ஷைலஜா/மூன்று ரத்தினங்கள்

“இங்கதானே இதே நாளுல நாம நம்ம மூணு புள்ளங்களையும் பறிகொடுத்தோம்..இன்னிக்கு இருபத்திரண்டுவருசமாச்சி.. இருந்திருந்தாநம்ம குளந்தங்களுக்கு முப்பது வயசுக்குமேல ஆகிகண்ணாலம் காட்சில்லாம் நடந்திருக்கும்”
ராமாயி தவிப்போடு சொல்ல,” ஆமா…இதே கடலுகரையில் வெளயாடிட்டு இருந்த உன் மவன், இந்த வேலாயி மவ, என மவன்ன்னு அல்லாரயும் சுனாமின்னு சொல்லிக் காவு வாங்கிட்டான் இந்தசமுத்திர ராசன். “என்று கடலை நோக்கிக் கைச்சொடக்கிக் கத்தினாள் முனியம்மா.
“ கைக்குளந்தைய வச்சிட்டு இருந்தப்போ கடலுக்கு மீனுபிடிக்கபோன நம்ம புருசனுங்க சுறாமீனுகடிச்சி செத்தாங்க..அப்பாலேஆறுவருசம்களிச்சி தெருத்தெருவா குப்ப பொறுக்க நாம போய் வரதுக்குள்ள கடலு சீறிப் பொங்கி ஊருக்குள்ள வந்து நம்ம பசங்கள இன்னும் எத்தினிபேர் உசுரைப்பறிச்சிட்டுப்போச்சு? இன்னிக்குப்பாரு என்னவோ உள்ளாற ஒதுங்கிட்டு அலை அடிச்சிட்டு இருக்கு…சங்கும் கிலிஞ்சலுங்கமா தெரியுது கரை முளுக்க…ஆனா
அன்னிக்கு நாம வச்ச சபதம் தானேஇந்தக்கடல்ல நம்மளோட கைக்காலை இனி நனைக்கமாட்டோம்னு”
“ஆமா கடல்பாசி எடுக்கவாரியா துட்டு நெறயகிடைக்கும்னு மாரிச்சாமி கூப்டான்.…நான் பிச்சைவேணாலும் எடுப்பேனே தவுர நம்ம மக்கள காவு வாங்கின இந்தக்கடல்ல கை வைப்பேனான்னு சொல்லிப்புட்டேன்..நம்மகிட்ட காசுபணம் இல்லேன்னாலும் ரோசம் இருக்குதில்ல?”
“ ராமாயண ராமருக்கே வளி விடமாட்டேன்னு சொன்னவனாமே இந்த ராங்கிக்கார சமுத்திரக்காரன்.? உப்புத்தண்ணீக்கே இத்தினி திமிரு. “
‘ஐயோ காப்பாத்துங்க ..காப்பாத்துங்க’
மூன்று பெண்மணிகளும் குரல்வந்த திசை நோக்க அங்கு ஒரு இளைஞன்,” என்..என் குழந்தை பந்து எடுக்கப்போறேன்னு அலைல மாட்டிக்கிட்டான் ஐயோ எனக்கு நீச்சல் தெரியாதே” என்று கதறினான்.
அடுத்தகணம் கையிலிருந்ததை கீழே கடாசிவிட்டு மூவரும் கடலில் குதித்தனர்.
குழந்தையை உயிரோடு மீட்டனர்.கரைக்கு வந்தவர்களிடம்,
“என் மகன் உயிரைக்காப்பாத்தின உங்களூக்கு எவ்வளவு லட்சம் வேணாலும் தரலாம்.. இப்போதைக்கு பர்சுல இருபதாயிரம் ரூபா இருக்கு முதல்ல அதை வாங்கிக்கம்மா” என்று கண்ணே கடலாக நெகிழ்ந்தான் அந்தக் குழந்தையின் தகப்பன்.
வேலாயியும் ராமாயியும் பெருமூச்சு விட முனியம்மா,” உசுரக்காப்பாத்தறது மனுசங்க புத்தி…அப்புறம் இந்தக்கடலுக்கும் மனுசங்களுக்கும் என்ன சாமி வித்யாசம்? புள்ளயப் பாத்து கூட்டிபோங்க” என்று கைக்குவித்தாள்.
வேலாயியும் ராமாயியும் ஆமோதிப்பதுபோல நீர் வழியும் தங்கள் கரங்களையும் குவித்தனர்.

One Comment on “ஷைலஜா/மூன்று ரத்தினங்கள்”

  1. சுனாமியை நினைத்தால் பக்பக் என்றிருக்கிறது.நாட்பட்ட கஷ்டம் வேறுஒருவருக்கு வரக்கூடாது எனகாப்பாற்றியதற்கு ஒருசல்யூட்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன