
வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந்தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர். இவரது வாழ்வு சராசரி வாழ்க்கையன்று; அறத்தின் வழியே நன்மைகளை விதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நெடும் பயணம். இயற்கையோடு இயைந்த வாழ்வும், சக மனிதர்கள்மீதான எல்லையற்ற கருணையும், ஒரு எளிய மனுஷியை எவ்வாறு சமூகப் புரட்சியாளராக மாற்றியது என்பதற்கு வாழும் சாட்சி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
காந்தி, ஜே.சி.குமரப்பா, வினோபா பாவே ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்ட கிருஷ்ணம்மாள், அன்றாடப்பாட்டுக்கே அல்லல்படும் அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்டு, தம் வாழ்வையே காந்தியத்தில் கரைத்துக்கொண்டவர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் அய்யன்கோட்டை கிராமத்தில் 1926ஆம் ஆண்டு ஜூன் 16இல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த இவரது வாழ்வுப் பயணத்தின் ஆதிப்புள்ளி ஆன்மிகம். அது அவரது தாயின் அதிகாலை வழிபாட்டிலிருந்தே தொடங்கியுள்ளது. ஆதவனின் கதிர்கள் நிலத்தைத் தீண்டிச் சிலிர்க்க வரும் வேளையில், இயற்கையையே இறைவனாகக் கண்டு உருகிய தாயின் பிம்பம், சிறு வயது கிருஷ்ணம்மாளின் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்புவரை படித்த அவரை, மேலும் படிக்கும் வேட்கை துரத்தியது. தம் அண்ணனின் ஆலோசனைப்படி பெற்றோருக்கும் சொல்லாமல் நடைப்பயணமாய் தம் கிராமத்தை விட்டு வெளியேறினார் கிருஷ்ணம்மாள். அவரது அந்தப் பதின்பருவத்தில் கல்விக்காகத் தொடங்கிய நடை, பின்பு சேவை நடையாய் மாறி இன்று வரை ஓயவில்லை.
மதுரைக்குக் கல்வி பயிலச் சென்றபோது, காந்தி கிராமத்தின் நிறுவனர் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரனின் தாயுள்ளம், கிருஷ்ணம்மாளை எவ்வித பேதமுமின்றி பூரிப்பாய் அரவணைத்துக் கொண்டது. 1946ஆம் ஆண்டு கல்வி பயிலும் காலத்தில் காந்தியடிகளைச் சந்தித்து, அவருக்கு அருகிருந்து சில நாட்கள் பணிவிடை செய்யும் வாய்ப்பு கிருஷ்ணம்மாளுக்குக் கிடைத்தது. இந்நிகழ்வு அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.
கல்லூரிக் கல்விக்குப் பின், புகழ்பெற்ற காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா தலைமையில், சுதந்திரப் போராட்ட வீரரும் தேவர் சமூகத்தைச் சார்ந்தவருமான ஜெகந்நாதனை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். சமூக உயர்வே இருவரின் சிந்தனையாக இருந்ததால், தம்பதியினர் இணைந்து ஆச்சார்ய வினோபா பாவேயின் ‘பூமி தான இயக்க’த்தில் பங்கேற்றனர். தமது இருபத்தாறு வயதில் இந்தச் சேவைப் பயணத்தைத் தொடங்கிய அம்மா, வழியெங்கும் வள்ளலார், தாயுமானவர், பாரதி பாடல்களைப் பாடியபடி நடந்துசெல்வாராம்.
ராஜபுத்திர, யாதவ நிலப்பிரபுக்கள் மற்றும் சங்கர மடங்களின் கட்டுப்பாட்டில் பிஹாரின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்குக் கொத்தடிமைகளாக வாழ்ந்தனர். பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் சுரண்டல்களையும் அங்குக் கேள்வி கேட்பார் யாருமில்லை. இந்தச் சூழலில்தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாணவர் இயக்கத்தையும், பின்னர் முழுப் புரட்சி இயக்கத்தையும் தொடங்கினார். ஜே.பி.யின் அழைப்பை ஏற்று பாட்னா வந்த கிருஷ்ணம்மாள் அந்த முழுப் புரட்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் பாட்னாவில் நடந்த அந்த நிலப்போராட்டம் வெற்றி பெறாது என நினைத்த வினோபா பாவேயும் ஜே.பி.யும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கிருஷ்ணம்மாளிடம் கேட்டுக்கொண்டனர். அவரோ அதற்கு உடன்படவில்லை. பின்னர், மூத்தோர் சொல்லை மீறும் மனமின்றிச் சம்மதித்தார். அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்களோடு ஊர்வலம் சென்றபோது கிருஷ்ணம்மாளும் கைதுசெய்யப்பட்டார். சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், அவர்மீது அன்புகொண்ட பெண்களின் வேண்டுகோளின்படி, வேறு வழி இல்லாமல் காவலர்களிடமிருந்து தப்பித்த கிருஷ்ணம்மாள், கயாவிலிருந்து வாரணாசி வழியே தமிழகம் வந்துசேர்கிறார்.
பீகாரின் கரடுமுரடான பாதைகளில் தொடங்கிய அந்த நெடும் பயணம், இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்த பின்னர், தமிழகத்தின் கிராமங்களை நோக்கி நகர்ந்தது. தம் பச்சிளம் குழந்தை பூமிக்குமாரைக் கைகளில் ஏந்தியபடி, நிலமற்ற ஏழைகளுக்காக நிலப்பிரபுக்களின் வாசல்களில் நிலதர்மம் கேட்டு நின்ற அந்தத் தாயின் உள்ளம், சிந்துதாய் சப்கல், கமலாதேவி சட்டோபாத்யாய், இலா பட் ஆகியோரது சேவைகளையெல்லாம் நினைவூட்டுகிறது.
முதன்முதலாக வத்தலகுண்டு பகுதியில் பெண்களையும் குழந்தைகளையும் திரட்டி, ‘கிராமதான்’ இயக்கத்தின் மூலம் கூட்டுறவு வாழ்க்கை முறையை உருவாக்கிய அவர், தம்மால் இயன்ற ஒரு புதிய சமூக விடியலுக்கான விதையை அங்கே ஊன்றினார்.
எவ்வித அநீதியையும் வன்முறையால் எதிர்கொள்வது மானுட அறமல்ல என்பதை மனத்துக்குள் வரித்துக்கொண்டு செயல்பட்டவர் அம்மா. 1959ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சாதிக்கலவரத்தின்போது, சுற்றியும் மரண ஓலங்கள் சூழ்ந்திருந்த நிலையிலும், காந்திகிராமத்துப் பெண்களைத் திரட்டி ‘அமைதிப் படை’யாக அவர் களம் இறங்கியது ஒரு வீர வரலாறு. ரத்தம் தோய்ந்த நிலத்தில் நின்று அன்பு வழியில் அமைதியை மீட்டெடுத்தார்.
தம் சொந்தக் கிராமத்தில் நள்ளிரவில் கலவரச் சூழல் உருவானபோது, கையில் சின்னஞ்சிறு விளக்கொன்றுடன் மரங்களின் நடுவே நின்று, “கருணை ஒளியே எமை வழிநடத்துக” என்று அவர் கண்கள் தளும்ப உருகிப் பாடிய பிரார்த்தனை, வன்மத்தில் உறைந்திருந்த நெஞ்சங்களையும் கரைத்தது. விடியும் முன்பே அங்கே அமைதி உடன்படிக்கை உருவானது. ஆயுதங்களை விடவும் ஆன்ம பலமே வலிமையானது என்பதையே தம் செயல்களால் நிரூபித்தவர் அம்மா.
1968ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் நாளில், கீழ்வெண்மணியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக வரலாற்றின் மாறாத வடு. சம்பவம் நிகழ்ந்த மறுநாளே, தம் கணவரோடும் குன்றக்குடி அடிகளாரோடும் அங்குச் சென்று, நீதியை நிலைநாட்டப் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார் அம்மா.
பேரதிர்ச்சியில் உறைந்திருந்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது எளிதாக இருக்கவில்லை. ஆனால், அவர்களோடு அங்கேயே தங்கி, கிணறுகள் வெட்டி, பால்வாடிகள் அமைத்து, அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் வாழ்ந்த காலத்தில், குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார், வலிவலம் தேசிகர் போன்ற பண்ணையார்களின் பகுதிகளுக்குச் செல்வதற்கே மக்கள் அஞ்சியிருந்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில் அம்மா வலிவலம் தேசிகரை எதிர்த்து நடத்திய போராட்டம் தீரமானது.
அந்தத் தெருக்களில் நடக்கக்கூட உரிமையற்றிருந்த பெண்களை ஒன்றுதிரட்டி, விளக்கேந்தச் செய்து, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலைப் பாடவைத்து, அதே தெருக்களில் கம்பீரமாக நடக்க வைத்தார் அம்மா. அவை வெறும் நடைப்பயணங்கள் அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரகடனங்கள்.
கிருஷ்ணம்மாளின் மிகப் பெரிய சாதனை ‘லாஃப்டி’ (LAFTI – Land for the Tillers Freedom) இயக்கத்தின் தோற்றம். இந்த நில உரிமை இயக்கத்தின் மூலம் நிலங்களை வாங்கி ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். அதற்காக வங்கிச் சட்டங்களையே ஏழைப் பெண்களுக்குச் சாதகமாக மாற்ற ஆலோசித்து, விவாதித்து, வெற்றியும் கண்டார். இன்றளவும் அதை நடைமுறைப்படுத்தி வருவது வியக்கத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக, லாஃப்டி மூலம் தொடர்ச்சியாக நிலப் பட்டாக்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. நிலம் என்பது வெறும் சொத்தன்று; அது ஒரு பெண்ணின் தற்சார்பு, அவளது ஆளுமை, வாழ்வாதாரம் என்பதை லாஃப்டி நிரூபித்தது.
வாராந்திரக் கூட்டுப் பிரார்த்தனைகளும், வழிபாடும் அந்தப் பெண்களின் ஆன்மாவைச் சுத்திகரித்து, அடிமைத்தனத்தின் வடுக்களை நீக்கின. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்து வாழ்வு தந்த அந்தத் தாயை, மக்கள் நன்றியோடு “அம்மா” என்று அழைப்பதில் வியப்பேதுமில்லை.
இறால் பண்ணைகளுக்கு எதிரான கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் போராட்டம், முதலாளித்துவத்தின் மக்கள் விரோத வியாபாரத்துக்கு எதிரானதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசே முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றது. காவல்துறையின் தடியடியும், கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினர். அந்தப் போராட்ட காலத்திலேயே, டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ஜெகந்நாதனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் முழுமையாகக் குணமடையாமலேயே, 2012ஆம் ஆண்டு ஃபிப்ரவரியில் அவர் மறைந்தார்.
இணை மறைந்தாலும், அம்மாவின் லட்சியங்களும் உறுதியும் மறையவில்லை. குமரப்பா, நேரு, காமராஜர், ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் வந்து சென்ற அம்மாவின் ஊழியரகத்தில் இன்றும் பனைத் திருவிழாக்களும் இயற்கை எரிசக்தி விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசு வழங்கிய ‘பத்ம பூஷன்’ விருதும், திட்டக் குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் உயரிய பதவிகளும் கிருஷ்ணம்மாள் என்கிற ஆளுமைக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் மட்டுமே. ஆனால், அவரது உண்மையான சிம்மாசனம் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் நெஞ்சங்களில்தான்இருக்கிறது!
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் வாழ்வு வெறும் மேடைப்பேச்சுகளால் ஆனதன்று; அது அர்த்தம் நிறைந்த செயல்களால் எழுதப்பட்ட மானுடக் காவியம். நிலமற்றவர்களுக்கு நிலத்தையும், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையையும் வழங்கும் அறப்பயணம். அது, அவரது நூறாம் வயதிலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டுகிற அகல் சுடராய்த் தொடர்கிறது.
- 6. 2026, ஞாயிறு, காலை 10 : 59, சென்னை – 10.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நூற்றாண்டு (16.6.26) நிறைவையொட்டி எழுதப்பட்ட கட்டுரை.
