
வினிதாவிற்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம். வசிப்பதோ ஒரு சிறிய ஃப்ளாட்டில். மிகச் சிறிய பால்கனியில் முல்லை, குண்டு மல்லி, துளசி வைத்து நன்றாகப் பராமரிக்க ஆரம்பித்தாள். அவள் அம்மா திவ்யாவிற்கு அதில் துளியும் நாட்டமில்லை. “நீ எல்லாத்தையும் வெச்சுட்டுப் போய்டுவ…. என்னால இதைப் பாக்க முடியாது..” என்று அலுத்துக் கொள்வாள். அவள் அம்மாவின் வெறுப்பினாலோ என்னவோ, எல்லா செடியும் அப்படியே இருந்ததே தவிர நன்கு செழித்து வளரவில்லை. இப்படியே ஆறு மாதங்கள் ஓடி விட்டன. வினிதா மனம் தளராது விடாமல் அதற்கு உரம் போட்டுக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தாள்.
ஒரு நாள் கல்லூரியிலிருந்து திரும்பி வந்து நேராகப் பால்கனிக்குச் சென்று பார்த்தாள். ” என்ன ஆச்சர்யம்….!”ஒரு குண்டு மல்லியில் அழகான மொட்டு இதழ் பிரிந்தும்
பிரியாமலும் இருந்தது. பக்கத்தில் ஒரு முல்லை நன்கு விரிந்து இவளைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.
வினிதாவிற்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர். அவள் அம்மா திவ்யாவிற்கு நம்பவே முடியவில்லை. அந்த மொட்டு விரிந்த பூவின் அழகில் அம்மாவும் பெண்ணும் சொக்கி நின்றனர்.

One Comment on “பி.ஆர்.கிரிஜா/மலர்ச்சி”