
22.5.26 வெள்ளிக்கிழமை “கதைஞர்களைக் கொண்டாடுவோம்” 197வது நிகழ்ச்சியில் அனுராதா ஜெய்சங்கர் அவர்களின்” லவ் யூ ஹரிணி” கதைபற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதை சுருக்கமும் அதுகுறித்த எண்ண ஓட்டமும் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அம்மா வித்யா , பதின் பருவ மகள்கள் தாரிணி, ஹரிணி. இருவரும் இரு துருவங்கள்.
ஹரிணி இளைய மகள் 13 வயது .அந்தப் பருவத்திற்கு அவள் படிப்பது அசோகமித்திரன், பாலோ சீலோ அவர்களின் அல்கமிஸ்ட் இது மாதிரியான புத்தகங்கள். வயதுக்கு மீறிய அறிவு ,சிந்தனை அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் ஒட்ட முடியாமல் தடுக்கிறது. ஏன் அக்கா தாரிணியே அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று கோபம் கொள்கிறாள்.
சினிமாவிற்கு அக்கா தாரிணி சிநேகிதிகளுடன் கூட்டிச்சென்றால் மற்றவர்கள் கதாநாயகனின் தோற்றத்தைப் பற்றிக் குலாவி மகிழும்போது ஹரிணி இது எந்த நாவலின் தழுவல் எந்தப் படத்தின் நகல் என்று ஆராய்ந்து விவாதம் செய்கிறாள். அவளால் மற்ற குழந்தைகளைப் போலச் சாதாரணமாக இருக்க முடிவதில்லை.
இது பெற்றோருக்கு ஒரு பெரிய சவால். எல் கே ஜி முதல் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்று டபுள் பிரமோஷன் வாங்கி வருகிறாள். அதற்கு மேல் பிரமோஷன் வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுக்கிறார்கள்.
தாரிணிக்கும் ஹரிணிக்கும் எப்போதும் சண்டைதான். பெரிய மேதாவின்னு நினைப்பு என்பது தாரிணியின் வாதம். வீடு அவ்வப்போது குருஷேத்திரம் ஆகிவிடும்.
ஆனால் அப்பா ராகவன் புரிந்து கொண்டு தாரிணியிடம் பொறுமையாகப் பேசுகிறார். “இவள் ஏன் அப்பா எப்படி இருக்கிறாள் இவள் ஏன் எல்லாரையும் போலச் சாதாரணமாக இருக்கக் கூடாது “என்ற கேள்விக்கு “உன்னுடைய சித்தப்பா பிள்ளை அனிருத்”என்று சொல்லும் பொழுதே ‘பாவம்” என்கிறாள் தாரிணி”. எதற்குப் பாவம் “
“அவனுக்கு மூளை வளர்ச்சி இல்லை ஸ்பெஷல் சைல்டு பாவம் சித்தி தான் எல்லாம் செய்கிறாள்.” “அவனைப் பாவம் என்று சொல்கிறாய் அல்லவா? நம் ஹரிணி கிப்டேட் சைல்டு. வயதுக்கு மீறின அறிவு சிந்தனை .
அவ்வப்பொழுது அவளுடைய வயது குறிக்கிட்டு இரண்டுக்கும் உள்ள முரண்பாட்டை அவளால் சமாளிக்க முடியாமல் தவிக்கிறாள். அவளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவளுடைய அறிவுப் பசிக்கு நாம் தான் ஆகாரம் தேட வேண்டும். அதற்காகக் குழுக்கள், கிளப் முதலானவை இருக்கின்றன. இதே போல் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் அவள் பழக வேண்டும். இதையெல்லாம் பார்த்து வைத்திருக்கிறேன். செயல்படுத்த வேண்டும்.
“சரி அப்பா இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்”அதற்கு ராகவன் “ஒன்றும் செய்ய வேண்டாம் அவள் எப்படி இருக்கிறாளோ அவளை அப்படியே ஏற்றுக்கொள் “அக்செப்ட் டென்ஸ். “சரி அப்பா.”தாரிணி, அப்பா சொல்வதை ஏற்றுக் கொள்கிறாள். அவளும் குழந்தை தானே மீண்டும் சண்டை வந்தாலும் வரலாம். ஆனாலும் புரிதலை நோக்கிக் குடும்பம் நகர்கிறது.
Care givers எனப்படும் பெற்றோர்களின் அணுகுமுறை மிகப் பிரமாதம். அந்தக் குழந்தைக்குத் தி ஜானகி கிராமன் அவர்கள் சொல்வது போல் ‘சக்தி வைத்தியம்’ செய்வார்கள்.
இப்போதுதான் நமக்குத் தெரிகிறது சாதாரணமாக இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்பது. பாலகுமாரன் சொல்வார் “இயல்பாக இருங்கள்”என்று.
சைல்ட் ப்ரோடஜி என்று சொல்கிறோம் ஒரு மேண்டலின் சீனிவாசன் ஆகட்டும் ஒரு வீணை காயத்ரி ஆகட்டும் ,ஜேக்கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆகட்டும். எல்லாம் ஜொலிக்கும் வைரங்கள் தான். ஆனால் அவர்களுடைய இயல்பான வாழ்க்கையில் அவர்கள் எத்தனை பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டும். அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் குடும்பம் அவர்களை எப்படி அரவணைத்துக் கொண்டு போக வேண்டும். இதையெல்லாம் பார்க்கும்பொழுது சராசரி மனிதராக இருப்பதே சுகம் என்று தோன்றுகிறது.
எழுத்தாளர் ‘கிஃப்டட் சைல்டு’ என்று ஒரு புது வர்க்கத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஸ்பெஷல் குழந்தைகள்மேல் நமக்கு ஏற்படும் பரிதாபம் இந்தக் கிப்டட் குழந்தைகள்மேல் நமக்கு ஏற்படுவதில்லை.
மாறாக அவர்கள் மேதா விலாசத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று குறை காண வாய்ப்பு இருக்கிறது. அவர்களைப் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறார்.
மிக அழகாக எழுதப்பட்ட கதை.

சிறப்பான பார்வை. மிக்க நன்றி.🙏😊
Thankyou mam