முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /இறுதி ஆசை

அந்தப் பெண்ணைப் பார்த்தவன் அவள் சோகச் சித்திரமாக இருப்பதைப் பார்த்து, அயர்ந்து போய் விட்டான்.திருமணம்வரை போய்க் கழுத்தில் தாலி ஏறாத நிலைமை அவளுடையது.
நண்பன் அரவிந்த்திற்காக நிச்சயிக்கப் பட்டவள் அவள். திருமண நாளன்று, சரியாகக் கழுத்தில் தாலி ஏறு முன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்ட மணமகன் இன்று வரை, கோமாவில் படுத்த படுக்கையில்.
அவள் அம்மா,”இப்போ என்ன அவனோட கல்யாணமா ஆகிடுச்சு? வேறு கல்யாணம் செய்துக்கோம்மா”, என்று கூறி வர, இவளால் தான் அவனை மறக்க முடியாமல், ஏதோ தடுத்தது.
தன்னை அறிமுகம் செய்து கொண்டவன், தான் அவளை மணந்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினான்.
அவளோ, அவனிடம்,”நான் துரதிர்ஷ்டசாலி.மணமேடை வரை போய் , மாங்கல்ய பாக்கியம் பெறாதவள். எதற்கு என்னைப் போய்…”, என்று மறுத்தாள்.
கோமாவின் இடையில் சுயநினைவு வந்தபோது, நண்பன் பேசிய காணொளிக் காட்சியைக் காண்பித்தான்.
அதில் அரவிந்த் தன் நண்பனை அவளை மணந்து கொள்ளச் சொல்லியும், அதுதான் தனது ஆசையென்றும் கூறியிருந்தான்.
“அரவிந்த் இப்போது எப்படி இருக்கிறார் ?” என்று அவள் கேட்க, அவன் முதல்நாள் இறந்து விட்டதாக இவன் சொல்ல அவள் விழிகள் நீர் உகுத்தன.
அவள் விழிநீரை உரிமையுடன் துடைத்த அவன் கைகளை அவள் தடுக்கவில்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன