ஜி.பி.சதுர்புஜன்/“வானப்ரஸ்தம்”

“வர வர எனக்கு ஒண்ணுமே முடியலே ! பேசாம ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு போய்விட வேண்டியதுதான் போலிருக்கு..... காலையி லாவது பரவாயில்ல – எப்பிடியோ சிம்பிளா சமையல செஞ்சு சமாளிச்சுடறேன். ஆனா, சாயங்காலம் கிச்சன் பக்கமே போகத் தோண  மாட்டேங்குது.... கை காலெல்லாம் போட்டுக் கொடையுது !”

சுதாதான் அலுத்துக் கொண்டாள்.
கொஞ்ச நாளாகவே – அவள் தன்னுடைய ஆசிரியர் வேலையில் தினம் தினம் நான்கு மாடி ஏறி வகுப்பறை வகுப்பறையாக போக முடியவில்லை என்று வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து – இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
அதென்னவோ தெரியவில்லை , வேலையை விட்டு விட்டாலே, சீக்கிரம் வயதாகி விடுகிறது. ஓட்டமெல்லாம் அடங்கி, ஒரேடியாக மெதுவாக நடக்க ஆரம்பித்து விடுகிறோம். கூடவே உடம்பும் மனதும் மக்கர் பண்ண ஆரம்பித்து விடுகின்றன….
“நான் ரெடிப்பா ! உன்னாலே என்னிக்கு முடியலேன்னு முடிவு பண்ணினப்புறம் சொல்லு…..ஒரு ரிட்டையர்மென்ட் ஹோமுக்கு ஷிப்ட் பண்ணிடலாம்!”
இதை நான் சொன்னவுடன் சுதாவின் ஸ்ருதி மாறிவிட்டது.
“முடியலேன்னு சொன்ன உடனே கிளம்பிட முடியுமா? சும்மா எதுக்கும் இருக்கட்டும்னு உங்ககிட்டே சொல்லி வெச்சேன்….நீங்க பாட்டுக்கு அப்பிடியே எந்த ரிடையர்மென்ட் ஹோமுக்கு போகலாம்னு பார்த்துகிட்டே இருங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் போய்த்தானே ஆவணும்?”
அதுவும் சரிதானே !
நானும் இனிவரும் நாட்களில் என்ன செய்யப் போகிறோம் , எங்கே கடைசி காலத்தைக் கழிக்கப் போகிறோம் என்று யோசிக்காமல் இல்லை.
இதற்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்க வேண்டுமா என்ன?
கதையா இது- கருவைத் தேடிக்கொண்டிருக்க? அறுபது வயதை நெருங்கினாலே, இந்தக் காலத்தில் தானாகவே நம் எல்லோருக்கும் இந்த நினைப்புகள் – கவலைகள் – எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் – வரத்தானே செய்கின்றன ?
இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கள் சீமந்த புத்திரன் ஸ்ரீதருக்கு திருமணம் நடந்தபோது எல்லாம் ஒரே கொண்டாட்டமாகத்தான் தெரிந்தது. பெரிய கடமையை முடித்து விட்டோம், சுமையை எல்லாம் இறக்கி வைத்து விட்டோம் – என்றெல்லாம் பெருமை ஏற்பட்டது நிஜம்தான்.
“பொறுப்பெல்லாம் முடிஞ்சுதா ? இனிமே நீங்க ரெண்டு பேரும் ஹாய்யா, நிம்மதியா இருக்கலாம் !” என்று ஆளாளுக்கு உறவினர்களும், நண்பர்களும் சொன்னபோது, ஏதோ திரும்பவும் இரண்டாவது தேனிலவுக்குத்தான் போகப் போகிறோமோ என்று ஒரு ஆனந்த பிரமையைத் தந்தது.
ஆனால், திருமண சந்தடிகள் ஓய்ந்த உடனேயே வெறுமை தட்ட ஆரம்பித்து விட்டது சுதாவுக்கும், எனக்கும்.
திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு ஏற்பாடு செய்தபடியே ஸ்ரீதர், ஸ்வர்ணா இருவரும் இதே ஊரிலேயே இருந்தும், தனியே ஒரு ஃப்ளாட் வாடகைக்கு எடுத்து “ சுதந்திரமாக” ( பொருள் விளக்கம் : மாமியார் இல்லாமல்) இருக்க முடிவு செய்து தனியே போய் விட்டனர்.
அதற்குப் பிறகு சுதாவும், நானும் அனுபவித்து வருவது மயான அமைதியைத்தான்.

இரண்டே கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும், ஸ்ரீதரும், ஸ்வர்ணாவும் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. கேட்டால், நேரமே இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். இருவரும் காலையில் போனால் இரவுதான் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு முடித்து பல நாட்களில் தூங்கக் கூட செய்து விடுவோம். வார இறுதி என்றால், நெட் ப்லிக்ஸ் பார்ப்பதற்கும், மால் சுற்றுவதற்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
எங்கள் வாழ்க்கைக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாவிட்டாலும், அவர்கள் இருவரும் அந்நியோன்னியம் குறையாமல் இன்றுவரை இருந்து வருவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
ஆனாலும், இந்தத் தனிமை எங்களை வதைக்கத்தான் செய்கிறது.
திடீரென்று நமக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நம் குழந்தைகளே நம்மிடம் நடந்து கொள்ளும்போது நமக்கு இனிக்கவா செய்யும்? எதிர்பார்ப்புகள் இல்லாமல் அன்பு செலுத்த வேண்டும் என்ற பகவத்கீதை உபதேசமெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது – அதற்காக இப்படியா?
“ சரி…சரி…. போதும் யோசிச்சுக்கிட்டே உட்கார்ந்து கெடக்கறது …. போயி ஏதாவது ரெண்டு ரிடையர்மென்ட் ஹோமைப் பார்த்துட்டு வாங்க… ஒரு ஐடியா கிடைக்கும்.” – சுதா நெட்டித் தள்ளினாள்.
அவள் உள்ளே வேலை செய்யும் போது நான் சும்மா உட்கார்ந்திருந்தால் அவளுக்குப் பொறுக்காது.
சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது வைத்தியநாதன்தான். என்னுடைய கம்பெனி வேலையில் எனக்கு அவருடன் பல வருடப் பழக்கம். அப்படித் தொடர்ந்த தொழில் முறை உறவு நல்ல நட்பாகவும் மலர்ந்திருந்தது.
அவர் என்னை விட இருபது வயது பெரியவர். கடந்த சில வருடங்களாக தொடர்பில் இல்லை. விசாரித்ததில், ஊரிலேயே
அவருடைய ஒரே மகன் இருந்தும், அவர் கோடம்பாக்கத்தில் ஒரு ரிடையர்மென்ட் ஹோமிற்கு போய் விட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.
சரி…… அவரையும் பார்த்த மாதிரி இருக்கும், இந்த ஹோமெல்லாம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்ட மாதிரியும் இருக்கும் என்று என்னுடைய ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
“அவருக்கு ஏதாவது வாங்கிக்கிட்டுப் போங்க!’ – கடைசி நிமிடத்தில் சுதா ஞாபகப்படுத்தினாள். ஓரிரு புத்தகங்களை அவருக்குப் படிப்பதற்காக எடுத்துக் கொண்டேன். போகும் வழியில், ஆப்பிள், வாழைப்பழங்கள் வாங்கி ஜோல்னாப் பையில் போட்டுக்கொண்டேன்.
இடத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. வைத்தியநாதன் போனில் சொன்னபடியே, அந்தப் பரட்டைத் தலை காமெடி நடிகர் வீட்டுக்குப் பின்புறம் என்று சொன்னபோது தெருவில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
ஒரு பெரிய பங்களா, வெளியில் நீளமான கருப்பு கேட். போர்டு எதுவும் இல்லை. தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். கீழே ஹாலில் ஒரு குடும்பமே உட்கார்ந்திருந்தது. அந்த ஹோமைப் பராமரிப்பவர்கள் போலத் தெரிந்தது.
வைத்தியநாதன் என்று சொன்னவுடனேயே, நான் அவருக்கு என்ன உறவு முறை வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு, மேலே போக அனுமதித்தார்கள். நான்காம் நம்பர் ரூமில் இருக்கிறார் – படியேறியவுடன் இடது பக்கம் என்றார்கள்.
மேலே ஏறியவுடனேயே ரூமும், ரூமில் வைத்தியநாதனும் கண்ணில் பட்டார்கள். தலையைக் கவிழ்த்துக் கொண்டு தொந்தியையோ தரையையோ பார்த்துக் கொண்டு கட்டிலில் தன்னந்தனியாக அமர்ந்த்திருந்தார் அவர்.

தலையைத் தூக்கி என்னைப் பார்த்து புரிந்து கொண்டவுடன் சந்தோஷமும், ஆச்சரியமும் மேலிடக் காட்சி அளித்தார்.
“வாங்க வெங்கட்… வாட் எ சர்ப்ரைஸ்… இங்க வந்து இப்பத்தான் ஆறு மாசம் ஆகுது. பொண்ணு ரெண்டு பேரும் கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருக்காங்கன்னு ஒங்களுக்குத்தான் தெரியுமே !” ..பையன் பாபு இங்கதான் இருக்கான். ஆனா, என் மனைவி இருக்கும்போதே அவளுக்கும், மருமகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான்…கொஞ்சம்கூட ஒத்து வரலை….அதனால் இவ்வளவு நாளும் தனியாத்தான் அயனாவரத்திலே சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்…. பக்கத்திலே இருக்கிறவங்க ஆத்திர அவசரத்திற்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுவாங்க…..
“ஆனா.. இப்ப உடம்பு ரொம்ப முடியல…. ஒன்னு ரெண்டு தடவை எனக்குத் தெரியாமலே கீழே விழுந்துட்டேன்னவுடனே பொண்ணு – பையன் எல்லாருமா சேர்ந்து இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க …” அமைதியாக அவர் சொல்வதை எல்லாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். செத்த வீட்டுக்கு துக்கம் கேட்கப் போனால் சிலர் தன்னிச்சையாக நடந்ததை எல்லாம் சொல்வார்களே, அது போல அவர் சொல்லிக் கொண்டு போனார்.
“எனக்கு இங்க ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை – எல்லாம் நல்லாத்தான் இருக்கு….அதுக்காக வீட்டுல இருக்கற மாதிரி, வீட்டுக்காரி கவனிச்சுக்கற மாதிரி வருமா?…..அதெல்லாம் இனிமே முடிஞ்ச கதை வெங்கட்!.

“மாசம் இருபத்தஞ்சாயிரம் ஆகுது சார்! சாப்பாடெல்லாம் பரவாயில்லை ! நீங்கதான் பார்க்கிறீங்களே…எல்லாம் க்ளீனாத்தான் மெயின்டெயின் பண்றாங்க – போதும் சார் !”

“எங்கிட்ட சேவிங்க்ஸ் இருக்கறதுனாலே ப்ராப்ளம் இல்லை…கடைசி யாத்திரைக்கு வேண்டிய எல்லா செலவுக்கும் சேர்த்து ரெடியா வெச்சிருக்கேன் வெங்கட் !..
“ஏதோ ஓடிக்கிட்டிருக்கு வெங்கட்– நாளை எண்ணிக்கிட்டிருக்கேன்….ரொம்பக் கஷ்டம் இல்லாம முடிஞ்சா சரி !”
மெளனமாக அவர் சொல்வதைக் கேட்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் சொல்லவோ செய்யவோ தோன்றவில்லை.
கொண்டு வந்த புத்தகங்களை அவரிடம் நீட்டினேன்.
“இப்பெல்லாம் படிக்க முடியல வெங்கட்! படிக்கறதை நிறுத்திட்டேன்…ஒழுங்கா கண்ணு தெரிய மாட்டேங்குது… டீவி கூட பார்க்கிறதில்லே…. எப்பவாவது சூப்பர் சிங்கர் பார்க்கறதோடு சரி !”
பழத்தைப் பார்த்தார்.
“இந்த பழமெல்லாம் கூட வேண்டாம் வெங்கட். நான் ஒருத்தன் தானே, எல்லாத்தையும் வாங்கிக்கிட்டா வேற யாருக்கோதான் தூக்கிக் கொடுக்க வேண்டியிருக்கும்….ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் கொடுங்க – எடுத்துக்கறேன் !”
“தமாஷ் என்னன்னா எல்லாரும் மிக்சர், சமோசான்னு பாக்க வரப்போ கொண்டு வராங்க ….அதெல்லாம் நான் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ! எதுவும் வயித்துக்கு ஒத்துக்கறதில்லே ! இட்லி, மோர் சாதம் – இது இருந்தா போதும் எனக்கு…”
நேரம் ஆகிவிட்டதை அறிந்து செல்ல எழுந்தேன்.
“அப்பப்போ டைம் கிடைக்கிறப்போ வந்துக்கிட்டிருங்க வெங்கட் ! அதுதான் வேணும் எனக்கு ! பேசறதுக்குத்தான் ஆளு இல்லை – முடிஞ்ச போது வாங்க !”
கையைப் பிடித்து கெஞ்ச மாட்டாத குறையாக வைத்தியநாதன் சொன்னபோது எனக்குக் கண் கலங்கி விட்டிருந்தது.
விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியபோது எனக்கு பத்து வயது கூடியிருந்தது.

3 Comments on “ஜி.பி.சதுர்புஜன்/“வானப்ரஸ்தம்””

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன