம்தானே

  1. புலியா பூனையா

ஆற்றில்
கல்லில் துவைத்து எடுத்த
வெண்பட்டுச்
சேலையாய் வெளுத்து விட்டது
கீழ் வானம்..

காற்றில்
கலந்திட புதுமணம் வீசும்
பூக்களை
வைரக் கற்களாய் முற்றமெங்கும்
உதிர்த்து
நின்றது வேப்ப மரம்.

பாரதியின் பாட்டை விடிந்தும்
விடியாததுமாய்
நினைவூட்டி
கூவிக் கொண்டிருந்தது
மாங்குயில்

நடைப் பயிற்சிக்கு மாடிக்குச்
செல்லும்
நேரமிது, வாசலில் கோலமிட்டு
படிகள்
நாலைந்து ஏற,’ யாரது’
என்றே
தலை தூக்கியது பாம்புபோல்
சுருண்டு
படுத்திருந்த பூனை.

உறக்கம் கலைந்த கோபம்
முகத்தில்
மின்னியது, எடுத்த அடியை
முன்னே
வைப்பதா பின்னே வைப்பதா
கலக்கம்.

புலியா என்ன? பூனைக்கு
அஞ்சுவதா?
போ ,போ குரல் கொடுத்தேன்.
அசைவே
இல்லை கண்மூடி கனவு
காண்கிறதோ?

சிறுசிறு கற்களை எடுத்து
கீழ்படியில்
நின்று மேலே எறிந்தேன்
ஒன்று கூட
அதன்மேல் விழவில்லை.

மீண்டும் நாலைந்து படி
ஏறினேன்.
இப்போதும.
சுகமான தூக்கத்தில் பூனை,
துஞ்சு புலி
இடறினது போல் ஆகுமோ?
வம்பெதற்கு?
என்று வந்துவிட்டேன் இறங்கி.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன