
பச்சை புற்கள் பட்டாடை போலப் படர்ந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சித் திடலில்..!
வண்ணக்கலவை சுவற்றின் முன். வானவில்லாய் நின்றிருந்த அந்த நவநாகரீக மங்கை.. காந்தம் போலக் காண்பவர்களைக் கவர்ந்தாள்.
பன்னீர் ரோஜாவின் நிறத்தை ஒத்த அந்தப் புடவையில். காதோரம் ஆடிய லோலாக்கில் அருளின் இதயமும் லேசாக ஆடியது.
ஆனால் அவள் கண்கள் ஏனோ செம்மீனாய். கண்ணீர் குளத்தில் தத்தளித்தன.
“அடடா.. என்ன பிரச்சனை இந்தப் பூலோகத்து தேவதைக்கு?” என. கலைந்திருந்த
அவளின் கேசம் போல அவன் மனமும் சஞ்சலமடைந்தது.
“உதவி தேவையா?” என உதவிட அவன் மனம் தவித்த வேளையில். அவள் இயல்பாய் தன் அலைபேசியை அணைத்தாள்.
முகத்தை.. கேசத்தை. தன் அலங்காரத்தை அலைபேசியின் கேமரா கண்கள் வழியாகச் சரிசெய்தாள்.
“இந்தக் காணொளிக்கு எப்படியும் ஒரு 10,000 லைக்ஸ் கிடைக்கும் பாரு” என்று தோழியுடன் பேசியவாறு அருளை காணாது கடந்து சென்றாள்.
90ஸ் கிட்ஸ்சான” தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? ” என்று தன் தலைவிதியை நொந்து கொண்டான் அருள்.
சுற்றும் முற்றும் பார்த்தவன் யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு. நிம்மதியுடன் தான் வந்த வேலையைக் காண விரைந்து சென்றான்.!
