நாபா.மீரா/குறையொன்றுமில்லை கண்ணே!

“அம்மா, எங்க தலைமை ஆசிரியை இன்னைக்கு உங்களோடதான் பள்ளிக்கு வரணுமின்னு சொல்லிட்டாங்க., “அம்மாவின் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கி குனிந்த படியே பேசிய தேனருவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது யாழினிக்கு.
சற்றே உதறலோடு தலைமை ஆசிரியை அறைக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தாள் யாழினி.
“உள்ளே வாங்க. உட்காருங்க யாழினி மேடம். சிங்கிள் பேரண்டா தேனருவிய வளர்க்க நீங்க எவ்வளோ சிரமப்படறீங்கன்னு புரியுது. “
“அவளுக்கு கற்றல் குறைபாடு இருக்கு. அதுக்குன்னு நிறைய சிறப்புப் பள்ளிகள் இருக்கு, எங்களைவிட அவங்க நல்லா ஃபோகஸ் பண்ணி இந்த மாதிரிப் பசங்களை முன்னுக்குக் கொண்டு வந்துடுவாங்க.”
“தயவு செய்து டி.சி. வாங்கிடுங்க,” கைகூப்பிய தலைமை ஆசிரியையின் வேண்டுகோளுக்கு இணங்கி டி.சி.அப்ளை செய்து தேனருவியிடன் கிளம்பிய யாழினிக்கு மனம் எதிலுமே ஒன்றவில்லை.
மாலை, மகளோடு அஷ்டலட்சுமி கோயில் சென்று தரிசனம் முடித்து பீச்சில் காற்றாட உட்கார்ந்தனர்.
ஆறாம் வகுப்பு படிக்கும் தேனருவியின் எதிர்காலம் குறித்த பய உணர்வு தாக்க.. சற்று நேரம் விழிகள் மூடினாள் யாழினி.
விழிகள் திறந்த யாழினிக்கு ஒரே பதற்றம், அருகிலிருந்த தேனருவியைக் காணவில்லை. நெஞ்சம் பதற தேனு…தேனு என கதறிக்கொண்டே ஓடியவள் கண்ட காட்சி….
சற்றே தொலைவில் ஒரு பையன் கிடார் வாசித்துக் கொண்டிருக்க…
அவனை நோக்கியவாறே ஹம் செய்தபடி கைகளை கிடார் போல் கோர்த்து வாசிக்கும் தேனருவியின் பாவனை… கண்கொள்ளாக் காட்சி…
குறையைப் பற்றியே சிந்தித்து ஏன் குழம்ப வேண்டும்.இயல்பாய் வருவதைப் பற்றிக் கொண்டே சென்றால் ஆகாதா?
ஓடிச் சென்று மகளை அணைத்துக் கொண்ட யாழினியின் மனக்கண்ணில் ஒரு வெளிச்சப் புள்ளி ஊடுருவிச் சென்றது.

பி. ஆர்.கிரிஜா/இசை ஆர்வம் – விருட்சம் நாளிதழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன