நாகேந்திர பாரதி/அடுத்தது என்ன

‘மறக்கணும்.. ம். அதுக்கு நான் ….. ‘ என்றவனின் இதழ்களைத் தன் இளம் விரல்களால் அழுத்தி , ‘நோ . இது மாதிரி பேசாதேடா’ என்று கண்ணீர்க் கண்களோடு வேண்டினாள் .
‘நீ மட்டும் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டே, மறக்கணும்னு . எதை , எதை எதை மறக்க முடியும் ‘ .
‘எல்லாத்தையும் தான் . நான் தான் சொன்னேனே , டாக்டர் சொல்லிட்டாருன்னு , இன்னும் எத்தனை நாளைக்கு நான் … ‘ என்று விம்மியவள், ‘என்னை நினைச்சு நீ உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்காதே, உன் பெற்றோரின் கனவுகள் எனக்குத் தெரியும் . பேரன் பேத்தின்னு ..’
‘அவங்க கனவிலே நீயும் இருக்கேன்னு உனக்குத் தெரியும்தானே’
‘எஸ், அதனாலதான் சொல்றேன் . இது அவங்களுக்குத் தெரியக்கூடாது . ப்ராமிஸ் ‘
‘நீ என்னதாண்டி நினைச்சிருக்கே . இருக்கு காலம் உனக்கு இன்னமும், நான் விட மாட்டேன். ‘
‘ப்ராக்டிகலா யோசிடா, நம்மாலே எதுவும் முடியாது. இது விதி ‘
‘கட்’ என்ற இயக்குனர் அந்த எழுத்தாளரிடம் கேட்டார். ‘ அடுத்து என்ன சார் டயலாக் ‘ . எழுத்தாளர் சொன்னார் ‘ அதுதான் சார் எனக்கும் தெரியலே , புதுமையா ஏதாவது சொல்லணும்னு ரெண்டு நாளா யோசிச்சுட்டு இருக்கேன். ஒண்ணும் வர மாட்டேங்குது . ‘
‘பேக்கப் ‘ என்ற இயக்குனர் தனியாகச் சென்று தலையில் அடித்துக் கொண்டார். ‘பைனான்சியர் தம்பியைக் கதைக்குழுவில் சேர்த்தது என் தப்புதான் ‘

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன