
நான் செய்த ஒப்பனைகள் கலைந்திருந்தன.
பிரேம் எனக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த புடவையும் அதற்கு நேர்த்தியாக அமைய வேண்டும் என்று என்னுடன் சற்றும் எரிச்சலுறாமல் ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கி வாங்கிக் கொடுத்த ஜிமிக்கி அசைவின் போது விண்மீனைப் போல் மினுமினுத்தன.
என்ன கேட்டுவிட்டேன் என்று பிரேமுக்கு இத்தனை கோபம்?
அவளுக்கும் இப்படி ஏதேனும் வாங்கிக் கொடுத்திருப்பாய்தானே என்று சும்மா அவனைச் சீண்டிப் பார்க்க உதிர்த்த வார்த்தைகள் இத்தனை பாதிப்பை அவனுக்கு உண்டாக்கும் என்று தெரிந்திருந்தால் விளையாட்டுக்குக் கூட அவ்வாறு கேட்டிருக்க மாட்டேன்.
கோபத்தில் தடித்த வார்த்தைகளைக் கூட அவன் உதிர்க்கவில்லை.
சட்டென்று எழுந்த அவன் சொல்லாமல் கொள்ளாமல் போய் இரண்டு நாட்களுக்கு மேலாகிறது.
அவன் சாத்திப்போன கதவுகளை அவனே வந்து திறக்கட்டும். அதுவரையில் இதே இடம் எனக்குப் போதும். சீதை தனித்து சிறையிலிருந்த அசோகவனமென நினைத்துக் கொள்கிறேன்.
வருவான். வெகுசீக்கிரம் வருவான். என் மேல்தான் எத்தனை ப்ரியம். நிமிடத்திற்கொரு முறை ‘சஞ்சனா, சஞ்சானா’ என்று அழைத்துக் கொண்டிருப்பவன் வரமலா போய்விடுவான். என்னை என்னைவிட அதிகமாக நேசிக்கும் என் ப்ரேம் என் ப்ரேம் இதோ கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது
கரைந்த போன திலகம் மீண்டும் நெற்றிக்கு ஏற அவன் வருகையைக் காண பார்வையை திருப்பி நிற்கிறேன்.
