ஸ்ரீராம் /அக்காவின் ஜிமிக்கி

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு நித்யாவுக்கு ஏனோ முன்னிருந்த உற்சாகமும், சந்தோஷமும் வரவில்லை.
இந்த ஜிமிக்கிக்காக அக்கா வித்யாவுடன் போட்ட சண்டைகள் நினைவுக்கு வந்தன.
அக்கா வித்யாவுக்கு அத்தை வாங்கித் தந்த ஜிமிக்கி அது. இவளுக்கும் அதன் மேல் ஒரு கண் இருந்தது. அவ்வப்போது வித்யா வீட்டில் இல்லாதபோது நைசாக எடுத்து காதில் போட்டுக் கொண்டு அழகு பார்ப்பாள்,.
பள்ளி இறுதி வகுப்பு பிரிவுபச்சார விழாவுக்குத் துணிந்து இதை அணிந்து கொண்டு சென்று விட்டாள். விழா முடிந்து வீடு திரும்பியபோது வீடு திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. வித்யா ராட்சஸி போலக் கத்திக் கொண்டிருந்தாள். நித்யாவுக்கு பயம் அதிகமாய் வர இன்னொரு காரணமும் இருந்தது. ஒரு ஜிமிக்கியின் திருகாணியைத் தொலைத்திருந்தாள்.
அதுவும் தெரிந்து, வீடு இவர்கள் சண்டையில் நிம்மதி இழந்தது. அத்தையே வேறு திருகாணி வாங்கி கொடுத்து விட்டாலும், ரொம்ப நாட்களுக்கு அக்காவும் தங்கையும் பேசிக்கொள்ளவே இல்லை.
அப்புறம் மெதுவாய் பேசிக்கொண்டபோதும் பழைய ஓட்டுதல் இல்லை. ‘ஆஃப்டர் ஆல் ஒரு ஜிமிக்காகவா இப்படி?’ என்று நித்யாவுக்கு ஆத்து ஆத்து போனது. வித்யாவுக்கு அதே எண்ணம் இருந்தது என்பது பின்னர் அவள் திருமணம் ஆகி புக்ககம் புறப்படும்போது தெரிந்தது.
பிறந்த வீட்டைப் பிரியும் சோகக் கண்ணீருடன் கணவனுடன் கிளம்பிய வித்யா இந்த ஜிமிக்கியை எடுத்து நித்யா கையில் கொடுத்து “இது இனி உனக்குத்தான் நித்யா.. இதற்காக நான் அவ்வளவு தூரம் பேசி இருக்கக் கூடாது” என்று சொன்னபோது நித்யாவும் கண்கலங்கி விட்டாள்.
இதோ, இப்போது ஜிமிக்கியைப் போட்டுக் கொள்ளும்போதெல்லாம் அக்காவின் நினைவு வந்து அவளைக் கலங்க வைத்து விடுகிறது.
சேர்ந்திருந்த காலத்தின் இழந்த இனிமை பிரிந்த பிறகுதான் தெரிகிறது என்று தோன்றியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன