நாபா.மீரா/யுக்தி

குப்பை வண்டியக் கொஞ்சம் தள்ளி நிறுத்தக்
கூடாதா, எங்க வீட்டு வாசல்தான் கிடைச்சுதா?
தெருக்காரங்க எல்லாம் கன்னாபின்னான்னு குப்பையைக் கொட்டிட்டுப் போயிடறாங்க. வீட்டுக்குள்ள இருக்க முடியலை.

சில சமயங்களில் ஹிஸ்டீரியா வந்த மாதிரிக் கத்தும் ராஜேஸ்வரியை தெருக்காரர்கள் துளிக்கூட லட்சியம் செய்யவில்லை.

ஏன், அவள் வீட்டிலிருந்த அவளது கணவன் மற்றும் பெற்ற பிள்ளைகளே கண்டுகொள்ளவில்லை.

காலங்கள் இப்படியே செல்ல முதலில் உடல் நலக் குறைவு காரணமாகக் கணவன் இறக்க, ஒன்றிரண்டு வருடங்களிலேயே நோய்வாய்ப்பட்டு ராஜேஸ்வரியும் இறந்து போனாள்.

கடைசிவரை அவளது பிரச்சினைக்கான தீர்வே கிடைக்காமலே போய்ச் சேர்ந்தாள் புண்ணியவதி.

அவர்கள் மகள் திருமணமாகி வெளியூரில் இருக்க உள்ளூரில் இருந்த மகன், மனைவி பேச்சைக் கேட்டு வீட்டைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு வேறிடம் பார்த்துச் செட்டிலாகிவிட்டான்.

ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்தவன், இப்போ இருக்கிறவங்க குப்பைத்தொட்டி பிரச்சினையை எப்படிச் சமாளிக்கிறாங்க?

கண்ட காட்சியை நம்ப முடியாமல் அவன் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன.

அங்கே சிறிய சதுரக் கதவுக்குள் பிள்ளையார் சிரித்துக் கொண்டிருந்தார்.

2 Comments on “நாபா.மீரா/யுக்தி”

Comments are closed.