மாலா மாதவன்/உழைப்பின் நிறம் சிவப்பு

“அடி ஆத்தீ! இதென்ன கிளிஞ்சல்லாம் ரத்தம் பூத்தாப்புல கெடக்கு?” பழனியின் பின் வந்த ராக்கம்மா சத்தமிட்டாள்.
“அடிப் பழனி! உன் கால் ரத்தம் தானாத்தா! பாத்து வரக்கூடாதா? நமக்கெல்லாம் ஒரு செருப்பு வாய்க்குதா பாரு? போ! போய் அங்கிட்டு உட்காரு. உனக்கான கிளிஞ்சல்களை இன்னிக்கு நான் பொறுக்கியாறேன்.” சின்னாத்தா பதறினாள்.
சின்னாத்தாவும் ராக்கம்மாவும் பழனியுடன் தான் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு இத்தனை கிலோ எனக் கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொடுத்தால் கிலோவுக்கு 10 ரூபாயெனப் பணம் கிடைக்கும். பத்து ரூபாயே அதிகமென்பார் முதலாளி.
“ஏய். இருடி. இந்த ரத்தக் கிளிஞ்சல்களை அப்படியே தனியே பொறுக்கி நாமளே தோரணமா கட்டலாம்.” பழனி காலைத் தாங்கித் தாங்கி நடந்து அவற்றைப் பொறுக்கித் தோரணமாக்கினாள்.
கிளிஞ்சல்களைக் கொடுக்கும் இடத்தில் முதலாளி.
“அதென்ன பழனி! தனியே பதுக்கி இருக்க? வேலைக்குன்னு வந்து பொறுக்கியாச்சுன்னா எல்லாம் கம்பெனிக்குத் தான். எடுத்து வெளியே வை!” என்றவர் அதைப் பார்த்ததும்..
“அட! தோரணமாவே கட்டிட்டாடா. நேர கொண்டு போக்கடைக்கு!” என உதவியாளரிடம் உத்தரவிட்டார்.
தனக்கென ஒன்று செய்து கொள்ள முடிய வில்லையே என்ற விரக்தியில் இருந்த பழனி அன்றைய வேலையை முடித்து வீட்டுக்கு வர இரவாகி விட்டது.
வீட்டு வாசலில் புதிதாகத் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு தோரணம்.
“ஆச்சி! உண்டியலை உடைச்சி முழுசா நூறு ரூவா கொடுத்து உங்க முதலாளி கடையில தான் வாங்கினேன் இந்தத் தோரணம். அழகா இருக்குல்ல!”
தோரணம் முழுதும் பழனியின் ரத்தம் சிவப்புத் திட்டாய் உறைந்து போயிருந்தது. அவள் உழைப்பைப் போலவே.

One Comment on “மாலா மாதவன்/உழைப்பின் நிறம் சிவப்பு”

  1. அருமையான கதையாக்கம். வலிமையான, அதே சமயம் எளிமையான சொற்கள். கதையை கடத்தும் விதம் அருமை. எதிர்பாராத முடிவு. வாழ்த்துகள் மாலா.

Comments are closed.