
April 18, 2026
அஞ்சலி டி.ஐ.அரவிந்தன்
அன்புள்ள ஜெ,
அண்மையில் நீங்கள் எழுத்தாளர் அரவிந்தன் அவர்கள் மறைந்தபோது எழுதிய அஞ்சலி குறித்து எழுந்த எதிர்ப்பு ஆரவாரம் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த அஞ்சலிக்குறிப்பில் அந்த அளவுக்கு கூச்சலிடுமப்டி என்ன உள்ளது என எனக்குப் புரியவில்லை. ஆனால் அந்த எதிர்ப்பைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என அறிய விரும்புகிறேன். ஏன் இந்த கூச்சல்? இவ்வளவு வன்மம், கசப்பு, காழ்ப்பு?
ஆர். நாகராஜன்
அன்புள்ள நாகராஜன்,
அந்த எதிர்ப்பை நான் அதிகமாகக் கவனிக்கவில்லை, வாழும் தமிழ் நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. தொடர் நிகழ்ச்சிகள். அமெரிக்கப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எண்ணிப்பாருங்கள், இன்று உலக இலக்கியம் கவனிக்கும்படி வாழும் தமிழ் என்னும் ஒரு பெருநிகழ்வு நியூயார்க்கில் நிகழ்ந்துள்ளது. உலக இலக்கியச் சூழலில் முக்கியமான ஓர் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி ஒரு நான்குவரி செய்தி போடாத தமிழ் ஊடகங்கள் இந்த வம்பை பற்றி ‘வன்மம், உளறல்’ என்றெல்லாம் எழுதித்தள்ளுகின்றன என்றால் அவற்றின் மதிப்பு என்ன?
இந்த வரலாற்று நிகழ்வு பற்றி ஒரு வரி வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் இந்த வம்பு பற்றி பக்கம் பக்கமாக நியாயம்பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் யார்?
வெறும் குப்பைகள். என்னைப்போன்ற கனவுகளுடன் செயல்படுபவர்களின் ஒரு சொல் பெற தகுதியற்ற கீழ்கள். ‘கீழ்மையே கீழ்களின் ஆசாரம்’ என்றார் ஜெயகாந்தன்.
அந்த எதிர்ப்பு இரண்டுவகையினரிடமிருந்து எழும். முதல் வகையினர் நம் சூழலில் வஞ்சத்தை, காழ்ப்பை, கசப்பை வெளிப்படுத்துவது தவிர வேறெந்த அறிவார்ந்த பங்களிப்பும் இல்லாமல் பொதுவெளியில் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள். இவர்கள் பெரும் கூச்சல் போடுவதுபோல தெரியும், ஆனால் அதிகபட்சம் நூறுபேர்தான். அந்தக் குப்பைகள் உருவாக்கும் சத்தங்களை மட்டும் கேட்டு எதிர்வினை புரியும் பாமரர் இரண்டாவது வகையினர்.
நான் வாழும் தமிழ் விழாவை பற்றி பேசும்போது, ஒரு மாதம் முன்னரே நண்பர்களிடம் இதைச் சொல்லியிருந்தேன். இந்த வன்மக்கூட்டம் விழாவில் இன்னின்னாரை அழைக்கவில்லை என மட்டுமே பேசுவார்கள்- அதன் வழியாக சிலரை தூண்டிவிட முயல்வார்கள். விழாவுக்கு உள்நோக்கம் கற்பிப்பார்கள். அந்நிகழ்வின் எந்த சாதக அம்சமும் அவர்களின் கண்களுக்குப் படாது.
விழா நிகழ்கையில் ஏதேனும் சிறிய குறை உருவானால் தமிழுக்கே அவமதிப்பு, இலக்கியத்தை அழிக்கமுயற்சி என எகிறிக்குதித்து வசைபாடுவார்கள். விழா சிறப்புற நிகழ்ந்தால், ஒரு குறைகூட இல்லை என்றால், விழாவைப் பற்றிப் பேசுவதை அப்படியே விட்டுவிட்டு வேறேதாவது சிறிய விஷயத்தை எடுத்துக்கொண்டு வசைபாடுவார்கள். ஆவேசக்கூச்சலிடுவார்கள்- இதுவே நிகழும் என சொல்லியிருந்தேன்.
அவ்வாறு அவர்கள் கண்டடைந்ததுதான் இந்த அஞ்சலி விவகாரம். இது இல்லையேல் இன்னொன்றை கண்டுபிடித்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் அந்த பற்றி எரியும் உலகத்தின் தவிப்பை என்னால் உணரமுடிகிறது. தன் அறிவுச்செயல்பாடு மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் சென்றடையும் நரகம் அது. அதில் சிலர் உண்மையில் எழுத்தாளர்கள். அவர்களிடம் மட்டும் அந்த காழ்ப்புகளை விட்டு வெளியே வருக, எழுத்தை நம்புக என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். இந்தக் காழ்ப்பினால் நீங்கள் ஆக்கபூர்வமாக எழுதமுடியாமலாகிறது என்பதை மட்டுமாவது புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கவனிக்கலாம், நான் எழுதிய அந்த அஞ்சலிக்குறிப்பில் மாபெரும் அவமதிப்புகளாக அவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்தையும் (அரவிந்தன் சிறிய உடற்குறை கொண்டவர், இளமையில் போராடி மேலே வந்தவர், அவருடைய குடும்பச்சூழல்) காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் அவருடைய அஞ்சலிக்குறிப்பில் என்னைவிட விரிவாகவே எழுதியுருக்கிறார். அதில் எவருக்கும் பிரச்சினை இல்லை, ஏனென்றால் அவர் இப்போது இலக்கு அல்ல.
அரவிந்தனை நான் இழிவுசெய்துவிட்டேன் என கொந்தளித்து எனக்கு ‘நாகரீகம்’ கற்பிப்பவர்கள் எவருக்கும் அவர்கள் என்னை இழிவுக்குக்கும் கீழே சென்று இழிவு செய்ய எந்த உளத்தடையுமில்லை. கடந்த ஒருவாரமாக ‘செத்து ஒழி’ என்ற வகையில் மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. என் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அப்படி ஐம்பது மின்னஞ்சல்களேனும் வருவதுண்டு.
இந்தக் கும்பலில் உள்ளவர்கள்தான் என்னை ஒரு ரவுடி தாக்கியபோது மகிழ்ந்து கொண்டாடியவர்கள். நக்கலும் நையாண்டியுமாக பதிவு போட்டவர்கள். இந்த இதழ்களெல்லாம் அந்த நையாண்டியை வெளியிட்டன. அதெல்லாமே நயத்தகு நாகரீகமாக அவர்களுக்குப் படுகிறது. இப்போது நாகரீகம் குறைவது பற்றி வருந்திக் கருத்து சொல்லும் பெரியமனித பாவனையாளர்கள் எத்தனைபேர் அப்படி என்மீதான தாக்குதலைக் கொண்டாடியவர்களை பெயரளவிலேனும் கண்டித்தார்கள்? உண்மையில் இவர்களின் பாவனைகள் எவருக்குத் தெரியாது?.
அரவிந்தனுக்கு வருகிறேன். என் இயல்பால் என்னால் உண்மையாக மட்டுமே வெளிப்பட முடியும். நான் ஒன்றை எழுதிய பின்னரும்கூட அதில் உண்மையாக வெளிப்பட்டுள்ளேனா என பலமுறை யோசிப்பேன். மிகை என்று கொஞ்ச ஐயம் வந்தால்கூட சமநிலைக்கு முயல்வேன். அரவிந்தன் பற்றிய என் அஞ்சலிக்குறிப்பு கூட அவ்வாறான உண்மையான உணர்வின் வெளிப்பாடே.
நான் அரவிந்தனை அவருடைய 19 வயதில் சந்தித்தேன். அன்று அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்த, அறிவார்ந்த ஆர்வம் கொண்ட இளைஞர். ஆகவே என்னை அவர் கவர்ந்தார், நான் அவருடன் தொடர் உரையாடலில் இருந்தேன். அந்த காலகட்டம் மட்டுமே என் நினைவில் அவரைப் பற்றி சாதகமாகச் சொல்லத்தக்கது. அதை மட்டுமே நினைவாக எஞ்சவைக்க நினைக்கிறேன்.ஆகவே அதை மட்டுமே அஞ்சலியில் குறிப்பிட்டேன். மற்ற அனைத்தையும் மறக்க நினைத்தேன். ஆகவே அந்த அஞ்சலியை அவ்வாறு சுருக்கமாக எழுதினேன். அது என் சரியான உண்மையான அகவெளிப்பாடு.
இப்போது இந்த விவாதத்தால் என் எதிர்மறை நினைவுகளை விளக்குகிறேன். இதை எழுத அரவிந்தனின் அண்ணனும் காரணம். அவர் எனக்கு எழுதிய மிகக்கீழ்மையான கடிதம், அவர் நண்பர் எழுதிய கடிதம் ஆகியவையே இவற்றை பதிவுசெய்ய காரணம். என் குறிப்பில் அரவிந்தனின் தந்தையின் இயல்பு பற்றி ஒரு சிறு குறிப்பு இருந்தது. (அவருடைய பிரச்சினையில் அரவிந்தனுக்காக நான் தலையிட்டிருக்கிறேன்) ஆனால் அது அவர் தமையனுக்கு இப்போது அகௌரவமாகப் படுகிறது என்பதனால் நீக்கிவிட்டேன். ஆனால் பிறர் அதை எழுதியுள்ளனர்.
அரவிந்தனுக்கு தன் அடிப்படைச் சூழலில் இருந்து உருவான ஓர் இயல்பு இருந்தது என இன்று நினைக்கிறேன். அது ‘அன்றன்றைய முதலாளிகளுக்கு விசுவாசமாக நயந்து இருத்தல்’ என வரையறுக்கத்தக்கது. அதை நம் சூழலில் பலரிடம் காணலாம்.
அரவிந்தன் ஆர்.எஸ்.எஸ் இதழான விஜயபாரதத்தில் நான் ஆசிரியர் பொறுப்பில் (ஜயன் என்றபேரில்) இருந்தபோது எனக்கு அறிமுகமானவர். அவரை தொடர்ந்து வெளியிட்டு முன்வைத்தவன் நான். அவருக்கு இந்தியா டுடே இதழில் வேலை கிடைப்பதற்காக அவரை அழைத்துச்சென்று, ஆர்.எஸ்.எஸ். மேலிடத்தில் இருந்தவர்களை சந்தித்து அவர் தகுதியை விளக்கி வாய்ப்பு வாங்கி கொடுத்தவனும் நான்தான். ஏனென்றால் அன்று நான் முக்கியமானவனாக இருந்தேன்.
உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை, அன்று அரவிந்தன் எதையும் எழுதி நிரூபித்தவர் அல்ல. மிக இளைஞர். அவருக்கு நான் உதவியது அவர் அந்த உடற்குறையுடன் எடைமிக்க மூட்டையுடன் பேருந்தில் ஏறுவதைக் கண்டு அடைந்த மனவருத்தம் காரணமாகவே. அன்று அவருடன் சென்று அந்த காகித மூட்டைகளை நான் பேருந்தில் ஏற்ற உதவியிருக்கிறேன்.
இதழாளராக ஆனபின் அரவிந்தன் அந்த இதழின் ஆசிரியர்களின் விசுவாசியாக ஆனார். மாலனுக்கு, அதன்பின் வாசந்திக்கு. என்னிடம் அவர் சம்பிரதாயமான உறவை பேணலானார். அந்த விலக்கத்திற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை, மாலன் எனக்கு விரோதமாக அன்று இருந்தார் என்பது மட்டுமே காரணம். நானும் அரவிந்தனிடமிருந்து அகன்றேன்.
இந்தியா டுடேயில் இருந்து வெளிவந்தபின் அரவிந்தன் காலச்சுவடின் விசுவாசியானார். காலச்சுவடு எனக்கு எதிராக திரும்பியபோது காலச்சுவடு முதலாளிகளை மகிழ்விப்பதற்காக என்னை வசைபாடி, நையாண்டி செய்து, அவதூறு செய்து கட்டுரைகள் எழுதினார். தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள். அந்த அவதூறுகளுக்கெல்லாம் சான்றாக அரவிந்தன் சொன்னது நான் அவருடன் நெருக்கமாக இருந்தேன் என்பதை மட்டுமே. அதாவது நான் அவருக்கு உதவினேன் என்பதே அவர் என்னை அவதூறு செய்வதற்கான ஆதாரமான நிகழ்வு.
அரவிந்தன் எழுதிய ஒரு கட்டுரைக்குக் கூட நான் எதிர்வினையாற்றியதில்லை. அவதூறுகளை புறக்கணிப்பதே என் வழக்கம். அக்கட்டுரைகள் வெளியான காலகட்டத்தில் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தால்கூட ஒரு சம்பிரதாயமான புன்னகை, நலம்விசாரிப்பை தவறவிட்டதுமில்லை. அவர் ஏன் அவற்றை எழுதுகிறார் என எனக்குத் தெரியும். அத்தகைய மனிதர்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன், உதவவேண்டும், ஆனால் உதவியதும் விலகிவிடவும் வேண்டும் என்பதே இன்று பெரிய உதவிகளைச் செய்யும் எல்லா நண்பர்களிடமும் நான் சொல்வது. இன்று உக்கிரமான வசைகளை பொழிபவர்கள் பெற்ற உதவிகள் அவர்களுக்குத் தெரியும்.
ஒரே ஒருமுறை மட்டுமே அரவிந்தன் பற்றி கடுமையாக எழுதியிருக்கிறேன். தமிழ் இந்துவில் அவர் வேலைக்குச் சேர்ந்தபோது, அவர் அங்கே காலச்சுவடுக்கு நெருக்கமானவர்களை உள்ளே கொண்டுசெல்வது, காலச்சுவடுக்கு வேண்டாத மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை விலக்குவது என தன் சிறிய மனதை வெளிப்படுத்தினார். அது எப்படி தமிழ் அறிவுச்சூழலுக்கு அமைந்த ஒரு நல்வாய்ப்பை பறிக்கிறது என எழுதினேன்.
நான் தாக்கப்பட்டபோது அரவிந்தன் மகிழ்ச்சியுடன் நையாண்டியாக அதைப் பற்றி எழுதினார். அதன்பின் என்னை நேரில் சந்தித்தபோது “சிலசமயம் அப்டி எழுதவேண்டியிருக்கு” என கோணலாகப் புன்னகைத்தார். அதுதான் அவரது ஆளுமை. அவ்வளவுதான் அவர். அத்தகையோர் எனக்கு எப்போதுமே பரிவுக்குரிய எளிய சிறிய மனிதர்கள் மட்டுமே.
அவரிடம் ஒரு பணிவு, மென்மையான பழகும் பாவனை உண்டு. தமிழ் இலக்கணம் சார்ந்த ஒரு அறிதலும் உண்டு. ஓர் இதழாளராக அவர் கடும் உழைப்பாளி. அது பலரை கவர்ந்திருக்கலாம். ஆனால் அதற்கப்பால் integrity என்பதற்கு ஒரு திமிர் தேவை, அது அவரிடம் இல்லை. உண்மையில் நம் நடுத்தரக்குடும்பத்தினரிடமுள்ள அந்த பணிவு அவர்கள் தங்களை தாங்களெ சிறுமை செய்துகொள்ள வழிவகுக்கிறது. எந்த இளைஞரும் எச்சரிக்கைகொள்ளவேண்டிய ஓர் படுகுழி இது.
அத்தனைக்கும் பின் ஏதோ இணையதளத்தில் வேலை செய்தபோது அரவிந்தன் என்னிடமே ஓர் உதவியை கோரினார். ஒரு தொடர்புக்கான அறிமுகம் அது. நான் என்னால் முடியாது என்று மின்னஞ்சல் செய்தேன்.அதன்பின் ஆர்.எஸ்.எஸின் பழைய தலைவரிடம் இன்னொரு உதவியைக் கோரவும் அவர் தயங்கவில்லை என அறிந்தேன்.
இந்த ஆளுமையின்மையால்தான் அவர் ஓர் எழுத்தாளராக ஆகமுடியவில்லை. அவர் எழுதிய எல்லாமே ஜோடனைகள். புனைவுகள்கூட ஒருவகையான முன்முடிவுள்ள வம்புகளின் தொகுப்புகள் மட்டுமே. எழுத்துக்கு தேவையான அகத்தீவிரம் அவரிடம் அமையவில்லை. அவரே என்னிடம் அவருடைய இரு நாவல்களை அளித்து கருத்து கேட்டார். இதை அவரிடம் நேரிலும் சொல்லியிருக்கிறேன். “கொஞ்சமாவது திமிர் இருக்கணும்” இதுதான் அவரிடம் நான் சொன்ன ஆலோசனை.
அவர் மறைந்த இத்தருணத்தில் ‘ஆகா மகத்தான படைப்பாளி’ என்பார்கள் பலர். அது தமிழ்ச்சூழலின் சம்பிரதாயப் பாவனை. ஆனால் அவர் எழுதிய எவையும் எந்த வாசகனையும் எவ்வகையிலும் தொட்டதில்லை. அவர் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்போதிலும்கூட அவரை எவரும் அவர் மறைந்த கணம் வரை எழுத்தாளராக ஏற்கவில்லை.
கொஞ்சம் சிந்திப்பவர்கள் கவனிக்கலாம், அரவிந்தன் ஓர் ஊடகத்தின் ஆசிரியராக இருந்தார். தமிழிலக்கியம் மீது ஆர்வம் கொண்டவராகவும் நடுநிலைமையும் சமநிலையும் கொண்டவராகவும் அவரை சிலர் சொல்கிறார்கள். அந்த ஊடகம் நியூயார்க் வாழும் தமிழ் இலக்கிய விழா, வாழும் தமிழ் இலக்கிய விருது பற்றி வெளியிட்ட செய்தி என்ன? என்ன உளத்தடை? அவரை சமநிலையானவர் என எண்ணும் அவருடைய நண்பர்கள் எவரேனும் அவரிடம் அதைப்பற்றி கேட்டார்களா?
அரவிந்தனுக்கு வாழும் தமிழில் அஞ்சலி செலுத்துவது பற்றிய பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்னார். அவருடைய ஊடகத்திற்கு முறையாக எங்கள் நிகழ்வு பற்றிய செய்தி அளிக்கப்பட்டது. ஊடகத்தொடர்பாளர் நேரில் கூப்பிட்டும் சொன்னார். “நாங்க அதை முக்கியமா நினைக்கலை” என்பது அரவிந்தன் அளித்த பதில். ஆகவே அந்நிகழ்வில் எதற்காக அவருக்கு அஞ்சலி என்றார் நண்பர். “அவர் தமிழிலே எழுதியிருக்கார், அவ்வளவு போதும் நமக்கு” என நான் பதில் சொன்னேன். இன்று அவர் நடுநிலையும் பெருந்தன்மையும் கொண்டவராக, நாங்கள் வஞ்சமும் காழ்ப்பும் கொண்டவர்களாக இங்குள்ள பதர்களால் சித்தரிக்கப்படுகிறோம்.
நான் இந்த எதிர்மறை மதிப்பீட்டை இப்போது சொல்வதுகூட ஏதோ அபாரமான படைப்பாளியை, அரியமனிதரை நான் அவதூறு செய்துவிட்டதாக ஒரு கூட்டம் எகிறிக்கூச்சலிடுவதனால்தான். நான் அவரைப் பற்றிய அத்தனை எதிர்மறை மனப்பதிவுகளையும் கடந்து என்னைக் கவர்ந்த அந்த எளிமையான, கடும் உழைப்பாளியான, ஆர்வம் கொண்ட இளைஞரை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்ள முயன்றேன். அதன்பொருட்டே அந்த அஞ்சலியை எழுதினேன். வாழும் தமிழ் இலக்கிய விழாவில் அவருக்கான அஞ்சலி செலுத்தப்பட்டபோது ஆழ்ந்த உணர்வெழுச்சியையும் அடைந்தேன்.
இந்தக் குறிப்பை இப்போது முடித்து, இதைக் கடந்து அவரை அந்த இளைஞராக மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வேன். இனி இந்த எதிர்மறைப் பிம்பத்தை எவ்வகையிலும் நினைவில்கொள்ளப்போவதில்லை. இதை எழுதநேர்ந்தமைக்காக வருந்தவும் செய்கிறேன்.
