கு. ப. ரா/ ராஜேந்திரன் கனவு

ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கைகொண்ட சோபுரத்து அரண்மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கி நாட்டு அரசி குந்தவை உட்கார்ந்துகொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ராஜந்திர சோழனுக்கு அப்பொழுது வயது சுமார் ஐம்பத்தைந்திருக்கும். குந்தவைக்கு நாற்பதிருக்கலாம். மன்னன், ராஜ்ய விவகாரங்களை இளவரசன் ராஜாதி ராஜன் கையில் ஒப்படைத்துவிட்டார், அவர் எண்ணிய காரியங்களை அநேகமாகச் செய்து முடித்து விட்டதால் ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டார்.
அரண்மனைக்குப் பக்கத்திலிருந்த சோழ கங்கம் கொள்ளிடத்தின் பிரவாகத்தைப் பெற்று நிறைந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் கருமேகங்கள் குவிந்து அஸ்தமனத்திற்கு முன்பே இருளைத் தோற்றுவித்தன. திடீரென்று ஒரு பெரும் காற்று எங்கிருந்தோ கிளம்பி வந்தது போல வந்து புழுதியைக் கிளப்பிற்று. மரங்கள் அலங்கோலமாக அங்குமிங்குமாகச் சாய்ந்து ஆடின. அவைகளின் நடுவே கங்கை கொண்ட சோழீசுவரத்தின் கோபுரம் உயர்ந்து கர்வத்துடன் தலையெடுத்து நின்றது.
அரசன் அதன் கொடுமுடியை அகமகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
“ராஜேந்திரா! என்ன அந்தச் சிகரத்தை அப்படிப் பார்க்கிறாய்?” என்று குந்தவை கேட்டாள்.
“அதுவா! என் கனவு. வெறும் கனவாக என் மனத்திலேயே இல்லாமல் உண்மையாக நடைமுறையில் வந்துவிட்டதற்கு இந்தக் கோபுரம் பிரத்தியக்ஷமான அடையாளம் அல்லவா?”
“ஆமாம்!”
“என் உயிரின் உன்னத ஆசைகளெல்லாம் ஒன்றாய்ச் சமைந்து, அதன் கொடுமுடியில், பொற்சிகரமாகக் கிளம்பி விளங்குகிறது. எனது கனவு கடைசியாக உருக்கொண்டுவிட்டது!”
“எனக்குத் தெரியாதா என்ன? அண்ணா உன் கனவுக்குக் காரணம் யார்? நினைவிருக்கிறதா?”என்று குந்தவை சிரித்துக் கொண்டு கேட்டாள்.
“இருக்கிறது அம்மா, நன்றாக இருக்கிறது. நீதான் அந்தக் கனவை என் மனதில் கற்பித்தவள். ஆஹா அந்த நாட்களில்-நான் என்னை அல்லும் பகலுமாக, தூண்டித் தூண்டி வெற்றிகொள்ளச் செய்தாய்!. வேங்கி நாட்டு வெற்றியிலிருந்து திரும்பியபொழுது-நீதானே. ஆம் நீதான்! எல்லாம் உன் உற்சாகம்தான். பொன்னி நாட்டின் புலிக்கொடியில் நாம் கொண்ட பெருமைதான் என்ன! நமது விஜயாலய வம்சத்தில்! அன்று புகாரில் பறந்த கொடி இன்று நாடெங்கும் பறக்கிறது! என் கனவின்-உன் கனவின் பலனாக! வைகைக் கரையிலிருந்து குமரிமுனை வரையில், கடாரத்திலும் ஈழ நாட்டிலும்-இன்று அலைக்காற்றை எதிர்த்து நிற்கிறது நமது கொடி!
கங்கைகொண்ட சோழபுரம்; இதோ பக்கத்தில், கடல்போலப் பரவி ‘ஆமாம்! நீ கங்கை கொண்ட சோழன்; உன் தலைநகர் நிற்கும் இந்தப் பொன்னேரி நீ உண்டாக்கியது! அண்ணா, சோழ சாம்ராஜ்யம் சாசுவதமாகிவிட்டது! அதற்கு அடையாளங்களான இந்த நகர், இந்தக் கோயில், இந்த ஏரி, -எல்லாம் சாசுவதம். நீயே- கங்கை கொண்ட சோழனாகிய நீயே காலாந்தரத்திற்கும் சாசுவதமாகி விட்டாய்!”
குந்தவை உணர்ச்சிப் பெருக்கில் மெய்மறந்து பேசினாள். ராஜேந்திரனும் ஒரு விதமான பரவசம் பொங்க ஆழ்ந்த யோசனையிலாழ்ந்தார்.
“என்ன யோசிக்கிறாய்?” என்று குந்தவை கேட்டாள்.
“இன்று நான் கிருதார்த்தன்! நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டேன்! அபஜயம் என்பது என்னவென்று எனக்குத் தெரியாது. பனியாத சத்துருவே எனக்குக் கிடையாது.”
“ஆமாம்!”
“சோழ சாம்ராஜ்யம் ஸ்தாபிமாகிவிட்டது. இனிமேல் அதற்குச் சிதைவு கிடையாது-அப்படி அஸ்திவாரம் போட்டு அதை எழுப்பி விட்டேன்… ஆனால்…”
“ஆனால்-என்ன? உனக்கென்ன குறைவு இன்று?”
“ஆ! குறைவும் இருக்கிறது! உதாரணமாக, என் நாட்டில், என் சமஸ்தானத்தில், சிறந்த கவி ஒருவன் இல்லையே!”
“கவியா! நீயேதான் தலைசிறந்த கவியாக இருக்கிறாயே!”
“ஆமாம், நீதான் உன் நாட்டின் உத்தமகவி. இந்த நகரம் நீ இயற்றிய மகா காவியமல்லவா..? யோசித்துப் பார்! இதிகாச புராண காலத்திற்குப் பிறகு கற்பனையிலும் காரிய சித்தியிலும் உனக்கு நிகரான மேதாவி எவன் இருந்திருக்கிறான்?”
*நீ அப்படிச் சொல்லாதே! நீ என்னிடம் கொண்டிருக்கும் அன்பு உன் திருஷ்டியை மறைக்கிறது. எவ்வளவோ சரித்திர புருஷர்கள் எனக்கு முன் காலத்திற்கேற்ப சமூக தர்மத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அவர்களைப் போலப் பெருங்காரியம் ஒன்றும் நான் செய்துவிடவில்லை. ஆசாரிய புருஷர்கள், தீர்க்கதரிசிகள், சக்கரவர்த்திகள் எத்தனை பேர்!-புத்தன், சங்கரன், அசோகன்”
“அசோக சக்கரவர்த்திக்கு இணையாகச் சொல்லக்கூடிய சரித்திரம் கொண்டவன்தான் நீ!’
“இல்லையம்மா, இல்லை! அந்த ராஜரிஷியின் உலகளாவிய காருண்ய சேவை-அதற்கு ஈடேது?”
“நான் சரித்திர திருஷ்டியுடனேயே யோசித்துத்தான் பார்த்திருக்கிறேன். உன்னிடமிருக்கும் சில அம்சங்கள் அவரிடம் இல்லையே. அதற்கென்ன சொல்லுகிறாய்! அசோகனுக்கு அடுத்தபடி நீதான் பாரத பூமியில் மாபெரும் மன்னன்!”
“எனக்கு யுத்தங்களில் ஏற்பட்ட வெற்றிகளைக் கொண்டா சொல்லுகிறாய்?”
“இல்லை உன் நிர்மாண வேலையிலிருந்து சோழ நாட்டுத் தலைநகரையே புதிதாகச் சிருஷ்டித்தாய்!”
“தஞ்சை பொன்னி நாட்டின் பொக்கிஷம்தான். ஆனால் இன்று சோழ சாம்ராஜ்யம் பொன்னி நாட்டின் எல்லைக்கு மேல் போய் அகண்ட பாரதபூமியாக ஆகிவிட்டபடியால் தஞ்சையை மட்டும் கொண்டு நாட்டை நடத்த முடியாது. ராஜ்யம் நிலைகொள்ள வேண்டுமானால் பல செழிப்பான நகரங்கள் பல இடங்களில் உண்டாகிக் கூடார முனைகள்போல அதன் விரிப்பைத் தாங்கி நிற்க வேண்டும். இன்று கங்கைகொண்ட சோழபுரம்– நாளை வடக்கே இன்னொரு நகரம்-அதற்கு மேல்” என்று ராஜராஜன் சொல்வதற்குள் குந்தவை தலையிட்டு, “கங்கை ஜலத்தைக் கொண்டுவந்து இந்த ஏரியில் கொட்டி, இதை ஜலமயமான ஒரு ஜய ஸ்தம்பமாக்கினாய்!” என்றாள்.
“இது கங்கைபோல எந்த நாளும் பெருகி நாடு அமோகமாகச் செயல்பட வேண்டும்!”
“தஞ்சைக் கோவிலைக் காட்டிலும் அதிகமாகச் சிற்ப வேலைப்பாடு கொண்ட இந்தக் கோவிலை மயன் சிருஷ்டிபோல
எழுப்பினாய் !”
“தென் நாட்டினுடைய கலைஞானத்தின் ஓர் உருவமாக இது நிரந்தரமாக நிற்கட்டும்!’
“பொட்டல் காட்டைப் பட்டணமாக்கிவிட்டாய்!”
“புனிதமான இந்தக் காவிரி நீர் மலட்டுப் பூமியில் ஈரமேறி விட்டது. இதைப் போல இன்னும் ஐந்து ஜீவ நதிகள் இந்த நாட்டில் புனல் நிறைந்து வழிகின்றன. அந்த நதிகளின் நலத்தையும் இந்த மாதிரி பல முடிகொண்டான் வாய்க்கால்கள் மூலம் தரிசுகளின் மேல் திருப்பித் தங்கம் விளையச் செய்ய வேண்டும். எங்கும் வயல்கள் வண்டல் கட்ட வேண்டும். பொன் அணிய வேண்டும். மக்கள் மகிழ்ச்சிச் சமூகமாக வேண்டும்- ஆகையால் குந்தவையே!”
“ஆகையால் என்ன?” என்று குந்தவை ஆச்சரியமடைந்து கேட்டாள்.
“என் கனவு” என்று ராஜேந்திரன் பேச முடியாதவர்போல் தடுமாறினார்.
“ஏன், உன் கனவிற்கென்ன?”
“இப்பொழுதுதான் உருக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது?. நான் செய்ததெல்லாம்-இனிமேல் செய்யப் போவதற்கு-உரைபோடக் காணாது!”
வயது சென்ற மன்னன் திடீரென்று ஆசனத்தை விட்டுக் குதித்தெழுந்தார்.
“அண்ணா! உனக்கென்ன பேராசை? மனிதன் முயற்சியில் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?”
“என்ன செய்துவிட்டேன்? என் கீர்த்திக்காகவும் சாம்ராஜ்யத்தை சிருஷ்டி செய்திருக்கிறேன். மக்களுக்காக என்ன செய்திருக்கிறேன் சொல்லு?”
“உன் செயல்களின் பயனையெல்லாம் அவர்கள்தானே அனுபவித்திருக்கிறார்கள்? கடாரம் கொண்டதால் வியாபாரமும் கைத்தொழில்களும் எவ்வளவு விருத்தி அடைந்துவிட்டன-இவ்வளவு சீக்கிரமாக நம் கண் முன்னேயே? சிங்களமும் பாண்டிய நாடும் சாம்ராஜ்யத்திற்கு எப்பேர்பட்ட செல்வங்கள்?”
“அறிவு வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறேன்?”
“எவ்வளவோ செய்திருக்கிறாய்!”
“இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறேனே-இதை உண்மையாக அறிவிற்கு இடமாக்க வேண்டும். உரமேறிய நாட்டில் உயிர் ததும்ப வேண்டும். உயிரின் சிகரமாக இந்தக் கோபுரம்போல், உண்மை ஓங்க வேண்டும்.”
மன்னன் மௌனமாகிவிட்டார். அவருடைய எண்ணங்கள் போன போக்கு வார்த்தைகளுக்குக் கிட்டவில்லை. குந்தவையும் அப்படியே சிலை போலச் சமைந்துபோய் உட்கார்ந்திருந்தாள்

திடீரென்று கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளி உருகின தங்கத்தின் வர்ணத்துடன் பூமிமேல் விழுந்து மறைந்தது. மறுநிமிஷம் வான மளாவிய விமானங்கள் இடிவது போன்ற சத்தம் கேட்டது. இடி விழுந்த து
அரசன் எண்ணங்கள் சடக்கென்று நின்றன. அவரது உள்ளம் மலர்ந்து உயர்ந்தபோது திடீரென்று அதைத் தாக்கிய ஒரு அபசகுனம் என்று அந்த இடியைக் கருதினார்.
சிறிது நேரம் கழித்துச் செய்திகள் வந்தன.
இடி கோவில் விக்கிரகத்தின் மேல் விழுந்து லிங்கம் பிளந்து போய்விட்டது.
சோழகங்கம் கரையுடைந்து பாசன நிலங்கள் முழுவதும் நீரின் கீழ் மூழ்கிவிட்டன!
ராஜேந்திரன் அவ்விரண்டையும் சூசனைகளாகக் கொண்டார்.
சிலை அன்று சிதைவடைந்தாலும் கோவில் இன்றும் நிற்கிறது. சோழ சாம்ராஜ்யம் முன்னூறு ஆண்டுகள் கழித்துச் சிதைவு பெற்றாலும் சரித்திரத்தில் அழியாமல் இருக்கிறது.
“அண்ணா! கங்கைகொண்ட சோழபுரம் இவ்வளவுதானா?” என்று குந்தவை சோர்வுடன் கேட்டாள்.
“யார் கண்டார்கள்? நான் கண்டது இன்றும் கனவுதான் போலிருக்கிறது!-சரித்திரமே கனவும் அதன் சிதைவும்தான் போலிருக்கிறது!- பிறப்பும் இறப்பும் போலவோ?” என்று ராஜேந்திரன் பணிவுடன் பேசினார்.
1938

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன