அதிரன்/அடையாளம்

புழக்கடையில் புதராய்
மண்டி கிடக்கும்
புற்களை அகற்ற
கிராமத்திலிருந்து
வந்திருந்தார்
வயதான பெரியவர்

வந்தவர் ஒரு மருத்துவன்
போல் புதரைச் சுற்றி சுற்றி
பார்த்துக் கூலியை
முடிவு செய்துகொண்டார்

பேரம் மத்தியத்திற்கு
வந்தபின்
உடைகளை மாற்றிவேலையைத் தொடங்கினார்

அப்பொழுதுதான்
கவனிக்கிறேன்
அவரது இரண்டு பாதங்களின்
விரல்கள் அனைத்தும்
ஒன்றே ஒன்று நெருக்கி
பூமியை இறுக
கவ்விக்கொள்வது போல்
அமைந்திருப்பதை

உள்ளங்கைகள்
ஏதோ ஒரு கருவியை
பிடித்திருக்கும் பாவனையில்
உள்மடிந்தேவாறே இருப்பதையும்

உடல் ஒரு கரும்பாறை போல்
வெயிலுக்கு மினுமினுத்தன

அவர் கடப்பாறையை
கையில் எடுத்தபொழுது
என்
உள்ளங்கை
இரண்டையும்
வெகுநேரம்
பார்த்துக் கொண்டிருந்தேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன