
வலிகளில் பலவகைகள்
எண்ணினால் ஏராளம்
ஞாபகத்திற்கு வரும்
ஊசி குத்துவது போல
சுருக் சுருக்கென்று குத்துவது
ஒரு வகை
நரம்பு தெறிப்பது போல
விண் விண்ணென்று தெறிப்பது
மற்றொரு வகை
பறை அதிர்வது போல
டம் டம்மென்று அதிர்வது
வேறொரு வகை
கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு
குத்தி கிழிக்கும் வலி
ஒரு வகை யென்றால்
உயிரோடு இருக்கும் போதே
ஒரு பறவையின் இறகுகளை
வெடுக் வெடுக்கென
பிய்த்து எறியும்போது
பறவை படும் வாதனை
மற்றொரு வகை வலி
கத்திபோல் சொருகப்படும்
வார்த்தைகளின் வலி
உதவாத சீட்டுப் போல
தூக்கி எறியப் படும் உதாசீன வலி
ஒரு அலட்சியப் பார்வை தரும்
அனாதை வலி
துப்பாக்கி தோட்டா போல
நெஞ்சை துளைக்கும்
புறக்கணிப்பின் வலி
இப்படி தொடரும் வலியில்
வாழ்க்கை என்பது
வேதனையின்
தொழுவமாக மாறும்போது
நிலவு அறுத்துப் போட்ட
தலைத் துண்டமாக
மேலே துடித்துக் கொண்டிருக்கிறது
ரணங்களின் தேவதை
வலிகளின் அதிபதி
பார்த்துப் பார்த்து ரசிக்கிறாள்
அவள் தரும் வலிகளிலேயே
அதிகமான வலி எது ?
காண முடியாதவர்களை
காணும்போது
பேச வேண்டி நெஞ்சில்
பிறப்பெடுத்த வார்த்தைகளை
பேச முடியாமல்
அக்கணமே அங்கேயே
அவைகளை
அதே நெஞ்சில் கொன்று
புதைத்து விட்டுப் போவது
