
போய் வருகிறோம்
இணையாய் வந்தோம்
சிறு குடும்பமாய்ச் செல்கிறோம்;
இனிமேல் இங்கே
சூரியக் கதிர்கள்தாம்
சுட்டெரிக்கும்;
பலமாய் இடி இடிக்கும்
பருவமழை வாராது
மரங்களெலாம் வ்
பட்டுப் போனபின்
வசிக்க இடமேது?
போய் வருகிறோம்
இங்கிருக்கும் இனிய
மரக்கிளைகளில்தாம்
ஊஞ்சலாடினோம்
ஊடல் கொண்டோம்
உணர்வு கலந்தோம்
எம்வாரிசுகளும்
எழுந்து நின்றுப் பழகவும்
எழிலாகப் பறக்கவும் கற்றார்கள்;
போய் வருகிறோம்
எழிலாக அசையும் மரமே!
எங்கும் நிறைந்துள்ள
எங்கள்செடிகொடிகளே!
பூந்தோட்டங்களே!
பொங்கி வரும் வாவிகளே!
தானியங்களை அள்ளித் தந்து
பசியாற்றிய
பச்சை வயல் அன்னைகளே!
போய் வருகிறோம்;
அழ வேண்டாம்
அடுத்த வசந்தம் வரும்
அவசியம் சந்திப்போம்
